இந்திய உச்சநீதிமன்றம் கடந்த திங்கட்கிழமையன்று பரபரப்பான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இந்திய அரசியல்பரப்பில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு இதுவாகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370 ஆ-வது பிரிவு மத்திய பா.ஜ.க அரசால் ரத்து செய்யப்பட்டமை செல்லுபடியாகும் என்பதே அந்தத் தீர்ப்பாகும்.
அதேசமயம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியென்பதுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததும் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவின் விடுதலைக்குப் பின்னர் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரட்டைக் குடியுரிமை, தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370- ஆவது பிரிவும் உருவாக்கப்பட்டது. ஆனால் 1950 களில் இருந்தே இந்த 370- ஆவது பிரிவுக்கு எதிரான குரல்கள் ஒலித்து வந்தன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370- ஆவது பிரிவானது 2019- ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5-ஆம் திகதியன்று மத்திய பா.ஜ.க அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் 2019 ஆ-ம் ஆண்டு ஓகஸ்ட் 9- ஆம் திகதி ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
அப்போது ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் முற்றாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370- ஆவது பிரிவை மத்திய பா.ஜ.க அரசு நீக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்குகள் தொடர்ந்தனர். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோர் இந்த வழக்குகளைத் தொடர்ந்தனர்.
370- ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசின் 370 ஆ-வது பிரிவு ரத்து நடவடிக்கையானது செல்லுபடியாகும் என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
மொத்தம் 16 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் விசாரணை திகதி குறிப்பிடாமல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 370- ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் டிசம்பர் 11-ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை வரலாற்று சிறப்பு மிக்க இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370- ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டமை செல்லுபடியாகுமென்றும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததும் செல்லுபடியாகும் எனவும் எனவும் உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவையும் உச்சநீதிமன்றம் நிர்ணயித்திருக்கிறது.
இத்தீர்ப்பில் முக்கியமாகக் கருதப்பட வேண்டியது, ஜம்மு காஷ்மீரில் தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவாகும். அதாவது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. அதேபோல, யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு காஷ்மீரை முடிந்தவரை விரைவாக மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதனையடுத்து 2024 செப்டம்பர் மாதத்திற்கு ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு முழு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்கின்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இத்தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பாக, இந்த வழக்கில் 3 விதமான தீர்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.வை. சந்திரசூட் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தீர்ப்பை வாசித்தார்.
தீர்ப்பில் அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதேயாகும். சட்டப்பிரிவு 1 மற்றும் 370 இன்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது ஒரு இடைக்கால ஏற்பாடு. சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதற்கு இந்திய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அது தனித்த இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை.
ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இந்தியாவில் இருந்து அதனைப் பிரிப்பதற்காக அல்ல. சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகும்.
சட்டப்பிரிவு 370(1)(d)இ-ன்படி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு காஷ்மீருக்குப் பயன்படுத்தலாம். ஜம்மு காஷ்மீர்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்.
ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. மாநிலம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யக் கோர முடியாது. இதில் தலையிடுவது, குழப்பத்தையும் நிச்சயமற்ற நிலையையுமே ஏற்படுத்தும். மேலும், நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும். அந்த வகையில், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆ-ம் திகதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கையின்படி, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சாரங்கன்