மேற்காசிய அரசியலின் கொதிநிலை தினசரி அதிகரித்து கொண்டு செல்வதாகவே அமைகின்றது. எண்ணெய் வளத்தை மையப்படுத்தி சர்வதேச அரசியலில் முக்கிய களமாக உள்ள மேற்காசியாவின் கொதிநிலை போர்களாலும் அதன் அழிவுகளாலேயுமே கட்டமைக்கப்படுகின்றது. மேற்காசிய அரசியலில் அரசுக்கு சமாந்தரமாகவே கிளர்ச்சிக் குழுக்களும் பிராந்தியத்தில் நிரவிக் காணப்படுகின்றது. இந்நிலையிலேயே இஸ்ரேல், -ஹமாஸ் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக மேற்கு ஆசியாவில் காணப்படும் கிளர்ச்சிக்குழுக்களின் ஈடுபாடு தொடர்பில் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எச்சரிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்கள். கிளர்ச்சிக் குழுக்களின் ஈடுபாடு போரின் பரிமாணத்தை அதிகரிப்பதிலும் போரின் வடிவத்தை மாற்றுவதிலும் உயரளவில் செல்வாக்கு செலுத்தக்கூடியதாகும். யெமனில் இயங்கும் ஹவுதிகள் தற்போது மேற்காசிய யுத்தத்தில் புதியதொரு வடிவத்தை உருவாக்கத் தொடங்கி உள்ளனர். ஹவுதிகள் சர்வதேச நாடுகளின் பிரதான வர்த்தக தடமான செங்கடலை மையப்படுத்தி மேற்காசிய யுத்தத்தை நகர்த்தியுள்ளனர். இது சர்வதேச அரசியல் பொருளாதாரத்தினை நொதிப்படைய செய்துள்ளது. இக்கட்டுரை இஸ்ரேல், -ஹமாஸ் போரில் ஹவுதிகளின் ஈடுபாடு ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
நவம்பர்-19 அன்று இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியபோது, கப்பல் போக்குவரத்து ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் நுழைந்துள்ளது என்பது தெளிவாகியது. எனினும் இஸ்ரேலினை இலக்கு வைத்து ஹவுதிகள் தாக்குதலை முடுக்கிய போதிலும், சர்வதேச வர்த்தகத்தில் பெரிய தாக்குதலை தொடர்ந்திருக்கவில்லை. டிசம்பர்-09 அன்று ஹவுதி செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையும், அதன் பின்னரான செங்கடல் மீதான ஹவுதிகளின் தாக்குதல்களும் சர்வதேச வர்த்தகத்திற்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. டிசம்பர்- 09 அன்று ஹவுதி செய்தித் தொடர்பாளரின் அறிக்கையில், “காசாவுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து கிடைக்காவிட்டால், செங்கடலில் உள்ள அனைத்து கப்பல்களும் இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும், அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதைப் பொருட்படுத்தாமல், நமது ஆயுதப் படைகளின் இலக்காக மாறும்” என்று தெரிவித்துள்ளது. மேலும், “அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம், யூதர்களை சாபம், இஸ்லாத்திற்கு வெற்றி” என்பதே ஹவுதிகளின் முழக்கமாக அமைகின்றது.
இதனைத் தொடர்ந்து செங்கடலில் பயணிக்கும் அனைத்து விதமான கப்பல்களும் ஏவுகணைகள், ட்ரோன்கள், பறிமுதல் முயற்சிகளால் ஹவுதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளன. டிசம்பர்- 12 அன்று, ஹவுதி போராளிகள் நோர்வேக்கு சொந்தமான டேங்கர் மீது ஏவுகணையை வீசினர். அது இத்தாலிக்கு செல்லும் வழியில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதாகக் கூறினர். தொடர்ந்து டிசம்பர்- 14 அன்று, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தியில் டேங்கர் ஒன்று குறிவைக்கப்பட்டது. டிசம்பர் -15 அன்று, கொள்கலன் கப்பல் தாக்கப்பட்டது. டிசம்பர்- 18 அன்று, கேமன் தீவுகளின் கொடியைத் தாங்கிய இரசாயனக் கப்பல் ஸ்வான் அட்லாண்டிக் உட்பட மேலும் மூன்று கப்பல்கள் செங்கடலில் தாக்கப்பட்டுள்ளன. ஹவுதிகளின் தொடர்ச்சியான தாக்குதலை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்கள் இனி செங்கடல் வழியாக பயணம் செய்யாதென அறிவித்துள்ளன.
ஹவுதி தாக்குதல்களுக்கு பதிலடியாக செங்கடலில் வர்த்தகத்தை பாதுகாக்க ஒரு பன்னாட்டு நடவடிக்கையை உருவாக்குவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் அறிவித்துள்ளார். மறுமுனையில் ஹவுதிகள் ஈரான் ஆதரவுத் தளத்திலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையிலேயே மேற்காசிய போர் சர்வதேச பரிமாணத்துக்குள் பயணிக்கின்றதா எனும் அச்சம் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே உருவாகியுள்ளது. இப்பின்னணியில் மேற்காசிய போரில் ஹவுதிகளின் செங்கடல் தாக்குதல் மேற்குலத்திற்கு ஏற்படுத்திய தாக்கங்களை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, சமகால அரசியலில் கடல்சார் அரசியலே உலக நகர்வின் மையமாக அமைகின்றது. சர்வதேச வர்த்தகம் கடலினை மையப்படுத்தி அமைவதனால் செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல் சர்வதேச வர்த்தகத்தில் பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. செங்கடல், வரலாற்றில் மிகவும் போட்டியிட்ட நீர்நிலையாக காணப்படுகின்றது. ஆசியாவுக்கு கடல் வழிக்கான போர்த்துக்ேகய தேடலில் இருந்து பனிப்போர் வரை குறைந்தது 500 ஆண்டுகளாக இது ஏகாதிபத்திய அல்லது பெரும் சக்தி போட்டியின் தளமாக இருந்து வருகிறது. இது ஆசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான மிக முக்கியமான வர்த்தக இணைப்பாகும். சிங்கப்பூர் ஜலசந்தியால் அதன் வடக்குப் பகுதியில் உள்ள சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான புள்ளியாக இடம்பெயர்ந்துவிட்டது. உலகளாவிய கொள்கலன் கப்பல் போக்குவரத்தில் 30 சதவீதம் அந்த கால்வாய் வழியாகவே செல்கிறது. அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் படி, 7.1 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் 4.5 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயு ஆகியவை பாப் எல்-மண்டேப் (செங்கடலின் தெற்கு நுழைவாயில்) வழியாக ஒவ்வொரு நாளும் பயணப்படுகின்றது.
இந்நிலையிலேயே ஹவுதிகளின் செங்கடல் போக்குவரத்து மீதான தாக்குதலால் சர்வதேச வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்தின் பிரதான நிறுவனங்கள் செங்கடல் வழியான பயணத்தை இடைநிறுத்தியுள்ளன. இது சர்வதேச வர்த்தகத்தை பெருநெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இங்கு ஹவுதிகளின் தாக்குதலில் பெருமளவு துருவ முனைப்பையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அமெரிக்க தலைமையிலான மேற்கு மற்றும் அதன் கூட்டளிகளின் கப்பல்கள் மீதே ஹவுதிகளின் தாக்குதலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது, குறுகிய கால அடிப்படையில் கப்பல் போக்குவரத்து பாதையை மாற்ற மேற்கு நாடுகள் திட்டமிட்டுள்ளன. நெருக்கடிகள் தளர்த்தப்படும் வரையில், கப்பல் செய்பவர்கள் செங்கடல் மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி நீண்ட பயணத்திற்கு இடையே வழிகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 1960களின் பிற்பகுதியிலும் 70களின் முற்பகுதியிலும் அரபு, -இஸ்ரேலியப் போர்களின் விளைவாக சூயஸ் கால்வாய் மூடப்பட்டபோது இது முன்பு செய்யப்பட்டது. ஆனால் உலகளாவிய வர்த்தகம் 1960களில் இருந்த சூழல் இன்று இல்லை என்பது கவனத்திற்குரியது. இன்று உலகம் வர்த்தகத்தை மையப்படுத்தி இயங்குகின்றது. குறிப்பாக சர்வதேச வர்த்தகத்தில் 90சதவீதத்திற்கும் மேற்பட்டது கடலை மையப்படுத்தியே இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாக வழிமாற்றுவது ஆசிய துறைமுகங்களில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு போக்குவரத்து நேரம் மற்றும் எரிபொருள் செலவினை 60 சதவீதத்தால் அதிகரிப்பதாக அமையும். கப்பல் ஏற்றுமதி செய்பவர்களுக்கு செலவுகளைச் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அந்த செலவினங்களை நுகர்வோருக்கும் மாற்றும்.
இது ஓரிரு வாரங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், அதிகரிக்கும் மேற்காசிய போரின் முடிவுகள் கணிக்க இயலாததாக உள்ளது. இனியும் உலகளாவிய கடல் அடிப்படையிலான விநியோகச் சங்கிலிகளுக்கு இடையூறு ஏற்படுவது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
மூன்றாவது, மேற்காசிய யுத்தம் செங்கடல் மீதான தாக்குதலால் சர்வதேச பரிமாணத்தை பெற்றுள்ளது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்கும் ஆயுதங்களை அழிக்க அல்லது தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. எனினும், ஹவுதி தாக்குதல்களில் இருந்து வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான கடற்படைக் கூட்டணியான ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற பெயருடன் அமெரிக்க தலைமையிலான ஒரு புதிய பணிக்குழு கட்டமைக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் இருந்து செயல்படும் ஒருங்கிணைந்த கடல்சார் படைகள், எதிர் திருட்டு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கடற்படைக் கூட்டணி ஆகியவற்றின் கீழ் இது செயல்படும். இதுவொரு வகையில் அமெரிக்கா தனது நீண்ட கால போருக்கு பின்னால் உள்ள யுத்தியையே தொடர்ச்சியாக பயன்படுத்துவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. நேரடியான ஈடுபாட்டை தவிர்த்து கடற்பாதுகாப்பு என்ற போர்வையில் கூட்டணி கட்டமைப்பாக மேற்காசிய யுத்தத்தில் களமிறங்க தீர்மானித்துள்ளது. மறுதளத்தில் அரபு நாடுகளும் இம்முறை நேரடி ஈடுபாட்டை தவிர்த்து ஆதரவு கிளர்ச்சி படைகளையே நேரடி யுத்தத்துக்குள் இறக்கியுள்ளது கவனத்திற்குரியது.
ஹவுதிகளின் பின்புலத்தில் ஈரானின் ஆதரவு மையமானதாகும். செங்கடலில் மேற்கு நாடுகளை துன்புறுத்துவதற்கான வெற்றிக்காக கணிசமான உயிரிழப்புகளைத் ஏற்படுத்த ஹவுதிகளை அனுமதிக்க ஈரான் நிச்சயமாக தயாராக உள்ளது. ஈரானைத் தாக்குவது மேற்கு அணிக்கு தர்க்க ரீதியான படியாகும். இவ்வாறே லெபனானுடனான அதன் வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லாவின் நகர்வும் இஸ்ரேல், -ஹமாஸ் போரில் அரபு நாடுகளின் ஈடுபாட்டின் உத்தியின் சான்றாகவே அமைகின்றது. எனவே, மேற்காசியாவுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இஸ்ரேல், -ஹமாஸ் போர் கடல் பிராந்திய போராக பரிணமிக்கும் நிர்ப்பந்தத்தை ஹவுதிகளின் செங்கடல் மீதான தாக்குதல் உருவாக்கியுள்ளது.
அத்துடன் ஹவுதிகளின் துருவ முனைப்பு தாக்குதல் வல்லாதிக்க அரசு போட்டியையும் மேற்காசிய மோதலுக்குள் ஒன்றிணைக்கின்றதா எனும் சந்தேகங்கள் சர்வதேச அரசறிவியலாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கடல் சார்ந்த வர்த்தகம் மற்றும் சீனாவை பெரிதும் சார்ந்துள்ள உலகமயமாக்கலின் யதார்த்தத்திற்கும், கடற்படை சக்தி வேகமாக மையப் பரிமாணமாக வெளிவரும் புவிசார் அரசியல் போட்டியின் யதார்த்தத்திற்கும் இடையே ஆழமான முரண்பாட்டை செங்கடலை மையப்படுத்தி விரிவுபட்டுள்ள மேற்காசிய யுத்தம் உருவாக்கியுள்ளது. செங்கடலின் பதற்றம் மற்றும் மோசமான தேர்வுகள் ஏராளமாக உள்ளன. ஆனால் அவை கடினமான தேர்வுகள் மற்றும் கொந்தளிப்பான நிலையைத் தூண்டுகின்றன.