Home » இஸ்ரேல் – ஹமாஸ் போர் தனித்து விடப்படும் அமெரிக்கா?

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தனித்து விடப்படும் அமெரிக்கா?

by Damith Pushpika
December 31, 2023 6:51 am 0 comment

இஸ்ரேல், தங்கள் நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகப் பெரிய உளவுத்துறை மற்றும் செயல்பாட்டுத் தோல்வியின் பேரழிவு விளைவுகளில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் உள்ளது. புத்திசாலித்தனமான வேலிகள் மற்றும் வெளிநாட்டுப் பணத்தின் தாராளப் பாய்ச்சல் ஆகியவை அரபு உலகின் எதிர்ப்பிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும் என்ற நீண்டகால அனுமானம் சமகால இஸ்ரேல், -ஹமாஸ் போரில் அவிழ்க்கப்படுகிறது. தெற்கு இஸ்ரேலின் மீது அக்டோபர் -7ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல், மூன்று மாதங்களை கடந்தும் நீடிக்கின்றமை, இஸ்ரேலின் பலவீனத்தை பிரசாரப்படுத்த வாய்ப்பாக அமைகின்றது. மேலும், கடந்த வாரம் இப்பகுதியில் குறிப்பிட்டதை போன்று அரபு நாடுகளில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களின் ஆதரவு ஹமாஸுக்கு அதிகரிக்கப்படுகின்றது. எனினும் சமாந்தரமாக இஸ்ரேலுக்கு சர்வதேச ஆதரவின் வீச்சு குறைவடைந்து செல்லும் போக்கினை சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்கா இஸ்ரேலுக்கு அதியுச்ச ஆதரவை வழங்கும் அதேவேளை அமெரிக்க கூட்டு நாடுகள் பின்வாங்கும் போக்கினை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை இஸ்ரேல், -ஹமாஸ் போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் போக்கினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் ஆரம்ப தாக்குதலுக்குப் பின் உடனடியாக, இஸ்ரேலிய அரசாங்கம் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் அவசர அணிதிரட்டலை அறிவித்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலியர்கள் விரும்பாத போரை முடிக்க உறுதியளித்தார். காஸாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு ‘இரும்பு வாள் நடவடிக்கை’ என இஸ்ரேலிய அரசாங்கம் ஆரம்பத்தில் பெயரிட்டது. இப்போது அதன் மூன்று மாத காலத்தை நெருங்கித் தொடர்கிறது. நவம்பர் பிற்பகுதியில் ஒரு குறுகிய இடைவெளி உருவாக்கப்பட்ட போதிலும், அது நிலையான சமாதானத்திற்கான வாயப்புகளை உருவாக்கியிருக்கவில்லை. குறுகிய போர் நிறுத்த காலப்பகுதியினை இரு தரப்பும் கையாண்ட முறை தொடர்பில் கடந்த காலங்களில் இப்பகுதியில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேலிய பிரதமர் தொடர்ச்சியாக தேசியவாத பிரசாரங்களை முன்னிறுத்துகின்ற போதிலும், காசா மீதான போரை முடிப்பதற்கான இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் கால அட்டவணையும் மோசமானதாகவே உள்ளது.

அக்டோபர்- 7 காசாவுக்குள் சுருக்கப்பட்டிருந்த போர், அரபு நாடுகளில் இயங்கும் கிளர்ச்சி குழுக்களின் ஈடுபாட்டுடன் மேற்காசிய பிராந்தியத்தை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வார கட்டுரையில் குறிப்பிட்டதை போன்று ஹவுதிகளின் செங்கடல் மீதான தாக்குதல் கடற்பிராந்திய போராக நகர்ந்துள்ளது. மறுதளத்தில், அமெரிக்காவின் உறுதியான ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் அதன் போர் நோக்கங்களைத் தொடர்வதற்கு மிகவும் தடையாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்காவின் வலுவான ஆதரவு இஸ்ரேலை பாதுகாப்பதாக அமைந்தாலும், ஒற்றுைமைய உலக ஒழுங்கில் அமெரிக்காவின் போர் என்பது அமெரிக்கா தலைமையிலான கூட்டாகவே அமைந்துள்ளது. எனினும் இஸ்ரேல், -காசா போரில் அமெரிக்காவின் கூட்டு நடவடிக்கைகள் பலவீனப்படும் தன்மையை சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகின்றது.

முதலாவது, செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுடன் தொடர்புறும் கப்பல் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு புதிய கடல் படையைத் தொடங்குவதன் மூலம் ஒரு உறுதியான சர்வதேச பதிலை முன்வைக்க முடியுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நம்பினார். குறித்த கடற்பாதுகாப்பு இராணுவ நடவடிக்கை ‘செழுமை காப்பாளர் நடவடிக்கை’ எனப் பெயரிடப்பட்டது. ஆனால் அது தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் பல கூட்டாளி நாடுகளும் அதனுடன் பொதுவில் அல்லது எல்லாவற்றிலும் தொடர்பு கொள்ள விரும்பவில்லை. குறித்த நடவடிக்கையில் பங்களிப்பாளர்களாக பட்டியலிடப்பட்ட அமெரிக்காவின் இரண்டு ஐரோப்பிய கூட்டாளிகளான இத்தாலி மற்றும் ஸ்பெயின் கடல் படையில் இருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்வது போல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. யேமனுக்கு அப்பால் உள்ள செங்கடல் கடற்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான கப்பல் பாதை வழியாக பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள வர்த்தகம் சுதந்திரமாகப் பாய்வதை உறுதிசெய்வதற்காக, 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தற்காப்புக் கூட்டணி இது என்று பென்டகன் கூறுகிறது. ஆனால் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் ஏறக்குறைய பாதி நாடுகள் இதுவரை தங்கள் பங்களிப்பை ஒப்புக்கொள்ள முன்வரவில்லை அல்லது அமெரிக்காவை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை.

இரண்டாவது, ஐ.நா அரங்கிலும் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை பாதுகாப்பு சபையில் அமெரிக்கா வீட்டோவினை பயன்படுத்தி பாதுகாத்து வரும்நிலையில், பொதுச் சபையில் இஸ்ரேல் சர்வதேச ஆதரவினை இழந்து வருகின்றமை தொடர்ச்சியாக உறுதி செய்யப்படுகின்றது. காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரி, கிட்டத்தட்ட மற்ற அனைத்து பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிற நாடுகளின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு சபை தீர்மானத்தை டிசம்பர்- 8 அன்று அமெரிக்கா வீட்டோ செய்தது. எனினும், 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபை இதேபோன்ற தீர்மானத்தை டிசம்பர்- 12 அன்று 153:10 என்ற வாக்குகள் மூலம் 23 பேர் வாக்களிக்காமல் ஒப்புதல் அளித்தது. குறிப்பாக அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு கூட்டுக்களில் இயங்கும் பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகமே இத்தீர்மானத்தை முன்மொழிந்திருந்தன. முன்னரும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் ஐ.நா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட ‘ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டிக்கும்’ தீர்மானம் 145 வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது. பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா, மற்றும் இங்கிலாந்து உட்பட 145 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. ஐ.நா அரங்கில் பாதுகாப்பு சபை தீர்மானங்கள் முக்கியமானவை. ஏனெனில் அவை சட்டபூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் பல கட்சிகள் சபையின் நடவடிக்கைக்கான கோரிக்கைகளை புறக்கணிக்க வீட்டோவை தேர்வு செய்கின்றன. பொதுச் சபைத் தீர்மானங்கள் சட்டபூர்வமாக பிணைக்கப்படுவதில்லை. இருப்பினும் அவை உலகக் கருத்தின் குறிப்பிடத்தக்க காற்றழுத்தமானியாக அமைகின்றது.

மூன்றாவது, அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டு நாடுகளின் மக்கள் பெருமளவில் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளில் தமது நாடுகளின் ஈடுபாட்டை விரும்பவில்லை. மக்களின் எண்ணங்களின் பின்னுந்துதல்களாலேயே ஆட்சியாளர்களும் இஸ்ரேல், -ஹமாஸ் போரில் அமெரிக்க தீர்மானங்களை ஆதரிக்காமல் பின்வாங்கும் நிலை காணப்படுகின்றது. ஐ.நா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானத்திற்கு, பாதுகாப்பு சபையில் இராஜதந்திரிகள் அமெரிக்க ஆதரவைப் பெறுவதற்கான தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதால் அது பல முறை நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகள் உட்பட ஏனைய உறுப்பினர்கள் அமெரிக்கா மீது விரக்தியடைந்து, பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் எண்ணங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள சில அமெரிக்க நட்பு நாடுகள் தயக்கம் காட்டுவது, காசாவில் ஏற்பட்ட மோதலால் உருவாக்கப்பட்ட பிளவுகளையே ஓரளவு பிரதிபலிக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு சர்வதேச விமர்சனங்கள் எழுந்துள்ளன. “ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் சாத்தியமான வாக்காளர்களில் ஒரு பகுதியினர் தங்களுக்கு எதிராக திரும்புவர் என மிகவும் கவலைப்படுகிறார்கள்” என்று மாட்ரிட்டின் கம்ப்ளூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவு பேராசிரியரான டேவிட் ஹெர்னாண்டஸ் கூறினார். ஐரோப்பிய பொதுமக்கள் இஸ்ரேலை அதிகளவில் விமர்சிக்கிறார்கள் மற்றும் மோதலுக்குள் தாங்களும் இழுக்கப்படுவதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ரஷ்ய, உக்ரைன் போரில் ஐரோப்பிய ஈடுபாட்டின் சுமையை ஐரோப்பிய மக்கள் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நான்காவது, இஸ்ரேலின் தாக்குதலுக்கு சர்வதேச விமர்சனங்கள் எழுதாலும் பைடன் உறுதியான ஆதரவைப் பேணுவதையே வெளிப்படுத்தி வருகின்றார். பைடன் நிர்வாகம் சமீபத்தில் காஸாவில் பொதுமக்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இது சர்வதேச கண்டனங்களுக்கான கூற்றாக மாத்திரமே அமைந்திருந்து. எனினும் அமெரிக்க காங்கிரஸ், அமெரிக்க ஆட்சியாளர்களின் அமெரிக்க தேசபக்தி மற்றும் யூத தேசியவாதத்தின் பற்றினை எடைபோடுமளவிற்கு அமெரிக்க இஸ்ரேலுக்கான ஆதரவை முதன்மைப்படுத்தியுள்ளது. டிசம்பர்- 5 அன்று, அமெரிக்க பிரதிநிதிகள் சபை 311:14 என்ற அடிப்படையில், குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் ‘சியோனிச எதிர்ப்பு என்பது யூத விரோதம்’ என அறிவித்துள்ளது. இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த கென்டக்கியின் குடியரசுக் கட்சியின் பிரதிநிதி தோமஸ் மஸ்ஸி, “அமெரிக்க தேசபக்தியை விட சியோனிசத்தில் காங்கிரஸ் அதிக அக்கறை கொண்டுள்ளது” என விமர்சித்திருந்தார்.

தோமஸ் மஸ்ஸியின் விமர்சனத்தை வெள்ளை மாளிகை கண்டித்தது. சியோனிசத்தின் மீதான அமெரிக்காவின் நீடித்த அனுதாபத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அக்டோபர்- 18 அன்று டெல் அவிவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன்னை ஒரு சியோனிஸ்ட் என்று கூச்சமின்றி அழைத்தார். அதேவேளை டிசம்பர்- 3 அன்று அமெரிக்காவின் கடுமையான சியோனிச அமைப்பு நடத்திய விருந்தில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜோன்சன், தனது சியோனிச நிலைப்பாட்டைப் பறைசாற்றினார்.

எனவே, அமெரிக்கா கடந்த காலங்களில் கையாண்டுவரும் போர் இராஜதந்திரத்தில் பலவீனங்களை இஸ்ரேல், -ஹமாஸ் போரில் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. ஒற்றுமைய உலக ஒழுங்கில் அமெரிக்கா போரினூடாகவே தனது வல்லாதிக்கத்தை கட்டமைத்திருந்தது. அதிலும் போர்களை தனது ஐரோப்பிய கூட்டுக்களின் ஒத்துழைப்புடனேயே வடிவமைத்திருந்தது. அமெரிக்காவின் வல்லாதிக்கத்துக்குப் பின்னால் ஐரோப்பா கூட்டு பலமான ஆதரவுத்தளமாகும். எனினும் சமீப காலமாக பல முனைகளில் அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்ப கூட்டுகளுக்கும் இடையிலேயே முரண்பாடுகளை அவதானிக்கக்கூடியதாக அமைந்தது. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே விரிசல் அடையாளம் காணப்பட்டது.

எனினும் பைடனின் முதற் வெளிநாட்டு பயணம் ஐரோப்பாவை மையப்படுத்தி திட்டமிடப்பட்டு ஐரோப்பிய உறவு புனரமைக்கப்பட்டது. இருப்பினும் சமகால உலக ஒழுங்கில் ஆதிக்கம் செலுத்தும் மென்வலு அரசியல் உந்துதலில், ஐரோப்பிய மக்களிடைேய வலுப்பெறும் அமெரிக்காவின் போர் இராஜதந்திரத்தின் பயனற்ற அழிவை ஐரோப்பா சுமக்கத் தயாரில்லையெனும் வாதம், இஸ்ரேல், -ஹமாஸ் போரில் அமெரிக்கா தனித்து விடப்படுவதன் மூலம் உறுதிசெய்யப்படுகின்றது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division