Home » பொத்துவில் அஸ்மின் வரிகளில் தேவாவின் அசத்தல் ஆல்பம்!

பொத்துவில் அஸ்மின் வரிகளில் தேவாவின் அசத்தல் ஆல்பம்!

by Damith Pushpika
December 17, 2023 6:00 am 0 comment

தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் தனது அடுத்த ஆல்பத்துக்காக ‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில் அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

தமிழ் சினிமாவில் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு இதுவரை பாடல்கள் எழுதியுள்ள அஸ்மின், இலங்கையிலும் தமிழகத்திலும் ‘மோஸ்ட் வான்டட்’ பாடலாசிரியராக கவனம் ஈர்த்திருக்கிறார்.

‘முத்து முத்து கருவாயா’ மூலம் ஏற்கனவே வெற்றிப் பாடலைக் கொடுத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா, -அஸ்மின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய கவிஞர் பொத்துவில் அஸ்மின், “தேவாவின் குரலில் அமைந்த ஹிட் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்க தயாராகி வருகிறது. பாடல் தலைப்பையும் புரோமோவையும் மிக விரைவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன,” என்று கூறினார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division