இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 142 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 13ஆம் திகதி நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவர் வண்ணப்புகை உமிழும் கருவியை வெடிக்கச் செய்தனர்.
இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர். நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களே இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பியதற்காக தி.மு.க எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர், திரிணாமூல் எம்.பிக்கள் கல்யாண் பானர்ஜி, சுகதா ராய் உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் ஒரேநாளில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மாநிலங்களவையிலும் இதே பிரச்சினையை வலியுறுத்திய தி.மு.க எம்.பிக்களான என்.ஆர்.இளங்கோ, கனிமொழி என்.வி.என். சோமு, கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட 45 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் மூலம் ஒரேநாளில் 78 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 78 எம்.பிக்கள் ஒரேநாளில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு, மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கேட்டு குரல் எழுப்பி லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 50 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இடைநீக்க நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறையாகும்.
திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், கணேசமூர்த்தி, சுப்ரியா சுலே, சசி தரூர் உள்ளிட்ட 50 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை காணாத அளவில் ஒரே கூட்டத்தொடரில் 142 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கையை கண்டித்து எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுப்பும் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்திச் செல்வதற்கான அதிகாரம் மக்களவைத் தலைவருக்கும் மாநிலங்களவையின் தலைவருக்கும் அளிக்கப்படுகிறது. அவையின் நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட உறுப்பினர் குந்தகம் விளைவிப்பதாகக் கருதினால், அந்த உறுப்பினரை இடைநீக்கம் செய்யும் அதிகாரம் அவையின் தலைவருக்குத் தரப்படுகிறது. இந்த இடைநீக்க காலத்தை அவைத் தலைவரே முடிவுசெய்வார். ஆனால், இந்த இடைநீக்க காலம், குறிப்பிட்ட கூட்டத்தொடர் நடக்கும் காலஅளவைத் தாண்டிச்செல்ல முடியாது.
இப்படி இடைநீக்கம் செய்யப்படுபவர்கள், நாடாளுமன்ற அவைக்குள் நுழைய முடியாது. அவர்கள் இடம்பெற்றுள்ள கமிட்டியின் கூட்டங்களில் பங்கேற்க முடியாது. இந்த காலகட்டத்தில் கமிட்டி கூட்டங்களில் நடக்கும் வாக்கெடுப்புகளில் கலந்துகொள்ள முடியாது. எம்.பிக்களுக்கான தினப்படியும் வழங்கப்பட மாட்டாது. இந்த இடைநீக்கத்தை ஒரு நாடாளுமன்றத் தீர்மானத்தின் மூலம் நீக்கவோ, குறைக்கவோ முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
“உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதில் தற்போதைய அரசு மிக மோசமாக நடந்துகொள்கிறது” என்கிறார் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தி.மு.க. எம்.பியான கனிமொழி.
“நான் தற்போது மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். இதுவரை நான் இடைநீக்கம் செய்யப்பட்டதேயில்லை. பொதுவாக அவையின் மூத்த உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதும் வழக்கமில்லை. இந்த முறை, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பதாகையை பிடித்தபடி நின்றதற்காக இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி இருந்தபோது, பா.ஜ.க இதுபோல பல முறை செய்திருக்கிறது. இப்படி ஒரு இடைநீக்க நடவடிக்கை இருந்தால், மூத்த உறுப்பினர்கள் சபாநாயகரிடம் சென்று பேசுவார்கள். உடனடியாக இடைநீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்படும். இப்போதெல்லாம் அப்படி நடிப்பதில்லை.
இது தவிர, ஒரு நாள், இரண்டு நாள் என இடைநீக்கம் செய்வதற்குப் பதிலாக முழு கூட்டத்தொடரும் இடைநீக்கம் செய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடக்கிறது. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசின் நடவடிக்கை என்ன என்பதை அவர்கள் விளக்கலாம். அதைவிட்டுவிட்டு, விளக்கம் கேட்பவர்களை இடைநீக்கம் செய்கிறார்கள்” என்றார் கனிமொழி.