Home » ‘சின்ன கல்லு பெரிய லாபம்’

‘சின்ன கல்லு பெரிய லாபம்’

by Damith Pushpika
December 17, 2023 6:00 am 0 comment

பத்து அணிகள், கையிருப்புத் தொகை இந்திய நாணயத்தில் 263 கோடி, நிரப்ப வேண்டிய இடங்கள் 77… சுத்தியல் கீழே வைக்கப்படும் முன் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்… இந்த இடைவெளிக்குள் யாரை வாங்குவது, யாரை வாங்கக் கூடாது எத்தனை செலவு செய்வது என்ற போட்டி இருக்கும்.

இந்திய பிரீமியர் லீக் ஏலமும் கேள்வி நிரம்பம் என்ற அடிப்படை பொருளாதாரத் தத்துவத்துக்குள் தான் இயங்கும். ஆனால் சர்வதேச கிரிக்கெட் உலகில் இப்போதெல்லா தனது தேசிய அணிக்கு அடுவதை விட ஐ.பி.எல்லில் ஆடினால் போதும் என்று நினைக்கும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எனவே, ஐ.பி.எல்லுக்கான போட்டியும் எப்போதும் இல்லாமல் அதிகரித்துவிட்டது.

உலகில் செல்வந்த கிரிக்கெட் லீக், ‘சின்ன கல்லு பெரிய லாபம்’ என்ற அளவுக்கு பணம் கொட்டும் விளையாட்டு. உலகின் செல்வந்து லீக் போட்டிகளில் ஐ.பி.எல் முன்னணியில் இருப்பதென்றால் சும்மாவா? 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பு 11 பில்லியன் டொலர்களுக்கு மேல்.

2023 தொடக்கம் 2027 ஆம் ஆண்டு வரையான ஐ.பி.எல். இன் ஊடக உரிமை 6.4 பில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டது. இதன்படி பார்த்தால் ஐ.பி.எல் போட்டி ஒன்றின் பெறுமதி மாத்திரம் 13.4 மில்லியன் டொலர்களை எட்டும். இப்பேர்ப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி டுபாயில் நடைபெறப்போகிறது.

முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியில் ஏலம் இடம்பெறப்போகிறது முக்கிய அம்சமாக இருந்தாலும், வீரர்களை வாங்குவதில் வழக்கமான போட்டிகளுக்கு இம்முறையும் பஞ்சம் இருக்காது. இந்த ஏலத்தில் போட்டியிடுவதற்கு குதித்த மொத்த வீரர்களின் எண்ணிக்கை 1166. ஆனால் அணிகளின் தேவை, திறமை அடிப்படையில் அந்த எண்ணிக்கை 333 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி குறைக்கப்பட்ட வீரர்களில் 214 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதோடு 119 வீரர்கள் வெளிநாட்டினர். அதிலும் இரு வீரர்கள் நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதிலே சர்வதேச அனுபவம் பெற்ற வீரர்கள் என்று பார்த்தால் 116 பேர் இருப்பார்கள், 215 வீரர்கள் அனுபவம் பெற்றவர்கள் அல்ல. என்றாலும் ஏலத்துக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் என்று பார்த்தால் அனைவரும் திறமையானவர்களாகத் தான் இருப்பார்கள்.

சர்வதேச அனுபவம் பெற்ற துடுப்பாட்ட வீரர்களுடனேயே ஏலம் ஆரம்பிக்கப்படும், தொடர்ந்து சகலதுறை வீரர்கள், விக்கெட் காப்பாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்று ஏலம் விடப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து சர்வதேச அனுபவம் பெறாதவர்கள் ஏலத்துக்கு வருவார்கள்.

ஐ.பி.எல் தனது விறுவிறுப்பு, போட்டித் தன்மை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் வீரர்களை தேர்வு செய்யும். இதற்காக பத்து அணிகளும் ஏற்கனவே யாரை வாங்குவது, யாருக்கு எவ்வளவு பணத்தை செலவிடுவது என்ற திட்டத்தை வகுத்திருக்கும்.

ஏலத்தில் அதிக அடிப்படை விலையான இந்திய நாணயத்தில் 2 கோடி ரூபாவுடன் வரும் வீரர்கள் எண்ணிக்கை 23. 1.5 மில்லியன் அடிப்படை விலையுடன் 13 வீரர்கள் ஏலத்துக்கு வந்திருக்கிறார்கள்.

துடுப்பாட்ட வரிசையை பார்த்தோம் என்றால் இங்கிலாந்தின் ஹர்ரி புரூக்கிற்கு அதிக கேள்வி இருக்கும். முந்தைய ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைபோன ஒருவர். அவரை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 13.25 கோடி ரூபாவுக்கு வாங்கியது. என்றாலும் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. 11 இன்னிங்ஸ்களில் 19 ஓட்டங்களையே பெற்றார். அதிலும் 100 ஓட்டங்கள் ஒரே ஒரு இன்னிங்ஸில் பெற்றது. எனவே அவரை விடுவித்தது ஹைதராபாத் அணி.

மற்றொரு அதிக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் துடுப்பாட்ட வீரர் அவுஸ்திரேலியாவின் ட்ரவிஸ் ஹெட். அவர் ஆறு ஐ.பி.எல் பருவங்களில் விளையாடி இருக்கிறார். என்றாலும் அண்மையில் இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா சம்பியனானது, அதன் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்றது என்று ஹெட்டின் கிராக்கி அதிகரித்திருக்கிறது.

உலகக் கிண்ணத்தில் சோபித்து அதிக அவதானத்தை பெற்ற மற்றொரு வீரர் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து சகலதுறை ஆட்டக்காரர் அஸ்மதுல்லா ஒமர்சாய். உலகக் கிண்ணத்தில் எட்டு இன்னிங்ஸ்களில் 353 ஓட்டங்களை பெற்று ஆப்கான் அணிக்காக அதிக ஓட்டங்கள் பெற்றவராவார். தவிர தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏலத்தில் அவரது அடிப்படை விலை 50 இலட்சம் ரூபாவாக இருந்தாலும் அது பல மடங்கு உயரலாம்.

ஆப்கானின் 16 வயது சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசன்பாரும் ஏலத்தில் இடம்பெற்றிருக்கிறார். அதேபோன்று அந்த அணியின் வயதானவரான 39 வயது முஹமது நபியும் இருக்கிறார். என்றாலும் இவர்கள் வாங்கப்படுவதற்கான உத்தரவாதம் குறைவு தான்.

இலங்கையை பெறுத்தவரை எட்டு வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள். கடந்த ஐ.பி.எல் தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் இடம்பெற்ற இலங்கையின் முன்னணி சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை அந்த அணி விடுவித்த நிலையில் ஒன்றரைக் கோடி அடிப்படை விலையுடன் ஏலத்தில் குதிக்கிறார்.

கடந்த ஐ.பி.எல். இல் போதுமாக சோபிக்கவில்லை. உபாதையால் உலகக் கிண்ணத்தில் ஆடவில்லை. போதாக்குறைக்கு சத்திரசிகிச்சை செய்து தற்போது புனர்வாழ்வு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, அவரை வாங்குவதா, இல்லையா என்று அணிகள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும்.

இலங்கை மட்டுப்படுப்படுத்தப்பட்ட ஓவர் தலைவர் தசுன் ஷானக்கவின் கதை இதனை விடவும் மோசம். கடந்த முறை இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய புண்ணியத்தில் குஜராத் டைட்டன்ஸ் காயத்துக்கான மாற்று வீரராக அவரை வாங்கியது. என்றாலும் போட்டிகளில் சோபிக்கவில்லை. இதனால் அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

50 இலட்சம் ரூபா அடிப்படை விலையுடன் ஏலத்தில் இடம்பெற்றிருக்கும் தசுன் ஷானக்க உலகக் கிண்ணத்தில் காயத்தால் பாதியில் விலகினார். அவரது துடுப்பாட்டமும் அண்மைக் காலமாக சரியாக இல்லை. எனவே அவர் விலைபோவதும் சந்தேகமே.

பானுக்க ராஜபக்ஷ, டி20 கிரிக்கெட்டின் தனித்துவமான வீரர். ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்று வந்த அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடினார். என்றாலும் போதுமாக சோபிக்காததால் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பானுக்க கடைசியில் ஏலத்திற்கான 333 வீரர்களில் ஒருவராகக் கூட இடம்பெறவில்லை.

பானுக்க ராஜபக்ஷ முன்னர் இலங்கை அணியில் முக்கிய துடுப்பாட்ட வீரராக இடம்பெற்று வந்தபோதும், தேசிய அணியில் ஆடுவதை விடலும் உலகெங்கும் நடக்கும் லீக் கிரிக்கெட்டில் ஆடுவதற்கே அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதனால் தேசிய அணியில் இருந்து படிப்படியாக விடுபட்டுப்போன அவருக்கு இப்போது ஐ.பி.எல் தொடரிலும் இடம் கிடைக்கவில்லை.

இலங்கையின் அனுபவ வீரரும், முன்னாள் அணித் தலைவருமான அஞ்சலோ மத்தியூஸ் 2 கோடி ரூபா அடிப்படை விலையுடன் ஐ.பி.எல் ஏலத்தில் தம்மை பதிவு செய்தபோதும் கடைசி பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு அவர் தகுதியானவராக இருக்கவில்லை. அதிக வயது, தேசிய அணியில் நிரந்தர இடமில்லை, குறிப்பிடும்படியாக திறமையை வெளிப்படுத்தாதது என்று ஏலத்தில் கூட இடம்பெறாத அளவுக்கு அவரை தள்ளிவிட்டது.

என்றாலும் இந்த ஏலத்தில் குதித்திருக்கும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அண்மையில் நடந்த உலகக் கிண்ணத்தில் அவர் அபாரமாக பந்து வீசினார். 9 போட்டிகளில் மொத்தம் 21 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

அவருக்கு நிர்ணயித்திருக்கும் அடிப்படை விலை 50 இலட்சம் ரூபா. என்றாலும் அவரை வாங்க அதிக அணிகள் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. எனவே அவரது விலை அதிகரிக்கக் கூடும்.

இந்த ஏலத்தில் போட்டியிடும் மற்ற இலங்கை வீரர் குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, துஷ்மன்த சமீர, லஹிரு குமார மற்றும் நுவன் துஷார ஆகியோராவர். என்றாலும் இவர்கள் வாங்கப்படுவதற்கான உத்தரவாம் பெரிதாக இல்லை.

என்றாலும் நடப்புச் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தன்னிடம் உள்ள இலங்கை வீரர்களான மதீஷ பத்திரண மற்றும் மஹீஷ் தீக்ஷனவை தக்கவைத்துக்கொண்டது.

அடிப்படையில் ஐ.பி.எல் என்பது இந்தியாவின் கிரிக்கெட் தொடர். இந்திய வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ஐ.பி.எல் வருகைக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் திறமையும் சாதகமான போக்கிற்கு மாறி இருக்கிறது.

விராட் கொஹ்லி (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர்), எம்.எஸ். தோனி (சென்னை சுப்பர் கிங்ஸ்), ஜஸ்பிரிட் பூம்ராஹ் (மும்பை இந்தியன்ஸ்) போன்ற வீரர்கள் ஒரு முறைதான் ஏலம் எடுக்கப்பட்டார்கள். அது தொடக்கம் அந்தந்த அணிகளால் தக்கவைக்கப்பட்டு மீண்டும் ஏலத்திற்கு வரவே இல்லை. மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் ஒரு காலத்தில் ஐ.பி.எல். இல் ஒரு கலக்கு கலக்கி இருந்தார். இன்று வயது மூப்பு காரணமாகவோ என்னவோ ஐ.பி.எல். இல் இடமே இல்லை. இத்தனைக்கும் அவர் இன்னும் ஒய்வை அறிவிக்கவில்லை.

கடந்த தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அதிகபட்சமான 38.15 கோடி ரூபா பணத்துடன் ஏலத்திற்கு வருகிறது. அதன் அணித் தலைவர் ஹார்திக் பண்டியா மும்பை இந்தியன்ஸுக்கு சென்றதாலேயே இத்தனை பணம் அதன் கைவசம் இருக்கிறது. கடந்த தொடரில் அதிக ஓட்டம் பெற்ற ஷுப்மன் கில் குஜராத் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு அடுத்து சன்ரைசஸ் ஹைதராபாத் (34 கோடி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (32.7 கோடி) அதிக பணத்தை வைத்திருக்கின்றன.

என்றாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களுடன் 12 வீரர்களுக்கான இடங்கள் எஞ்சியுள்ளன.

ஐ.பி.எல். ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு அதிக கேள்வி இருந்தபோதும், சர்வதேச அனுபவம் பெற்ற அண்மைக் காலத்தில் அதிக சோபித்து வரும் வீரர்கள் அதிக விலைக்கு ஏலம்போவது வழக்கம். இதில் அண்மையில் நடந்த உலகக் கிண்ணப் போட்டி தொடக்கம் பிராந்திய மட்டப் போட்டிகள் வரை வீரர்கள் ஏலத்தில் தாக்கம் செலுத்தும் காரணியாக இருக்கும்.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division