காஸா மீது 68 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் முன்னெடுத்து வரும் யுத்தமானது உலகின் கவனத்தை உச்சளவில் ஈர்த்துள்ளது. இந்த யுத்தத்திற்கு எதிராக உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கபட்டுவரும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் மாத்திரமல்லாமல், ஐ.நா. தீர்மானங்களும் நாடுகளின் வலியுறுத்தல்களும் இதற்கு நல்ல சான்றுகளாக அமைந்துள்ளன.
இந்நிலையில், காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மற்றொரு தீர்மானத்தை கடந்த செவ்வாயன்று (12.12.2023) நிறைவேற்றியுள்ளது. சுமார் 100 நாடுகளின் ஆதரவுடன் எகிப்து கொண்டு வந்த இத்தீர்மானத்திற்கு 153 நாடுகள் ஆதரவளித்துள்ளன. 10 நாடுகள் எதிராக வாக்களித்த இத்தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இருந்து 23 நாடுகள் தவிர்ந்து கொண்டன.
இத்தீர்மானமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.ஈ) தலைமையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்ஸிலுக்கு கடந்த 08 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட காஸாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா செல்லுபடியாக்கியதைத் தொடர்ந்து, 4 நாட்களுக்குள் ஐ.நா பொதுச்சபைக்கு கொண்டு வரப்பட்டு அறுதிப் பெரும்பான்மையுடன் இதேவிதமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட, காஸாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்திற்கு 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 45 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள யுத்தநிறுத்த தீர்மானத்திற்கு 153 நாடுகள் ஆதரவளித்துள்ளதோடு, வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளின் எண்ணிக்கை 23 ஆகக் குறைவடைந்துள்ளது.
இப்போருக்கு எதிராக இஸ்ரேல் ஜ.நாவில் எதிர்கொள்ளும் அழுத்தங்களும் நெருக்குதல்களும் அதனை சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுவதை வெளிப்படுத்தி நிற்கின்றன என்பதே இராஜதந்திர நிபுணர்களின் கருத்தாகும்.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர், ‘சர்வதேச ஆதரவு கிடைக்கின்றதோ இல்லையோ யுத்தநிறுத்தத்திற்கு இடமில்லை’ என்றுள்ளார். இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் உலக நாடுகளின் ஆதரவை இழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபையில் பெரும்பான்மை ஆதரவுடன் உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், யுத்தம் நிறுத்தப்பட்டதாக இல்லை.
23 இலட்சம் பலஸ்தீன மக்களைக் கொண்ட காஸாவில் 19 இலட்சம் மக்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் பனியிலும் குளிரிலும் மழையிலும் நனைந்தபடி போதிய அடிப்படை வசதியற்ற முகாம்களில் தங்கியுள்ளனர். 18,500 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களைக் காவு கொண்டுள்ள இப்போரினால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள காயமடைந்துள்ளனர். 135 ஐ.நா. ஊழியர்களும் 87 ஊடகவியலாளர்களும் கூட இந்த யுத்தம் காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஒரு இலட்சம் கட்டடங்கள் சேதமடைந்தும் அழிவுற்றும் உள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.
காஸா மக்களுக்கான குடிநீர், மின்சாரம், மருந்துப் பொருட்கள், உணவு என்பவற்றைத் தடுத்து நிறுத்தியபடி முன்னெடுக்கப்படும் இப்போரில் மக்கள் குடியிருப்புக்கள், அகதி முகாம்கள், ஐ.நா நலன்புரி நிலையங்கள், வைத்தியசாலைகள், பொதுக்கட்டடங்கள் என அனைத்தும் இலக்காகியுள்ளன.
இதனால் மரணங்களும் காயங்களும் இழப்புக்களும் நிறைந்த பூமியாகியுள்ளது காஸா. மக்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர். உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உடுத்த உடையுடன் பரிதவித்துத் திரிகின்றனர். இந்த யுத்தத்தினால் காஸா மக்கள் முகம்கொடுத்துள்ள அவலம், நெருக்கடி உலகின் அனைத்து மக்களையும் கவலைக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளன. அதன் விளைவாக யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகம், பாப்பரசர் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் இப்போரை நிறுத்தக் கோரி வருகின்றனர். அமெரிக்காவின் மாநாட்சி மன்றங்கள் பலவும் இது தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
இவை எதனையும் இஸ்ரேல் கண்டு கொள்வதாக இல்லை. இந்நிலையில் ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டடெஸ் ஆர்டிகல் 99 ஐ பிரகடனப்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுத்துமூலம் அறிவித்தார். ஐ.நாவின் ஆர்ட்டிகல்- 99 என்பது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படையில் செயலாளர் நாயகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களில் ஒன்றாகும். உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எதுவொன்றைக் குறித்தும் ஐ.நா உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவர செயலாளர் நாயகம் இதனைப் பயன்படுத்துவது வழமை.
ஐ.நா.வின் உண்மையான அதிகாரம் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளிடம் உள்ளது. என்றாலும் கூடுதல் அதிகாரத்தை செயலாளர் நாயகத்திற்கு ஆர்டிகல் 99 வழங்கியுள்ளது. அதற்கேற்ப காஸாவில் மனித பேரழிவுக்கான அபாயம் நிலவுவதாகக் குறிப்பிட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலுக்கு எழுத்துமூலம் அழைப்பு விடுத்துள்ள அவர், மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் அவசரமாக நிறைவேற்றப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வதிகாரம் மிகவும் அரிதாக பயன்படுத்தப்படுவது வழமையாகும். இற்றை வரையும் நான்கு தடவைகள்தான் இவ்வதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
உலகின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் யு.ஏ.ஈ 100 நாடுகளின் இணை அனுசரணையோடு காஸாவில் உடனடி மனிதாபிமான யுத்தநிறுத்தத்திற்கான பிரேரணை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு 2023.12. 08 ஆம் திகதி கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பிரேரணைக்கு 13 நாடுகள் ஆதரவளிக்க, பிரித்தானியா வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்பிரரேரணையை செயலிழக்கச் செய்தது. அதன் ஊடாக உடனடி யுத்தநிறுத்த முயற்சி தகர்ந்து போனது.
அமெரிக்காவின் இச்செயற்பாடு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் உட்பட உலகெங்கிலும் இந்த யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிவரும் சூழலில், அமெரிக்காவின் இச்செயற்பாடு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமது நட்பு நாடுகளான சவுதி, யூ.ஏ.ஈ போன்றவற்றின் வேண்டுகோளையும் மீறி அமெரிக்கா இதனைச் செய்துள்ளது.
காஸாவிலுள்ள பலஸ்தீன மக்கள் இவ்வாறு தண்டிக்கப்படுவதற்கு அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? ஹமாஸை தண்டிப்பதற்காக் கூறி பொதுமக்களை தண்டிப்பதற்கு எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வியும் உலக மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
அதனால் ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காககவும் அதிகம் குரல் கொடுக்கும் அமெரிக்கா, காஸா மீதான யுத்தத்திலும் அதனை வலியுறுத்தவும் யுத்தநிறுத்தம் ஏற்படவும் வழிவகுக்கவும் வேண்டும். அதுவே அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மர்லின் மரிக்கார்