உலகெங்குமுள்ள கிறிஸ்தவ மக்கள் இறைமகன் இயேசுவின் பிறப்பான கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
“காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்” என்கிறது பரிசுத்த வேதாகமம்.
அன்று வாழ்ந்த மக்களுக்கு இயேசுவின் பிறப்பு அமைதியையும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வழங்கியது. உலகம் பேரழிவுகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு சற்றுத் தலைநிமிரும் காலமாக இதனைக் குறிப்பிட முடியும்.
இப்போதும் உலக நாடுகள் பலவற்றில் யுத்தம், மோதல்கள், நோய்த் தொற்றுக்கள், இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார நெருக்கடி என்றெல்லாம் அவலங்கள் நிலவுகின்றன. அந்நாடுகளில் வாழும் மக்கள் அழிவுகளையும் கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வரும் நிலைமை காணப்படுகின்றது.
இத்தகைய ஒரு சூழலில்தான் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்து பிறப்பின் போது வானதூதர்கள் “உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாவதாக! பூவுலகில் நல் மனதோர்க்கு அமைதி ஆகுக!” என்று கீதம் இசைத்துள்ளனர்.
பல்வேறு வகையிலும் அமைதியை இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதல் வழங்குவதாக இம்முறை நத்தார் அமைய வேண்டும்.
போர் முழக்கங்கள் தொடரும் நாடுகளில் யுத்தங்கள் ஓய்ந்து அந்த நாடுகளில் அமைதி நிலவவும், அத்தகைய பாதிப்புகளில் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கான வழிகள் திறக்கப்பட வேண்டும் என்பதும் இந்தத் திருநாளில் எமது பிரார்த்தனையாகட்டும்! நத்தார் என்பது பகிர்தலின் திருவிழாவாகும். உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு தம்மால் இயன்றதை பகிர்ந்தளிப்பதை இந்தப் பண்டிகை வலியுறுத்துகின்றது.
குறிப்பாக எமது நாட்டிலும் எம் போன்ற பல நாடுகளிலும் பொருளாதார நெருக்கடியில் வாழ்கின்ற மக்கள் மீண்டு வாழ வேண்டுமானால் இத்தகைய பகிர்ந்தல் மிக அவசியமாகும்.
இந்தப் பண்டிகைக் காலங்களிலும் ஆடம்பரங்களை முற்றாகத் தவிர்த்து எளிமையாக திருநாட்களைக் கொண்டாடுவோம்.
நாம் வாழும் சுற்றுச் சூழலில், நாம் அன்றாடம் சந்திக்கும் குடும்பங்கள், நபர்களிடையே வறுமையில் வாடுவோர் உள்ளனர். நல்லுள்ளத்துடன் அவர்கள் மீதும் பரிவு கொண்டு எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். அவர்களும் மகிழ்ச்சியுடன் இந்த நத்தார் பண்டிகையை கொண்டாட உதவி செய்வோம்.
“சிறியோர் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்கின்றீர்களோ,அதை எனக்கே செய்கின்றீர்கள்” என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை அப்போதுதான் அர்த்தம் பெற முடியும்.
அனைவருக்கும் இயேசு பிறப்பின் நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!