Home » தலையில்லாமல் உயிர் வாழ்ந்த சேவல்

தலையில்லாமல் உயிர் வாழ்ந்த சேவல்

by Damith Pushpika
December 24, 2023 6:03 am 0 comment

தலையில்லாமல் வாழ முடியுமா? ஆனால், அவ்வாறான ஒரு அதிசய சேவல் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. கொலராடோ பகுதியில் ப்ரூட்டா என்ற இடத்தில் லாய்ட் ஓல்சென் மற்றும் கிளாரா தம்பதியினர் பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இறைச்சி வியாபாரமும் செய்து கொண்டிருந்த அவர்கள், ஒரு நாளில் 40 முதல் 50 கோழிகளின் தலையை இறைச்சிக்காக முதலில் வெட்டியுள்ளனர்.

அப்போது, அனைத்துக் கோழிகளும் இறந்துவிட, ஒரே ஒரு கோழி மட்டும் உயிருடன் இருந்துள்ளது. அந்த சேவலும் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என எண்ணியவர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் கோழி இறக்கவில்லை. உயிருடன் இருந்துள்ளது. பெட்டியில் இருந்து எடுத்து சேவலை வெளியே விட்டபோது அது தத்தித் தத்தி நடக்கவும் செய்துள்ளது. இதனை அவர்களால் நம்ப முடியவில்லை. பின்னர், அந்த சேவலுக்கு மைக் எனப் பெயர்சூட்டி வளர்க்கத் தொடங்கினர்.

ஓல்சென் மற்றும் கிளாரா தம்பதி வளர்த்த தலையில்லாத சேவல் குறித்த செய்தி அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவியது. பேராசிரியர்கள் முதல் கண்காட்சி அமைப்பாளர்கள் வரை என அவர்களின் புகழ் பரவியது. ஹோப் வேட் என்பவர் அந்த சேவலைப் பார்த்து ‘மிராக்கிள் மைக்’ என பெயர் சூட்டினார். யூடா பல்கலைக்கழகத்திற்கு சோதனைக்காக அந்த சேவல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலை வெட்டியபிறகு சேவல் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அவர்களுக்கும் வியப்பாக இருந்தது. அதேநேரத்தில் சேவல் உயிருடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்தபிறகு கண்காட்சி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் மிராக்கிள் மைக் கலந்து கொண்டது. இதனால், ஓல்சென்னுக்கும், கிளாராவுக்கும் பொருளாதார ரீதியாக பெரும் ஆதாயம் கிடைத்தது.

மிராக்கிள் மைக்கிற்கு தினமும் திரவ வடிவில் உணவு செலுத்தப்பட்டன. சொட்டு மருந்துகள் போல் உணவுக் குழாய்க்குள் நேரடியாக உணவு கொடுக்கப்பட்டது. தொண்டையில் அடைப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க, ஊசி செலுத்தும் சிரிஞ்சு மூலம் உணவுக் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டது. 1947 ஆம் ஆண்டு அரிஜோனாவின் ஃப்ரின்க்ஸில் மிராக்கிள் மைக் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது, எதிர்பாரதவிதமாக இறந்து விட்டது. உணவுக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டபோது சிரிஞ்சு வைத்து அந்த அடைப்பை எடுக்க ஓல்சென் முயன்றுள்ளார். அவரின் முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைக்காததால் மிராக்கிள் மைக் இறந்து விட்டது. இருப்பினும், தலையில்லாமல் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த சேவல் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இன்றளவும் இருக்கிறது.

தலையில்லாமல் சேவல் இருந்தது குறித்து ஆய்வாளர் ஒருவர் பேசும்போது, சேவல் மற்றும் கோழியின் முழுத் தலையானது, அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு அமைப்பின் பின்புறமுள்ள சிறிய பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மிராக்கிள் மைக்கின் தலை வெட்டுப்படும்போது, அலகு உள்ளிட்டவை வெட்டப்பட்டு, 80 வீதம் மூளை உள்ளிட்ட உறுப்புகள் செயலிலேயே இருந்ததால் உயிர் வாழ முடிந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division