Home » நல்லிணக்க விரோதிகள்!

நல்லிணக்க விரோதிகள்!

by Damith Pushpika
December 17, 2023 6:00 am 0 comment

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு இதுவரை எட்டப்படாமைக்கு அரசியல்வாதிகளே காரணகர்த்தாக்களாவர். இறுதித்தீர்வுக்கான முயற்சிகளை அரசியல்வாதிகள் பலர் முளையிலேயே கிள்ளியெறிகின்ற காரணத்தினால், இணக்கப்பாட்டுக்கான தீர்வே கைகூடாமல் போய்விடுகின்றது.

இவ்வாறான அரசியல் குழப்பவாதிகளின் காரியங்களால் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பல தடவைகளில் சாத்தியப்படாமல் போயுள்ளன என்பது நாம் சந்தித்துள்ள வரலாறு ஆகும். இவ்வாறான அரசியல்வாதிகள் பெரும்பான்மை தரப்பினர் மத்தியில் மாத்திரமன்றி, சிறுபான்மை தரப்பினர் மத்தியிலும் உள்ளனர்.

‘அரசியல் தருமம்’ மறந்தவர்கள் எமது நாட்டில் பலர் உள்ளனர். அவர்கள் இனநல்லிணக்கத்தையும், அரசியல்தீர்வையும் ஒருபோதுமே விரும்புவதில்லை. அவர்களது நோக்கம் ஒன்றேயொன்றுதான்!

இலங்கையில் இனஐக்கியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதும், சிறுபான்மையினரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதுவுமே அவர்களது எண்ணமாகும்.

இறுதித்தீர்வு வந்துவிடுமானால், அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு வழியில்லாமல் போய்விடும்.

இனமுறுகல்கள் எக்காலமும் தொடர்ந்தாலேயே அரசியலை தொடர்ந்து நடத்த முடியும்.

இவ்வாறுதான் அவர்கள் நினைக்கின்றனர். இனநல்லிணக்கத்துக்கான அத்தனை தீர்வு முயற்சிகளையும் அவர்கள் எதிர்க்கின்றனர். இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வகையில் அவர்கள் அறிக்கைகைளை வெளியிடுகின்றனர். மக்களை எக்காலமும் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதே அவர்களது திட்டம்!

இனநல்லிணக்கத்துக்கான தீர்வு முயற்சியொன்று ஆரம்பிக்கப்படுகையிலேயே, அதன் சாதகபாதகங்களை ஆராய்ந்து பார்க்காமல் எதிர்ப்புக் கருத்து வெளியிடுவது எவ்வகையில் நியாயம்? அவ்வாறானால் இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வு முயற்சியுமே ஆரம்பிக்கப்படலாகாது என்று அவர்கள் விரும்புகின்றனரா?

ஐக்கியத்துக்கான முயற்சிகளைக் குழப்புவதற்கென்றே பெரும்பான்மையினத் தரப்பிலும், சிறுபான்மையினத் தரப்பிலும் அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். எமது நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்கெல்லாம் உண்மையான காரணகர்த்தாக்கள் அவர்களேயாவர்.

இது இவ்வாறிருக்க, தற்போதும் ஐக்கியத்துக்கான முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதைக் காண முடிகின்றது.

உலகத் தமிழர் பேரவையினரும், பௌத்த சங்கத்தினரும் இணைந்து இனஐக்கியத்துக்கான முன்னெடுப்பொன்றை ஆரம்பித்திருக்கின்றனர். இது தொடர்பாக பௌத்தமத பீடாதிபதிகள் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் போன்றோரை உலகத்தமிழ் பேரவையினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

‘இமயமலைப் பிரகடனம்’ என்பதை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்படுகின்ற இம்முயற்சிக்கு வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் ஆரம்பத்திலேயே தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். அம்முயற்சியின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து பார்க்காமலேயே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை வேடிக்கையானது. நாட்டில் இனஐக்கியம் தோன்ற வேண்டுமென்று அவர்கள் உண்மையிலேயே விரும்புவார்களானால், இத்தகைய அபத்தமான அறிக்கைகளை கைவிட வேண்டியது முதலில் அவசியம்!

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division