நல்லதை சொல்கிறோம்
2023 இலிருந்து 2024க்கு!
2023ஆம் ஆண்டின் இறுதி நாளில் இருக்கின்றோம். இன்பம், துன்பம், சோதனை, வேதனை, சோகம், மகிழ்ச்சி என பல்வேறுபட்ட கலவையான உணர்வுகளை தந்து விட்டு 2023 ஆம் ஆண்டு எம்மை விட்டும் பிரியாவிடை பெறுகிறது. ஒரு வருடம் முடிந்து மறு வருடம் பிறக்கின்ற வேளையில், எல்லோர் மனதிலும் எதோ ஒரு வகையிலான குதூகலம், புதிய உத்வேகம், புதிய உற்சாகம், புதிய நம்பிக்கை எனத் தோன்றுவது வழக்கம்.
202 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தனித்துவமாக ஆரம்பிக்கின்றது. க.பொ.த. உயர்தர பரீட்சை வருடத்தின் முதல் வாரத்திலேயே இடம் பெறுகிறது. இதனால் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாரிய பொறுப்புடனும், பெரிய எதிர்பார்புகளுடனும் வருடம் தொடங்கும் போதே பரீட்சை எழுதுகின்றனர். அதே வேளை ஏனைய மாணவர்கள் பாடசாலை விடுமுறையை மகிழ்வோடு அனுபவிக்கின்றனர்.
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் ‘வெட்’ (VAT) வரி 15% லிருந்து 18%மாக அதிகரிக்கப்பட்டிருப்பதாலும், 90க்கும் மேற்பட்ட புதிய பொருட்களுக்கு புதிதாக (VAT) வரி விதிக்கப்பட்டிருப்பதாலும் பொருட்களின் விலைகள் எந்த அளவு அதிகரிக்கும் என்ற அச்சத்தோடும், இதனால் ஏற்படப் போகின்ற பொருளாதார பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்ற கலவரத்துடனும் பெரும்பான்மையானோர் புது வருடத்தை ஒருவித அச்சத்தோடு எதிர்நோக்குகின்றனர்.
இலங்கையில் 2024ஆம் ஆண்டு, ‘தேர்தல் ஆண்டு’ என கருதப்படுவதால் அரசியல் களமும் சூடு பிடிக்கும் காலமாக இவ்வருடம் ஆரம்பிக்கின்றது. தேர்தலில் போட்டியிடுதல், கட்சிகளை புனரமைத்தல், ஏனைய கட்சிகளுடன் கூட்டணிகளை அமைத்தல், நடைபெறப் போகும் ஒவ்வொரு தேர்தலுக்கும் பொருத்தமான வேட்பாளர்களை தெரிவு செய்தல், தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைத்து செயல்படுதல் போன்ற பல்வேறு விடயங்களில் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் பரபரப்பாக இயங்க வேண்டிய வருடமாக இவ்வருடம் பிறக்கிறது.
இவ்வாறு பல்வேறு தரப்பினருக்கும் வெவ்வேறுபட்ட விதங்களில் புது வருடப் பிறப்பு அமைந்திருந்தாலும் அவர்கள் அனைவரும் தாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இத்தகைய நிலைமைகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாய நிலையாகும். இதுவே இயற்கையின் நியதியுமாகும்.
எனவே, இவற்றை எதிர்மறை சிந்தனைகளோடு எதிர்நோக்காமல், நேரிய நற் சிந்தனையோடு, நல்ல எதிர்பார்ப்புகளோடு புதுவருடத்தை சந்திக்கத் தயாராவதே புத்திசாலித்தனமாகும். எத்தகைய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், பிரச்சினைகள், சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை உள உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றிவாகை சூடும் நல்லெண்ணம் எல்லோரிடத்திலும் ஏற்படுவது, எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கவும் நற்பலன்களை பெறவும் வழிவகுக்கும்.
இவற்றைக் கருத்திற் கொண்டு, ‘நல்லதையே நினைத்து, நல்லதையே செய்தால் நன்மையே விளையும் என்ற நம்பிக்கையோடு சிந்தித்து செயலாற்ற வேண்டும். நல்ல விதையை நல்ல நிலத்தில் விதைத்தால் நல்ல அறுவடையே கிடைக்கும்’ என்பதை நம்பி செயல்பட வேண்டும்.
பிறக்கின்ற புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் நன்மைகளைத் தாராளமாக தந்து வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தோட, எல்லாம் வல்லோனை பிராத்திக்கின்றோம்!.
அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
***
புது வரவு
ஐம்பது எழுத்து ஆளுமைகள்
பொன்விழா கண்ட இலக்கிய ஆளுமை, பன்னூலாசிரியர், கவிஞர் பாலமுனை பாறூக், தமிழ் உலகுக்கு தந்திருக்கும் தனித்துவமான ஒரு பொக்கிஷம் “ஐம்பது எழுத்து ஆளுமைகள்” நூல். எழுத்து உலகில் பொன்விழாவைத் தாண்டி, சிகரம் தொட்ட அரை நூறு எழுத்து உலக ஆளுமைகளை பலரும் அறியும் வகையில், எல்லோரும் பாராட்டும் வகையில் ஆவணப் படுத்தியிருக்கிறார்.
“ஐம்பது வருட இலக்கிய வாழ்வுக்கு வெளிச்சம் வைத்த கவிதைப் பயணத்தோடு இன்று எம் கைகளில் தவழும் கட்டுரை நூல் ஐம்பது மூத்த இலக்கிய ஆளுமைகளைத் தேடி அடையாளம் கண்டு இளைய தலைமுறையிடம் சேர்க்கும் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.” என்று இந்நூலைப் பற்றி சிலாகிக்கின்றார் வரலாற்று ஆய்வாளர் மாத்தளை ஜெஸீமா ஹமீட்.
இன்னும் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சிலர் இந்நூலில் இடம்பெறவில்லையே என ஆதங்கப்பட்டாலும், “தவிர்க்க முடியாத காரணங்களினால் முக்கியமான சிலர் விடுபட்டுள்ளனர் இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்களையும் எழுதிவிட வேண்டும் என்ற விருப்பமே நெஞ்சில் நிறைந்திருக்கின்றது” என்ற நூலாசிரியரின் விளக்கம் ஆறுதல் அளிப்பதோடு, இதன் இரண்டாம் பாகம் விரைவாக வெளிவர வேண்டும் என்று பிரார்த்திக்கவும் தூண்டுகிறது.
இலங்கையில் எழுத்துலக, இலக்கிய, கலைத்துறை ஆளுமைகள் பற்றி ஏற்கனவே வெளிவந்துள்ள சுமார் இருபது நூல்களின் விபரங்களை, நூலாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, இத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், துணையாகவும் இருக்குமென்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அத்துடன் இலங்கையின் முன்னோடி ஐம்பது எழுத்து ஆளுமைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவற்றை ஒரே நூலாக பாதுகாக்கவும் ஒவ்வொரு வாசகருக்கும் இந்நூல் வாய்ப்பளிக்கிறது.
நூல்:- ஐம்பது எழுத்து ஆளுமைகள், ஆசிரியர்:- பாலமுனை பாறூக், பதிப்பு:- அக்டோபர் 2023, பக்கங்கள்:- XIV + 166, விலை:- 1650/=, வெளியீடு:- பர்ஹாத் பதிப்பகம், தொடர்புகளுக்கு:- 0775367712
***
சிந்தனை செய் மனமே
கேட்காத காது!
அந்த மனைவிக்கு ‘தன் கணவனுக்கு காது கேட்கவில்லையோ!’ என்று திடீரென சந்தேகம் வந்தது. ஆனால் அதை கணவனிடம் நேரடியாக கேட்க அவளுக்கு தயக்கமாக இருந்தது. இந்த விடயத்தை தெளிவாக விளக்கி தனது உறவுக்கார டாக்டருக்கு ஒரு கடிதம் எழுதினாள்.
டாக்டரிடம் இருந்து பின்வருமாறு பதில் வந்தது.
“இருபது அடி தூரத்தில் இருந்து உங்கள் கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள். கணவரின் காதில் அது விழவில்லை என்றால் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள். பின் பத்தடி, ஐந்தடி என்று குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள். எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்”
அதைப் படித்ததும் மனைவிக்கு ஒரே சந்தோசம். அடுத்த நாள் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம், “இன்று மகனுக்கு பாடசாலைக் கட்டணம் கட்டியாச்சா” என்று கேட்டாள். பதில் எதுவும் இல்லை.
பின்னர் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை, ஹாலில் இருந்து கேட்டாள், சமையலறை வாசலில் இருந்தும், மீண்டும் மீண்டும் அருகே வந்தும் அதே கேள்வியைக் கேட்டாள்.
கணவரிடமிருந்து பதிலே இல்லை. ‘போச்சு! இரண்டு ஸ்பீக்கர்களும் அவுட் ஆகிவிட்டது போல’ என்று மனதில் உறுதி செய்து விட்டு கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்று மிகச் சத்தமாக, “இன்னைக்கு பையனுக்கு பீஸ் கட்டியாச்சா?” என்று கேட்டாள்.
காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருந்தது கணவனுக்கு! கணவன் அவளைக் கோபமாக திரும்பிப் பார்த்து, ”ஏன் டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து, வரவேற்பறையிலிருந்து, ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து நீ இதே கேள்வியைக் கேட்க, கேட்க நானும் கட்டியாச்சு, கட்டியாச்சுனு பதில் சொல்லிக்கிட்டே இருக்கேன், அது உன் காதுல விழலியா? காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க…?” எனப் பொரிந்துத் தள்ளிவிட்டான்
மனைவி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். தவறு தன்னிடம் தான் இருக்கிறது என உணர்ந்து திகைத்து நின்றாள்.
இப்படித்தான் பலர் பிரச்சினையைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
***
பாடம் தரும் பாடல்
மனம் ஒரு குரங்கு
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது
வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்
கலையின் பெயராலே காம வலை வீசும்
காசு வருமென்றால் மானம் விலை பேசும்
நிலையில் நிற்காமல் கிளை தோறும் தாவும்
நிம்மதியில்லாமல் அலை போல மோதும்
இயற்றியவர்: வீ. சீதாராமன்
***
தகவல் களஞ்சியம்
இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி!
உலகில் சனத்தொகை அதிகரித்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது. ஆனால் ‘இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைந்துள்ளது’ என்ற அதிர்ச்சியான தகவல் சுகாதார அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தரவு அறிக்கையின்படி, வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவது பற்றி இத்தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2014ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது.
அதன்படி, இவ்வருடம் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரையான கடந்த ஒரு வருடத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 268,920 ஆக குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை 275,321 என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில், பிறப்புகளின் எண்ணிக்கை 284,848 ஆகவும், 2020 இல் 03 லட்சத்திற்கும் அதிகமான பிறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிறப்பு பதிவு 6,401 ஆல் குறைந்துள்ளதுடன், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41,786 பிறப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார கஷ்டங்கள், சமூகப் பிரச்சினைகள், பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, கணவன், மனைவி இருவரும் தொழில் செய்தல், உலகளாவிய ரீதியில் பரவிய தொற்று நோய்கள் போன்ற பல காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது குறைந்துள்ளதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்பத்தியில் இடம்பெறும் அம்சங்களின் நோக்கை, போக்கை, அமைப்பை, அளவை, அழகை பின்பற்றி எவரும் எழுதலாம். “படித்ததும் பகர்வதும்” பகுதியுடன் தொடர்பு கொள்ள, மின்னஞ்சல் (email): [email protected], வாட்ஸ்எப் (WhatsApp): 0777314207