இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இராமருக்கு கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22 ஆம் திகதி குடமுழுக்கு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துவருகிறது. 550 ஆண்டுகளுக்குப் பிறகு போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளாதாக இந்து அமைப்பினர் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட இராமர் கோயில் இந்துக்களின் மிகப்பெரிய புனிதத்தலமாக கடைப்பிடிக்க வேண்டும், குடமுழுக்கு அன்று இந்தியாவின் 140 கோடி மக்களின் வீடுகளிலும் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இது எவ்வாறு சாத்தியமாகும் என்று மக்களிடம் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மூன்று மதத்தினரும் வாழும் இந்தியாவில் அவரவருக்கு என்று வழிபாட்டு முறைகள் இருக்கும்போது அனைவரும் விளக்கேற்றவேண்டும் என்பது எவ்வாறு சாத்தியமாகும் என்ற வினாவும் எழுந்துள்ளது. வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழும் இந்திய தேசத்தில் இப்படியான வலியுறுத்தல்கள் குழப்பத்தையும், இனவாதத்தையும் தூண்டிவிடாதா? என்ற அச்சமும் ஏற்படுகிறது
இராமர் கடவுளா? கதாபாத்திரமா? என்ற சர்ச்சைகள் இங்கே இருக்கும் போது 140 கோடி இந்தியர்களும் இராமரை கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமா? அயோத்தியில் இராமர் கோயிலை கட்டியுள்ளது அரசியலுக்கானதா? என்ற வினாவும் அரசியல் நோக்கர்களிடம் எழுந்துள்ளது. உலகில் இஸ்லாமிய நாடு, கிறிஸ்தவ நாடு என்று இருப்பது போல இந்தியா இந்து நாடு என்ற பார்வையில் உலகம் பார்க்க வேண்டும் என்பதற்கான முன்னெடுப்பாகவே இராமர் கோயில் சித்தரிக்கப்படுகிறதா? என்ற நோக்கத்திலும் இதைப் பார்க்கத் தோன்றுகிறது. மத அடிப்படையில் அரசியலை வழிநடத்தப் பார்ப்பது சரியானதா? என்ற வினாவும் பொதுவானவர்களிடம் எழுந்துள்ளது.
இன்னும் ஆறு மாதத்தில் ஒன்றிய அரசுக்கான தேர்தல் வர இருப்பதால் அதற்கான பரப்புரைத் திட்டமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாமா? என்ற வினாவும் எழுவதை மறுக்க முடியாது. இராமர் கோயிலை முன்வைத்து அயோத்தி நகரம் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாறிவருகிறது. அயோத்தியில் உள்ள தொடர்வண்டி நிலையம், விமான நிலையம் எல்லாம் மிகப்பெரிய பொருட்செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதுவரவேற்கக் கூடியது என்றாலும் அரசியல் கண்ணோட்டத்துடன் கொண்டு செல்வதின் உள்நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இராமாயன கதை என்பது அயோத்திலிருந்து இலங்கை வரையில் பரவியிருக்கிறது. இலங்கையில் சீதைக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளது. அது வழிபாட்டுத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் பாவிக்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் பெளத்தம்தானே கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும்போது இராமரை வைத்து இந்தியாவில் இந்துத்துவத்தை தூக்கிப் பிடிப்பது அரசியல் நோக்கம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?.
தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல் பரப்புரையில் இராமர் கோயிலும் ஒன்று.
இதில் புனிதம் என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. இந்தியாவின் தென் பகுதியை விட வட பகுதியில் இது போன்ற இந்துத்துவ கொள்கையை வைத்து ஒட்டுவேட்டை நடத்துவது எளிது. அதற்கான முயற்சியை இந்திய பிரதமர் முதற்கொண்டு முக்கிய அமைச்சர்கள் வரையில் தங்களின் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட போது தனது முதல் பரப்புரையை திருச்சிராப்பள்ளியில் இருந்துதான் தொடங்கினார். அதனால் வெற்றியும் பெற்றார்.
அதேபோல மூன்றாவது முறையும் வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சிராப்பள்ளியில் ஜனவரி 2ஆம் திகதி பன்னாட்டு விமான நிலைய திறப்பு விழாவை தேர்தலுக்கான பரப்புரையாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்பில் அடிக்கடி மேடைகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமையைப் பேசி வருகிறார். மேலும் தான் உலகம் முழுவதும் செல்லும் போது தமிழின், தமிழ்க் கலாசாரத்தின் பெருமையையும் பேசி வருகிறேன் என்றும் பேசியிருக்கிறார்.
தமிழ்மொழி மீதும், தமிழ்க் கலாசாரத்தின் மீதும் பற்றுவைத்துள்ள பிரதமர், தமிழ்மொழி வளர்ச்சிக்காக நிதி வழங்குவதில் கவனம் செலுத்துவது இல்லையே ஏன்? இந்தி தான் தேசிய மொழி. இந்தியாவில் இருந்தால் அவசியம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழர்களிடம் விதண்டாவாதம் செய்பவர்களை எச்சரிக்கை செய்யாமலும் அலுவல்மொழிகளில் இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதும் ஏன்? என்ற வினாவும் தமிழர்களிடம் இருப்பதை பிரதமர் உணரவில்லை என்ற ஆதங்கமும் தமிழ் நாட்டில் இருக்கிறது.
தென்மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்த விட வேண்டும் என்பதன் முயற்சியாகத்தான் காசித் தமிழ்ச் சங்க முன்னெடுப்பும் கலாசார பயணமும். தற்போது அயோத்தியில் வீதிகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கவும் ஏற்பாடு செய்ய இருப்பதாக ஆலோசிக்கப்படுகிறது.
என்ன முன்னெடுப்புகள் செய்தாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைப்பது முடியாத காரியம் ஏனென்றால் இது பெரியார் மண். இங்கே சிந்தனையாளர்களும், சிந்திக்கக் கூடியவர்களும் அதிகம் இருக்கிறார்கள், தற்போது தமிழ்நாட்டில் இராமர் கோயில் குடமுழுக்குக்கான அழைப்பிதழை கட்சி பேதமில்லாமல் வீடுகள் தோறும் வழங்கிவருகிறார்கள்.
இதை தமிழக மக்கள் ஆன்மிகப் பார்வையாக மட்டுமே பார்ப்பார்கள். அரசியலுக்கான பார்வையாக பார்க்க மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்பலாம். எனினும் அயோத்தி இந்தியாவின் அரசியல் களமாக மாறியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.