Home » மலையக மக்கள் முன்னணியின் மாநாட்டில் நூல்கள் வெளியீடு
'200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி...'

மலையக மக்கள் முன்னணியின் மாநாட்டில் நூல்கள் வெளியீடு

by Damith Pushpika
December 24, 2023 6:59 am 0 comment

நுவரெலியாவில் மலையக மக்கள் முன்னணி இன்று டிசம்பர் 24ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள ‘200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ மாநாடு எனும் வரலாற்று நிகழ்வில் மலையக எழுத்தாளர்களான சி.வி.வேலுப்பிள்ளையின் ‘மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்’, தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’, சாரல் நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’, மலையக ஆய்வாளர் மு.நித்தியானந்தனின் ‘மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல்’, ‘மலையக சுடர்மணிகள்’, மாத்தளை பெ.வடிவேலனின் ‘வல்லமை தாராயோ?’, மலரன்பனின் ‘கொலுஷா’ ஆகிய ஆறு நூல்கள் வெளியிடப்படுகின்றன.

மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களான செயலாளர் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன், தேசிய அமைப்பாளர் ஆர்.ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணி பதில் செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு வைப்பர்.

கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் நாங்கள் வெளியிட்ட மலையக அரசியல், சமூக, இலக்கிய நூல்கள் மலையக நூல் வெளியீட்டுத் துறையில் அழுத்தமான தடங்களை பதித்துள்ளன.

‘மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ.சந்திரசேகரன்’ என்ற தலைப்பில் 2014இல் வெளியிடப்பட்ட வரலாற்று நூல் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒர் அரசியல் தலைவனின் சாதனைப் பதிவாக அமைந்துள்ளது.

இரண்டு பதிப்புக்களை கண்ட அந்த நூல் லண்டனில் முதல் வெளியீட்டை நிகழ்த்தியது. அந்த வழிமுறையில் தேசிய தொழிலாளர் சங்க முக்கிய ஆளுமையான சி.வி.வேலுப்பிள்ளையின் ‘மலையக அரசியல்; தலைவர்களும் தளபதிகளும்’ என்ற நூல் மலையக அரசியல் வரலாற்றில் அரசியல் எழுத்துப் பதிவாகும். மலையக அரசியல் வரலாற்றை அறிய விரும்பும் எவரும் சி.வி. எழுதிய இந்த வரலாற்றுப் புதையலை கடந்து போக முடியாது என்கிறார் மலையக பேராசான் மு.நித்தியானந்தன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம்: வாழ்வும் பணியும்’ என்று வெளியான நூல், ஈழத்தின் இதழியலில், குறிப்பாக மலையகப் பத்திரிகையுலகில் ஆற்றல்மிக்கவராகத் திகழ்ந்த அமரர் எஸ்.எம் கார்மேகத்தின் பெயரை வரலாற்றில் பதித்தது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதகிருஷ்ணனால், கம்போடியாவில் நடைபெற்ற சுமார் 1500 பேராளர்கள் கலந்துகொண்ட உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டு அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து லண்டனிலும் இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புரட்சி பாவலன் பி.ஆர்.பெரியசாமியின் ‘தோட்டத் தொழிலாளர் வீரப்போராட்டம்’ என்ற நூல் 1957 இல் வெளியாகியது. ஐம்பத்தாறு ஆண்டுகள் கழித்து அந்த அரிய நூலைக் கண்டெடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மலையகத்தின் மூத்த ஆளுமைகளான பி.பி. தேவராஜ், தெளிவத்தை ஜோசப், பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஆகியோரால் அந்நூலை கொழும்பில் வெளியிட்ட போது, அரசியல் அரங்கில் அதற்கு வரவேற்புக் கிடைத்தது.

அமரர் சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ 2022 இல் நூல் வடிவம் பெற்றது. தொழிற்சங்கப் போராட்டத்திற்காகத் தூக்கில் தொங்கிய ரா.வீராசாமி, ஐ.வேலாயுதம் ஆகியோரின் வரலாற்றை மிக விரிவாக, துல்லியமாகப் பதிவு செய்த மு.நித்தியானந்தனின் நீண்ட முன்னுரை, தொழிற்சங்கப் போராட்ட சரித்திரத்திற்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷமாகும்.

மாத்தளை பெ.வடிவேலன் எழுதிய ‘வல்லமை தாராயோ?’ என்ற சிறுகதைத் தொகுப்பு சென்ற ஆண்டு தமிழகத்தில் வெளியாகி, ​ெடாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி முனைவர் குமார் ராஜேந்திரனின் ஒரு இலட்சம் ரூபா விருதினைப் பெற்று, மலையக எழுத்திற்குக் கடல் கடந்த அங்கீகாரத்தைத் தேடித் தந்தது.

இந்த ஆண்டு மாத்தளை மலரன்பன் சிங்களத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகளை ‘கொலுஷா’ (பிறமொழி சிறுகதைகள்) என்ற தலைப்பில் நாங்கள் வெளியிட்ட போது, சிங்கள – தமிழ் இலக்கிய நல்லுறவுக்குப் பாலமாகவும் பலமாகவும் அமைந்தது. மாத்தளை சிங்கள எழுத்தாளர்கள் தங்கள் மாநாட்டில் அந்த நூலுக்கு கௌரவம் வழங்கினர்.

பேராசான் மு.நித்தியானந்தன் எழுதிய ‘மலையகச் சுடர்மணிகள்’, ‘மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல்’ என்ற இரண்டு நூல்கள் இவ்வாண்டு வெளியாகி, மலையக இலக்கியத்தின் அருமை பெருமைகளை தமிழ் கூறும் நல்லுலகெங்கும் எடுத்துச் சென்றுள்ளன.

இதில் மலையக சுடர்மணிகள் தொகுதியில் மலையகத்தின் 18 ஆளுமைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், ‘மலையக இலக்கியம்: சிறுமை கண்டு பொங்குதல்’ என்ற நூலில் மலையகத்தின் 22 ஆளுமைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் 59 சிறுகதைகளை தொகுத்து, அவர் வாழும் நாளிலேயே அவரது கரங்களில் சமர்ப்பிக்க எண்ணியிருந்தோம். கதைகளை அவர் படித்து பிழைகளை திருத்திக் கொண்டிருந்த நேரத்தில் அவர் எம்மைவிட்டு பிரிந்தது பெரும் துரதிருஷ்டமாகும். ‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’ என்ற தலைப்பில் 476 பக்கங்களில் மு.நித்தியானந்தனும், எச்.எச்.விக்ரமசிங்கவும் வெளியிட்டிருக்கும் தொகுப்பு மலையக நூல் வெளியீட்டில் தனி அத்தியாயம் பதிக்கிறது.

எதிர்வரும் காலங்களில் நாம் வெளியிடவிருக்கும் ‘மலையகம் இங்கிருந்து எங்கே’ பி.மரியதாஸ், எழுத்தாளர் அகிலன் அவர்களின் முன்னுரையுடன் சி.வி.வேலுப்பிள்ளையின் ‘எல்லைபுறம்’, ‘கோப்பிக்கிருஷிக்கும்மி’ ஆபிரகாம் ஜோசப், ‘கோ.நடேசய்யர் சில ஆய்வுக்குறிப்புகள்’ மு.நித்தியானந்தன் ஆகிய மலையக நூல்களும் மலையக அரசியல், சமூக, இலக்கிய வரலாற்றில் செழுமையைச் சேர்க்கும் என்பது திண்ணமாகும்.

எச். எச். விக்கிரமசிங்க

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division