Home » இணக்கப்பாட்டுக்கு வழியேற்படுத்துமா இமயமலை பிரகடனம்?

இணக்கப்பாட்டுக்கு வழியேற்படுத்துமா இமயமலை பிரகடனம்?

by Damith Pushpika
December 17, 2023 6:40 am 0 comment

பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்தித்துள்ள இலங்கை படிப்படியாக அதிலிருந்து மீண்டெழுந்து வருவதற்கு அரசாங்கம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் மீட்சிக்குப் பொருளாதார ஸ்திரத்தன்மை மாத்திரமன்றி, அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையும் மிகவும் அவசியம் என்ற விடயம் பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பல்வேறு தசாப்தங்களாக இழுபறியில் இருந்து வருகின்ற இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அரசியல் ஸ்திரத்தன்மைக்கு முக்கியம் என்பதுடன், இனங்களுக்கிடையில் சந்தேகங்கள் நீக்கப்பட்டு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவதும் காலத்தின் தேவையாகும்.

இந்த அடிப்படையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியொன்று அரசியல் அரங்கத்தில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

‘உலகத் தமிழர் பேரவை’ எனப்படும் புலம்பெயர்ந்துவாழ் தமிழர் அமைப்புக்கும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் பௌத்த தேரர்கள் அமைப்புக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மகாசங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சிகள், சர்வமதத் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் கையளிக்கப்பட்டிருந்தது.

உலகத் தமிழர் பேரவைக்கும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் பௌத்த தேரர்கள் குழுவுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் இந்த ‘இமயமலைப் பிரடகனம்’ கைச்சாத்திடப்பட்டிருந்தது.

ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைத் தீர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் பொறிமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்தப் பிரகடனம் அமைந்துள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இனப்பிரச்சினைத் தீர்வுகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும் தரப்பினராக பௌத்தமதத் தலைவர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறான முயற்சிகளுக்கு அவர்களே குழப்பம் விழைவிக்கின்றனர் என்ற சந்தேகம் தமிழ் சமூகத்தின் மத்தியில் காணப்படுகிறது.

அதேநேரம், ‘டயஸ்போரா’ என அழைக்கப்படும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் எப்பொழுதும் பிரிவினைவாதத்தை விரும்பும், இலங்கையின் ஐக்கியத்தைக் குலைக்கும் நிலைப்பாட்டைக் கொண்ட தரப்பினர் என்ற பாரியதொரு அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாறு இரண்டு தரப்புக்கும் இடையில் காணப்படும் சந்தேகங்களை நீக்கி, இடையூறு விளைவிப்பவர்கள் எனக் குற்றம் சாட்டப்படும் இரண்டு தரப்பினரும் முன்வந்து ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருப்பது சிறந்ததொரு ஆரம்பமாக இருக்கும்.

இந்த இமயமலைப் பிரகடனம் ஆறு முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.

(1) எந்தவொரு சமூகமும் அதன் அடையாளத்தையும் பெருமையையும் இழக்க நேரிடும் என்ற அச்சுறுத்தலை உணராத வகையில் நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

(2) பொருளாதார நெருக்கடியை முறியடித்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருத்தமான அபிவிருத்தி மாதிரியைத் தேர்ந்தெடுப்பது, கடல்கடந்துள்ள இலங்கையர்கள் மற்றும் பிறரிடமிருந்து ஈடுபாடு மற்றும் முதலீட்டை எளிதாக்குதல், நாடு வளர்ச்சிப் பாதையில் இருப்பதை உறுதிசெய்து, இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாற்றுதல்.

(3) தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் அனைத்து மக்களிடையே சமத்துவம் மற்றும் சமமான குடியுரிமையை ஊக்குவிக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது, பொறுப்புக்கூறும் நிறுவனங்களை உறுதிசெய்து, மாகாணங்களுக்கு போதுமான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துவது. அதுவரை தற்பொழுதுள்ள அரசியலமைப்பில் காணப்படும் அதிகாரப் பகிர்வு விதிகளை உண்மையாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்தல். (4) ஒன்றுபட்ட மற்றும் பிரிக்கப்படாத நாட்டில் அதிகாரத்தை பகிர்ந்தளித்தல். மக்களின் மத, கலாசார மற்றும் பிற அடையாளங்களை ஏற்றுக்கொண்டு அந்த அடையாளங்களை மதித்து, இனக்குழுக்கள் மற்றும் மதக்குழுக்களுக்கு இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதில் பணியாற்றுதல்.

(5) நல்லிணக்கமும் அதன் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கும் அர்ப்பணிப்பும் உள்ள இலங்கையை கற்பனை செய்து, அத்தகைய துன்பங்கள் மீண்டும் ஏற்படாதவாறு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உருவாக்குதல்.

(6) இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச கடமைகளுக்கு இணங்குதல், சுதந்திரமான மற்றும் ஆற்றல்மிக்க வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் உலகின் ஜனநாயக, அமைதியான மற்றும் வளமான நாடுகளின் மத்தியில் நாடு அதன் பெருமையைப் பெறுவதை உறுதி செய்தல்.

இத்தகைய விடயங்களுக்கே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த கால அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டிருந்த உலகத் தமிழர் பேரவையின் மீதான தடை நீக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் இலங்கைக்கு வருவதற்கான சாதகமான வழி ஏற்படுத்தப்பட்டிருப்பது சிறந்தொரு ஆரம்பமாக அமைகிறது.

அது மாத்திரமன்றி, இந்தப் பிரகடனத்தை இரு தரப்பினரும் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்ததுடன், இதன் பின்னர் மக சங்கத்தின் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக வடக்கிற்குச் சென்று அங்குள்ள சர்வமதத் தலைவர்களிடமும் இந்தப் பிரகடனம் கையளிக்கப்பட்டிருந்தது. அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்த இந்தக் குழுவினர், இமயமலைப் பிரகடனத்தைக் கையளித்திருந்ததுடன், ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளினதும் ஆதரவு இதற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்களுக்கும் இதன் பிரதிகள் கையளிக்கப்பட்டிருந்தன.

இது தவிரவும் குறித்த பிரகடனத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கையளிக்கும் நிகழ்வில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டிருந்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த முயற்சிக்கு ஆதரவாகக் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றியிருந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களை ‘டயஸ்போரா’ என அழைப்பதை விடுத்து, அவர்களையும் எமது நாட்டின் ஒரு சமூகத்தினராக ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதில் சரத் வீரசேகர போன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தனர். இந்தக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், சிரேஷ்ட தமிழ் தலைவருமான இரா.சம்பந்தனையும் சந்தித்து இதனைக் கையளித்திருந்தனர். இந்த முயற்சியை ஒரு ஆரம்பமாகக் கருதி இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தாம் எடுத்திருக்கும் இந்த முயற்சியை அரசியல் கட்சி என்ற சார்பில் அணுகாது பொதுமக்கள் சார்பில் அதாவது இனங்கள் சார்பில் எடுக்கப்படும் முயற்சியாகப் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காது போன நிலையில் மற்றுமொரு முயற்சியாக இதனை முன்னெடுத்திருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த முயற்சி வெற்றியளிக்குமா இல்லையா என்பது தெரியாதபோதும் இதய சுத்தியுடன் தாம் முயற்சியை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருந்தபோதும், இந்த முயற்சிக்கு அரசியல் சாயம் பூசுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முயற்சிக்கின்றனர். கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்துவரும் தரப்பினராக இவர்கள் காணப்படுகின்றனர். மக்களை உருவேற்றி அதன் ஊடாக தமது அரசியலைக் கொண்டு செல்வதே அவர்களின் நோக்கமாகும்.

இந்தப் பிரகடனம் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் கையளிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். இந்த முயற்சி இதய சுத்தியுடன் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி நாட்டை சரிவிலிருந்து மீட்க முடியும் என்றே கருதப்படுகின்றது.

பி.ஹர்ஷன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division