உலகின் 7 அதிசயங்களில் சீனப்பெருஞ்சுவரும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இந்த சீனப்பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பண்டைய சீன அரசர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக வலிமையான கோட்டைகளையும், சுற்றுச்சுவர்களையும் எழுப்பினர் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
சீனாவின் வடபுலத்தில் உள்ள மங்கோலியா என்னும் நாட்டிலிருந்து நாகரிகம் இல்லாத நாடோடிகள் அடிக்கடி படையெடுத்து வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக ஏறத்தாழ 2,200 ஆண்டுகளுக்கு முன்பு ஷயுவால்டீ என்ற மன்னன் இந்த நீண்ட சுவரை எழுப்பியதாகக் குறிப்பு உள்ளது. இதன் நீளம் 5 ஆயிரத்து 500 மைல்கள். உயரமான சிறுசிறு கண்காணிப்பு கோபுரங்கள் ஆங்காங்கே அதிக அளவில் காணப்படுகின்றன. சுவரின் அடிப்பகுதி அகலம் 8 மீற்றர். மேற்பகுதி அகலம் 5 மீற்றர். சுவரின் இடையில் மண், செங்கல், கருங்கல் நிரப்பி பாதைபோல் செய்துள்ளனர். சுவரின் மேலுள்ள இருப்புப் பாதை, குதிரை வீரர்கள் செல்ல ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரச வம்சங்களின் ஆட்சியின் கீழ் பல ஆண்டுகளாகக் கட்டப்பட்டிருக்கலாம் என்ற செய்திகள் உள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஷி ஹுவாங் லீ என்ற மன்னன் (கி.மு. 221) தனித்தனியாக இருந்த சுவர்களை ஒன்றாக இணைத்தார். இவர் சின் வம்சத்தைச் சேர்ந்தவர். கி.மு. 246-ல் சீனா பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்தது. அரசர் ஷ ஹவாங் லீ ஒன்றாக இணைத்து பேரரசாக்கியுள்ளார். இரு சுவர்களுக்குமிடையே படிக்கட்டுகள் உள்ளன. இச்சுவரின் பல பகுதிகள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. சூய் மரபுக் காலத்தில் (கி.பி. 589 _ 618) நீளம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான விரிவாக்கம் மிங்க் வம்ச காலத்தில் நிகழ்ந்திருப்பதாக குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த சுவரை எழுப்புவதற்கு, நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இரவு பகல் என்று வேலை பார்த்துள்ளனர். சீன பெருஞ்சுவரில் இரு உருவப் பாறைகள் காணப்படுகின்றன. இதற்கு, செவிவழிக் கதை ஒன்று உள்ளது. சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய பணியாளர்களுள் மீங்ஜியாங் என்ற பெண்ணின் கணவனும் ஒருவன். வேலைக்குச் சென்ற அவன், பல ஆண்டுகளாகியும் வீட்டிற்கு வரவில்லை. கவலையுற்ற மனைவி, கணவன் வேலை செய்யும் இடத்திற்குத் தேடி வருகிறாள். வேலையாட்கள் நிறையப்பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். கணவனை உடனடியாகக் காணமுடியாமல் தவிக்கிறாள். காத்திருந்து கணவனைப் பார்க்கிறாள். அப்போது, வேலை நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு பாறாங்கல் உருண்டு, அவனது தலையில் விழுகிறது. கணவரின் உயிர் உடலைவிட்டுப் பிரிகிறது. மனம் தாங்காத மனைவியும் அதே பாறையில் மோதி மோதி அழுது, தலையில் அடிபட்டு உயிர் துறக்கிறாள். இந்தத் தம்பதியரின் உருவம்தான் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது என்று மக்களால் வழிவழியாக நம்பப்பட்டு வருகிறது. விண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்த வீரர்கள் கடல், மலை என்ற இயற்கை வளங்களுடன், செயற்கையாக மனிதனால் உண்டாக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவரை மட்டுமே பார்த்ததாகக் கூறியுள்ளனர். அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக சுவரின் தேவைப்படும் பகுதிகள் அவ்வப்போது இடிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நெடுஞ்சுவரைப் பார்ப்பதற்கு, இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆர்வத்துடன் வருபவர்கள் சுவரின் நீளம் முழுமையையும் பார்த்துவிட முடியுமா என்றால் முடியாது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இப்போது கம்பி ரயில் (கேபிள் கார்) வசதி அமைக்கப்பட்டுள்ளது. விண்பவுதியான் என்பவர் 2 ஆண்டுகள் சுவர் மீது நடந்து முழு நீளத்தையும் கடந்துள்ளார்.
இன்னும் 20 ஆண்டுகளில் சீனப்பெருஞ்சுவரின் ஒரு சில பகுதிகள் மறைந்து போகலாம். மண்ணால் செய்யப்பட்ட இப்பகுதிகள் காற்றிலும் மழையிலும் கரைந்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.அரண்மனையைச் சுற்றி கோட்டைச்சுவர் எழுப்புவது சாதாரணம். இங்கே நாட்டைச்சுற்றி கோட்டைச் சுவர், அதிலும் எந்த நவீன வசதிகளும் இல்லாத காலம்.வெறும் மனித வலுவை நம்பி எழுப்பப்பட்ட நெடு மதில்.