‘கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றமானது இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இது வழியேற்படுத்தும்’ என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து எம்முடன் அவர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கே: ஜனாதிபதி அண்மையில் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள சாதகமான பதில்கள் பற்றி விளக்க முடியுமா?
பதில்: பரிஸ் கிளப்பின் 14 நாடுகள் மற்றும் இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தம் இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய சாதகமான சர்வதேச பதிலாகும். இது ஒரு முக்கிய மாற்றமாக சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது. ஒரு நீண்ட செயல்முறையை மிகக்குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய முடிந்தது. இது நம் நாட்டுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. மேலும் பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்கத்தேய நாடுகளுடனும், மத்திய கிழக்கில் ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடனும் நல்ல இருதரப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சுற்றுலாத்துறைக்கு களம் அமைக்கும் விமானங்களுக்கான வாய்ப்புகள் விஸ்தரிக்கப்படுகின்றன. ஜனாதிபதி இந்த விவகாரங்களைச் சர்வதேச ரீதியில் சிறப்பாக நிர்வகித்து வருகின்றார். அவரது தலைமைத்துவம், சர்வதேச சட்ட அறிவு மற்றும் சர்வதேச உறவுகளில் அவரது அனுபவம் இவை அனைத்தையும் சரியாக நிர்வகிக்கப் பெரிதும் உதவியது.
கே: ஜனாதிபதி அண்மையில் துபாய்க்கு விஜயம் செய்து சர்வதேச மாநாட்டில் பங்கேற்றிருந்ததுடன், பல்வேறு அரச தலைவர்களைச் சந்தித்திருந்தார். இது பற்றி தகவல் கூற முடியுமா?
பதில்: இந்தப் பயணத்தில் நமக்குக் கிடைத்த நன்மைகள் ஏராளம். கடுமையான பிரச்சினையான காலநிலை மாற்றம் குறித்து பலராலும் விவாதிக்கப்பட்டும் தீர்வு கிடைக்கவில்லை. காலநிலை மாற்ற நீதிமையத்தை நாங்கள் முன்மொழிந்தோம். அதன் மூலம் அனைத்து நாடுகளையும் ஒன்றுதிரட்டி அதற்காக குரல் எழுப்ப வேண்டும். 1983 இற்கு முன்பிருந்தே இதற்காகக் குரல் கொடுத்து வந்த நாடு எமது நாடாகும். அதைப் போன்ற ஒன்றைப் பெறுவதற்கு இந்தப் பயணத்தில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அங்கு, உலக சமூகத்தினால் நாம் அவதானிக்கப்பட்டோம். பிரேசில் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி, கிரேக்க ஜனாதிபதி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களை எமது ஜனாதிபதி சந்தித்தார். மேலும், துபாயில் உள்ள முதலீட்டுச் சமூகங்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இலங்கையில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்க முடிந்தது.
கே: சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை அரசாங்கம் பெறுவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இரண்டாவது தவணை எப்பொழுது இலங்கைக்குக் கிடைக்கும்?
பதில்: சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை இந்த மாதம் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். இதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கு எமது நாட்டின் மீது நம்பிக்கை ஏற்படும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். சென்ற வருடத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் கடந்து வந்த பாதை சரியானதா இல்லையா என்பதை எவராலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஏப்ரலில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, எரிபொருளைப் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை காணப்பட்டது. 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வரவில்லை. உரப்பற்றாக்குறை நிலவியது. டொலர் இல்லாமல் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாது போனது. ஆனால் இன்று நிலைமை முற்றாக மாறியுள்ளது. இன்று பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளோம். வரிசைகள் போய்விட்டன. சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கே: இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவின் சாதகமான பதில்களைக் குறிப்பிடுவதாயின், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக்கு இந்தச் சூழ்நிலை எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும்?
பதில்: முதல் கடன் தவணை தொடக்கம் இரண்டாவது கடன் தவணை வரை மிகவும் கடினமான பயணத்தை கடந்தே வந்துள்ளோம். இப்படி ஒரு கடினமான பயணத்தை கடந்து வந்த வெனிசுலா, ஆர்ஜென்டினா, ஜிம்பாப்வே, லெபனான் போன்ற நாடுகள் சுமார் 10-_15 வருடங்களாக சரிவான நிலையிலேயே காணப்படுகின்றன. அவர்களால் இன்னும் வெளியே வர முடியவில்லை. அந்தப் பார்வையில், நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். கடினமான பயணத்தை சரியாக நிர்வகித்து அந்த வழியில் பயணித்து வந்துள்ளோம்.
கே: சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் எத்தகைய பலத்தைப் பெறும்?
பதில்: முதலாவது, இரண்டாவது தவணையைப் பெறுவதன் மூலம் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்புகிறது. இந்தப் பணம் கிடைத்தவுடன் உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் தங்கள் பணத்தைக் கொடுக்கத் தொடங்கும். பின்னர் திறைசேரியில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பயன்படுத்தலாம். இது சாத்தியமானால், அதிக வட்டிக்கு பத்திரங்களை வாங்குவதற்குப் பதிலாக, குறைந்த விலையில் கடன்களைப் பெற முடியும். அப்போது வணிக வட்டி வீதங்கள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். வட்டி வீதத்தை 10_-11வீதமாகக் குறைக்க முடிந்தால், கடன் பெறவும், நிதி வசதிகள் மூலம் தொழில் தொடங்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இரண்டாவது கடன் தவணை பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் உதவியாக உள்ளது.
கே: வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இப்போது எந்தக் கட்டத்தில் உள்ளது?
பதில்: இதற்கு இதுவரை நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை முடித்துள்ளோம். சர்வதேசக் கடனின் இரண்டு முக்கிய வகைகளான இருதரப்பு கடன் மேலாண்மையின் அடிப்படையில் நாங்கள் நல்ல பதிலைப் பெற்றுள்ளோம். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, நாடு மீண்டும் கடனைச் செலுத்த முடியும். அப்போதுதான் திவால் நிலையில் இருந்து மீள முடியும். எனக்கு இதுவரை கிடைத்த தகவல்களின்படி, ஜப்பான் நம் நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது.
கே: கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக அரசு குறிப்பிட்ட காலக்கெடுவை அறிவிக்க முடியுமா?
பதில்: கடன் மறுசீரமைப்பு முடிந்தவுடன், கடனை முதலில் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் கடன் மறுசீரமைப்பை முடித்து, இரண்டாவது காலாண்டில் முதலில் குறைந்த வட்டியுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கடனைச் செலுத்தி, இரண்டாவதாக இருதரப்புக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவோம். அந்த வகையில் தனிநபர் கடனை குறைக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்துவதன் மூலம் மீண்டு வர முடியும் என நம்பப்படுகிறது.
கே: சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மேற்கோள்காட்டி அரசாங்கம் மக்களை ஒடுக்குவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது. இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அல்ல என்று அரசாங்கம் சொல்கிறதா?
பதில்: சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகள் கொடுத்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. வருமானம் செலவுக்கு பொருந்தவில்லை என்றால், பணத்தை வார்ப்பதே நமக்கு இருக்கும் ஒரே வழி. அதனால் 200 ரூபாயில் இருந்த ெடாலர் 400 ரூபாவுக்குச் சென்றது. பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் சரிந்தது. எங்களுக்கு கடினமான தேர்வுகள் விடப்பட்டன. எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் விமர்சித்தாலும், அவர்களின் தீர்வு என்ன?