நாட்டைப் பொருளாதார சவாலில் இருந்து மீட்டு, சரியான பாதைக்குக் கொண்டு செல்வதற்கு அனைத்துத் தரப்பினரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அடுத்தவருடம் நடைபெறக் கூடிய தேர்தலுக்கான தயார்படுத்தல்கள் தொடர்பாக எம்முடன் அவர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கே: சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிவசதியை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட கடினமான பயணம் பற்றி விளக்க முடியுமா?
பதில்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வங்குரோத்து நிலையை அடைந்த நாடொன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். கிராமத்து மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்வதென்றால், ‘சிறுதொழிலுக்குப் பயன்படுத்திய வங்கிக் கடனைச் செலுத்த முடியாமல் தொழிலதிபர் ஒருவர் கடனில் மூழ்கிவிடுகின்றார். அந்த சூழ்நிலையின் அடிப்படையில் அவருக்கு மீண்டும் எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது. குறைந்த பட்சம் கடனாளியாவது கடன் கொடுக்க மாட்டார்’. இதுபோன்றதொரு நிலைமையே எமது நாட்டுக்கும் ஏற்பட்டது.
ஒரு நாடு உலகின் முன்பாக, தான் பெற்ற கடன்களை மீளச்செலுத்த முடியாத தேசமாக மாறும் போது, அந்த நாடு கருத்தில் கொள்ளத் தகுதியற்றது. அதனால்தான் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்த நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர், எமது இளைஞர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய போது எமது கடவுச்சீட்டுகளும் வங்குரோத்து நிலையை அடைந்த அரசாங்கத்தின் கடவுச்சீட்டுக்களாக மாறின. ஆனால் இன்றைய நிைலவரப்படி மீண்டும் நாம் வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டைப் பெற்றுள்ளோம்.
உலக நாடுகள் வங்குரோத்து நிலையை அடைந்த பின்னர் 6 முதல் 8 ஆண்டுகளுக்குப் பிறகும் மீள்வது கடினம். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன் கடமையை குறுகிய காலத்தில், ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றி நாட்டை சரியான பாதைக்குக் கொண்டுவந்துள்ளார். கடன் ஒப்புதல் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், 2021, 2022, 2023 உலக உதவியின் கீழ் நிறுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களுக்கான நிதிகளும் தற்பொழுது படிப்படியாக வழங்கப்படுவதால் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது.
கே: நாடு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வேறு வழியில்லை என்கிறீர்கள். இதே பாதையில் நாம் தொடர வேண்டுமா?
பதில்: எதிர்காலத்தில் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். நமது பொருளாதாரம் மீண்டும் வலுப்பெற வேண்டும். இதன் மூலம் மின்கட்டணம் குறைக்கப்பட்டு, பொருட்களின் விலைகள் மட்டுமன்றி, மக்களைப் பாதித்துள்ள வங்கி வட்டி வீதங்களையும் குறைத்து முன்னேற வேண்டும். ஆனால் இந்நிலை சீர்குலைந்தால் நாட்டை மீட்டெடுக்க முடியாது. கடினமானதாக இருந்தாலும் வேறு வழியின்றி நாம் இந்தப் பாதையில் சற்றுத் தூரம் பயணித்துத்தான் ஆக வேண்டும். சொந்த அரசியல் இயக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தேசிய வேலைத்திட்டத்திற்கு அனைவரும் உடன்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் வேண்டுகோள் ஆகும். ஒரு நாடு உலகில் முதல் இடத்தைப் பெறுவதற்கு மக்கள் தொகையோ, நாட்டின் அளவுகளோ பொருந்தாது. புதிய தொழில்நுட்பத்தை இணைத்துக்கொண்டு முன்னேறுவதுதான் பொருத்தமானது. இந்தப் பயணத்தில், சிறிய நாடுகள் பொருளாதார ரீதியாகப் பலம் பெறுகின்றன. உலக வல்லரசாக மாற இந்தப் பயணத்தை நாம் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
கே: பாராளுமன்றத்தில் வரவுசெலவு அலுவலகம் அமைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றிக் கூற முடியுமா ?
பதில்: அரசியலமைப்பின் 27, 28 மற்றும் 29 ஆகிய பிரிவுகள் வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதைக் கூறுகின்றன. அதில் 29 ஆவது பிரிவு மேற்கூறிய விடயங்கள் நிறைவேற்றப்பட்டாலும் இல்லாவிட்டாலும் எந்த நீதிமன்றமும் செயல்படுத்த முடியாது என்று கூறுகிறது. எந்த நீதிமன்றமும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது. இது ஜனநாயகத்தை பாதுகாக்கப் பயன்படும் சரத்து. இந்திய அரசியலமைப்பின்படி, பிரிவு 37 இதையே குறிப்பிடுகிறது. ஜப்பானின் அரசியலமைப்பிலும் இதுவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலை தற்போதைய தலைமையைப் பலப்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அலுவலகம் உள்ளது. வரவுசெலவுத்திட்ட அலுவலகம் பொருளாதார நிபுணர்களை நியமிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு நிதிக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். இந்த நிதிக் கட்டுப்பாட்டின் தோல்வியால் ஒரு நாடு வங்குரோத்து நிலையை அடையும்.
கே: நமது அரசியலமைப்புச் சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்த வேண்டும் என்கிறீர்கள். அப்படியாயின் அந்த மாற்றம் எவ்வாறானதாக இருக்க வேண்டும்?
பதில்: கொவிட் தொற்றுநோய் நெருக்கடி காரணமாக உலகின் பல நாடுகளில் 2022, 2023 ஆம் ஆண்டுகளில் மக்கள் ஆணைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. நமது நாட்டின் அரசியலமைப்பில் 100 திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இதை உலகிற்கு எடுத்துச் செல்ல சுமார் 500 முறை மாற்ற வேண்டும். 2023- இற்குள், நமக்கு நெருக்கமான இந்திய அரசியலமைப்பு 116 முறை திருத்தப்பட்டது. ஆனால் நமது அரசியல் சாசனம் 18 முறை திருத்தப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். நிச்சயமாக, அந்தத் தொகை போதாது. உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நமது அரசியலமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்பட வேண்டும். அரசியலமைப்பு ஒரு மாற்றமுடியாத ஆவணம் அல்ல. இது உலகத்துடன் போட்டியிடும் வகையில் மாற்றப்பட வேண்டும்.
கே: தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு இன்னும் விடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தும்போது, இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு தலைமை இல்லை என்று கூறுகிறீர்களா?
பதில்: ஜனாதிபதிக்கு சிறப்புத் தகுதிகள் உள்ளன. அவரிடம் உள்ள அறிவும் அனுபவமும் உலகில் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லை. இவர் 60 ஆண்டுகளாக அரசியல்வாதியாக இருந்து வருகிறார். 60 ஆண்டுகளாக தொழில் ரீதியாக பொருளாதார நிபுணராகவும் இருந்துள்ளார். நாடு பாதிக்கப்பட்ட நேரத்தில் அந்நாட்டை மீட்டெடுத்த இவ்வாறான தேசிய தலைமையை மக்கள் நல்ல ஜனாதிபதி என அழைக்கின்றனர். அந்தத் தகுதி வாய்ந்த ஜனாதிபதியின் காரணமாக, இலங்கை மக்கள் பிச்சை எடுப்பதை நிறுத்தினர். அன்று ஒரு எண்ணெய் பவுசர் பெட்ரோல் நிலையத்துக்கு வந்தபோது, அவர்கள் கைதட்டினர். ஒரு சமையல் எரிவாயு லொறியைக் கண்டதும் அதன் பின்னால் ஓடினர். உணவைப் பார்த்ததும் கைதட்டினர். இன்று வாங்குவதற்கு பொருட்கள் உள்ளன. ஆனால் அதற்கான செலவு அதிகமாகத்தான் இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்ற தேசியத் தலைமைக்கு மற்றையோர் இடையூறு செய்யாவிட்டால் நாடு முன்னேற்றமடையும் என்று நான் கூறுகிறேன். 50 இலட்சம் சுற்றுலா வணிகம் கிடைத்தால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் அவர். ஆனால் சிலர் இவற்றைச் சொல்லும்போது அவமானப்படுத்துகிறார்கள். நாம் கடன் வழங்கும் நாடாக மாறலாம். கடனை அடைத்துவிட்டு வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறலாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் 12 வருடங்களுக்கு ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டை வழிநடத்துவோம். அப்போதுதான் அவரால் இலங்கையை ஆசியாவில் பலம் வாய்ந்த நாடாக மாற்ற முடியும்.
கே: அடுத்த வருடம் தேர்தல் வருடம். இதற்கான தயார்படுத்தல்கள் எப்படி இருக்கின்றன?
பதில்: ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு நாட்டை உருவாக்க முடியாதவர்கள் இதற்கு முன்வருவதை நான் தவறாகவே பார்க்கிறேன். எதிர்வரும் 2024 இல் நம் அனைவருக்கும் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் தேசியத் தலைமை ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு 35 வருடங்களாக அந்நிய சக்திகள் அனுமதிக்கவில்லை. இந்த நாட்டின் ஆட்சியாளர் பலமான ஆட்சியாளராக மாறினால் அது சர்வதேசத்திற்கு இடையூறாக அமையும். ரணில் விக்கிரமசிங்கவை 35 வருடங்களாக இந்தக் கதிரைக்கு வரவிடாமல் அந்நிய சக்திகள் தடுத்தன. நாம் அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு அரசியல் சக்திக்கும் இந்த நேரத்தில் தேசிய ஒருமித்த கருத்து தேவை. அதை அலட்சியப்படுத்தினால், நம் குழந்தைகள் உலகின் முன் பிச்சைக்காரர்களாக மாறிவிடுவார்கள். ஏழையின் நண்பன் ஏழை அல்ல. ஏழையின் நண்பன் கற்றவன். ரணில் விக்கிரமசிங்கவின் தேசியத் தலைமையானது 2024 ஆம் ஆண்டில் வலுவான எதிர்காலத்தை உருவாக்குவது தவிர்க்க முடியாதது.
கே : உங்கள் கருத்துப்படி, 2024 ஆம் வருடம் ஒரு மாற்றமான ஆண்டாக இருக்குமா?
பதில்: 2024 பற்றி எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. 2024ஆம் ஆண்டில் முன்னேறுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை. அரசியல் வேறுபாடுகளை வைத்துக்கொண்டு தேசிய உடன்படிக்கைக்கு செல்ல வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. உண்மையை ஏற்காததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தோற்றாலும் உண்மையைச் சொன்னோம். நாங்கள் சொன்னதை மக்கள் ஏற்கவில்லை. தவறை மீண்டும் செய்து எங்களை குற்றம் சாட்டாதீர்கள்.