Home » கொவிட் 19 தொற்றின் புதிய திரிபு இலங்கையில்?

கொவிட் 19 தொற்றின் புதிய திரிபு இலங்கையில்?

by Damith Pushpika
December 24, 2023 6:14 am 0 comment

* உலகின் கவனத்தை மீண்டும் ஈர்க்கும் கொரோனா

* ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர கூறுவதென்ன?

* அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ளுமாறு வலியுறுத்தும் சுகாதார பணியகம்

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் கொவிட் 19 தொற்றின் புது வகை திரிபு பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது கொவிட் 19 தொற்றில் ஏற்கனவே ஏற்பட்ட ஒமிக்ரோன் பிறழ்வில் உருவாகியுள்ள ஜே.என்.1 என்ற புதுவகை திரிபு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில், கொவிட் 19 தொற்றின் புதிய வகை திரிபு கடந்த செப்ெடம்பர் மாதம் முதன் முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சீனாவில் கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஏழு பேர் இவ்வகைத் திரிபின் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. இத்திரிபானது ஒமிக்ரோன் பி.ஏ 286 அல்லது பைரோலாவின் உப பிறழ்வாகும். இதன் பரவுதல் வேகம், தாக்கம், பாதிப்புக்கள் குறித்து உன்னிப்பதாக அவதானிக்கப்படுகிறது. என்றாலும் கொவிட் 19 தொற்றுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளும் இத்திரிபுக்கும் பயனளிக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மாத்திரம் இம்மாதம் 56 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால் கொவிட் 19 தொற்று குறித்து மீண்டும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் நிலை உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் 2019ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்று குறுகிய காலப்பகுதியில் முழு உலகிலும் பரவியது. அதன் ஊடாக அண்மைய வரலாற்றில் அதிகூடிய உயிரிழப்புக்களும் பொருளாதார பாதிப்புக்களும் ஏற்பட்டன. இத்தொற்றின் தாக்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பின்னரே இதன் அச்சுறுத்தல் குறைவடைந்து வீழ்ச்சியடைந்தது. ஆனாலும் இத்தொற்றில் அவ்வப்போது பிறழ்வுகள் ஏற்பட்டு பரவிய போதிலும் தடுப்பூசியின் பயனாக அவற்றின் தாக்கம் அதிக செல்வாக்கு செலுத்த முடியாத நிலை நிலவி வருகிறது.

ஆனாலும் இத்தொற்று ஆரம்பத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் பாதிப்புக்களும் மீண்டும் ஏற்பட இடமளித்திடக்கூடாது. அதுவே அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறான சூழலில் ஒமிக்ரோன் பிறழ்வில் ஏற்பட்டுள்ள ஜே.என்.1 புதுவகை திரிபு இந்தியாவின் சில மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்க மாநிலங்களாகும். அதிலும் கொரோனா தொற்றுக்கு கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் உள்ளாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோய்க்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ள போதிலும் நான்கு உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் கர்நாடகா மாநில சுகாதாரத் துறையினர், ‘இத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களில் எத்தனை பேர் ஜே.என்.1 வகை திரிபுக்கு உள்ளானவர்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன’ என்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் பல மாதங்களுக்கு பிறகு இத்தொற்றுக்கு உள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர். ஆனால் உயிரிழப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்தியாவின் கர்நாடகா, தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறையினர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நாட்பட்ட நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதேவேளை சிங்கப்பூர் அரசாங்கம் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்த முடிவு செய்துள்ளதோடு பயணக் கட்டுப்பாட்டு ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துதல், சமூக இடைவெளி பேணப்படுதல் போன்றவற்றை மீண்டும் அமுல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதும் ஜே.என்.1 திரிபு பதிவாவதும் இலங்கையிலும் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் அயல்நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான மக்கள் தொடர்பாடல் நிலவி வருவது ஆளுக்காள் தொற்றிப் பரவும் இவ்வைரஸ் தொற்று இந்நாட்டுக்குள் கடத்தப்படுவதற்கு நல்ல சாதகமான சூழலாக விளங்குகிறது. அதனால் தான் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் நிலை பல மட்டங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கையில் தற்போது பல பிரதேசங்களிலும் காய்ச்சல், இருமல், தடிமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளுக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இதற்கு பிரதான காரணமாக இருக்கலாம் என நம்பப்படும் சூழலில் தான் இன்புளுவென்ஸா, கொவிட் 19 தொற்று போன்ற நோய்கள் சில நாடுகளில் அதிகளவில் பரவிவருவதைக் காண முடிகிறது. தற்போது பரவும் ஜே.என். 1 திரிபு பெரும்பாலும் ஒமிக்ரோன் பிறழ்வுக்கு சமமானதாகவும் உள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்திருக்கிறது.

அதனால் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ளுமாறும் மூக்கு, கண், முகம் ஆகியவற்றை அடிக்கடி தொடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தும்மும் போதும் இருமும் போதும் சளித்துகள்கள் காற்றில் பரவாதபடி கைகளாலும் கைக்குட்டையாலும் முகத்தை மூடியபடி தும்மவும் இருமவும் வேண்டும். அவற்றின் ஊடாக இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்று பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரன்ஜித் பட்டுவந்துடாவ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர தமது ‘எக்ஸ்’ தளத்தில், ‘இத்தொற்று இலங்கைக்குள் வந்து சேர்ந்திருக்க முடியும்’ என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளது மக்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பாடல் காரணமாக இத்தொற்று இங்கு இலகுவாக வந்து சேர்வதற்கான சாதகமான சூழல் ஏற்படுகின்றது. இத்தொற்று தொடர்பில் முன்போன்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகிறது. அதனால் இலங்கைக்குள் இத்தொற்று வந்து சேர்ந்துள்ளதா? இல்லையா? என்பதை சரியாகக் கூற முடியாதுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ள பேராசிரியர் சந்திம, இத்தொற்றுக்கு எவராவது உள்ளானால் காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு, நீடித்த கடுங்காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, சாப்பிட இயலாமை போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படும். அவ்வாறான அறிகுறிகள் வெளிப்பட்டால் தாமதியாது மருத்துவர்களை அணுகி ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே தற்போது கொவிட் 19 தொற்றின் பிறழ்வுகள் பரவும் சூழலில் வயதானவர்கள், பல்வேறு நோய்களால் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் சனநெரிசல் மிக்க பிரதேசங்களுக்கு செல்பவர்களும் முகக்கவசம் அணிந்து கொள்வதும் சமூக இடைவெளியைப் பேணுவதும் பெரிதும் பயன்மிக்கதாக இருக்கும். அத்தோடு இந்நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் தாமதியாது மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் வேண்டும். எனினும் இந்நோய் அறிகுறிகள் முழுமையாகக் குணமடைவதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் செல்லலாம். நன்கு ஒய்வு எடுத்துக்கொள்வதன் மூலம் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்நோய்க்கான சில அறிகுறிகள் நிமோனியாவை ஒத்ததாக இருப்பதால் நோய் குறித்து அலட்சியமாக இருக்கவே கூடாது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division