தமிழ் சினிமாவும், தொலைக்காட்சி நாடகங்களும் இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கின்றன. தமிழ்பேசும் ரசிகர்கள் மாத்திரமன்றி, தமிழ்மொழி புரியாத ஏனையோரும் தமிழ் சினிமாவுக்கும், தொலைக்காட்சி நாடகங்களுக்கும் அடிமையாகிப் போயுள்ளனர்.
தொலைக்காட்சியில் நாடகங்கள் ஒளிபரப்பப்படுகின்ற நேரத்தை அடிப்படையாக வைத்தே வீடுகள் பலவற்றில் அன்றாட காரியங்களை வகுத்துக் கொள்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களில் அநேகர் பெண்களாவர்.
அதுமாத்திரமன்றி, தொலைக்காட்சி நாடகங்கள் ஊடாக எமது நாட்டுக்குப் பரிச்சயமில்லாத ஏராளமான புதிய கலாசாரங்களும் நமது மக்களுக்குள் ஊடுருவி விட்டன. வன்முறைக் கலாசாரமும் இதற்குள் அடங்குகின்றது.
மறுபுறத்தில், குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம்விட்டு உரையாடுவது, அவர்களது கருத்துகளுக்குச் செவிமடுப்பது, பயனுள்ள வாசிப்பு, பிள்ளைகளின் கல்வி, குடும்ப அந்நியோன்யம் போன்ற ஏராளமான நல்ல அம்சங்களை தொலைக்காட்சி என்ற மாயை சீரழித்து விட்டதென்ற வேதனை புத்திஜீவிகள் மத்தியில் இல்லாமலில்லை.
சினிமா மோகமும் சாதாரணமானதொன்றல்ல… இந்திய மக்களின் வாழ்க்கைக் கோலம் அந்நாட்டின் சினிமாவுடன் இரண்டறக் கலந்ததென்பது புதிய விடயமல்ல. தமிழகத்தின் முதலமைச்சர்களில் அநேகமானவர்கள் சினிமா ஊடாகவே நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களின் செல்வாக்கைப் பெற்றவர்களென்பது வெளிப்படையான உண்மை. தமிழகத்தின் அயல்மாநிலங்களிலும் இவ்வாறான ‘சினிமா பித்து’ உள்ளதை நாம் காண்கின்றோம்.
சினிமா நடிகர்களைப் போற்றுவது, அவர்களை அரசியல் தலைவர்களாக்குவது, அவர்களுக்குக் கோயில் நிர்மாணித்து வழிபடுவது போன்ற அபத்தமான காரியங்கள் இந்தியாவில் தாராளம். இவையெல்லாம் அறியாமை அல்லது அறிவுப்பக்குவமின்மையின் வெளிப்பாடுகள் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.
இந்திய ‘சினிமாப் பித்து’ என்பது ஒருபுறமிருக்கட்டும்!
அவ்வாறான பிற்போக்குக் கலாசாரமொன்று இலங்கைச் சமூகத்தினுள்ளும் படிப்படியாக ஊடுருவி வருவதை நாம் காண்கின்றோம். சினிமா ஹீரோக்களின் பாணியில் இளைஞர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். தங்களின் ஹீரோவின் திரைப்படம் வெளியிடப்படுகின்ற நாளில் அவரின் உருவத்துக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர், பட்டாசு கொளுத்துகின்றனர், தோரணம் கட்டுகின்றனர்.
அத்துடன் திரையரங்குகளின் முன்பாக மக்கள் வெள்ளம் முண்டியடிக்கின்றது. போதாக்குறைக்கு ஹீரோக்களின் எதிரும்புதிருமான ரசிகர்கள் வடபகுதியில் அடிதடியிலும் இறங்கிய செய்தியொன்றை நாம் கேள்வியுற்றிருந்தோம்.
எமது நாட்டினதும், மக்களினதும் முன்னேற்றத்துக்கு இவ்வாறான ‘சினிமா, தொலைக்காட்சி மோகம்’ ஒருபோதும் உதவப் போவதில்லை. சிறப்பான கலாசாரப் பாரம்பரியத்துக்கு ஏற்பட்டுள்ள தவறான பிறழ்வு என்றே இவற்றைக் கருத முடிகின்றது. அறிவும், உழைப்பும்தான் மக்களுக்குப் பலம் என்பதை இளவயதினர் ஒருபோதுமே மறந்துவிடலாகாது.