Home » வங்குரோத்து நிலையிலிருந்து 18 மாதத்தில் மீண்டது இலங்கை!

வங்குரோத்து நிலையிலிருந்து 18 மாதத்தில் மீண்டது இலங்கை!

by Damith Pushpika
December 12, 2023 6:48 am 0 comment

பொருளாதார நெருக்கடியால் பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ள நாட்டை மீட்டெடுத்து சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டுள்ளது என்ற அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தினால் இம்மாதத்தில் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகள் உள்ளிட்ட கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்புக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் இரண்டாவது தவணை கிடைப்பதற்கான சமிக்ஞைகள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகும் என்ற கருத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார முறைகளின் அடிப்படையில் முன்னேறிச் செல்ல வேண்டும். அவ்வாறில்லாமல், பழைய பொருளாதார முறைகளை அமுல்படுத்தினால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இலங்கையைப் பொறுத்த வரையில் கடந்த 2022ஆம் ஆண்டு மிகவும் சவால் மிக்க வருடமாக அமைந்தது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் எடுத்த ஒருசில தவறான பொருளாதாரத் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைச் சாத்தியமற்ற அணுகுமுறைகளால் நாடு வெகவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக பெறுமதிசேர் வரியைக் கணிசமாகக் குறைப்பதற்கு எடுத்த முயற்சி பொருளாதாரத்தை முற்றாகப் பாதிப்புக்குள் தள்ளியது. தமக்கு நெருக்கமான வர்த்தகத் தரப்பினரை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் கருத்தில் கொள்ளாமல் வரியைக் குறைப்பதற்கான தீர்மானத்தை முன்னைய அரசு எடுத்தது.

இதனால் ஏற்பட்ட விளைவு நாட்டைப் பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதித்தது. இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த நிலைமையச் சமாளிக்கும் நோக்கில் மத்திய வங்கியின் ஆளுநர் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டமை குறித்து மாற்றுக் கருத்துக்கள் காணப்படுகின்ற போதும், நாட்டை பாதிப்பிலிருந்து மீட்பதற்கு அந்த அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர வேறு மாற்றுத் தெரிவு இருக்கவில்லையென மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்ற அறிவிப்பினால் கடன்களை செலுத்தாமல் இருப்பது மாத்திரமன்றி, இலங்கைக்குக் கிடைத்துவந்த பல்வேறு கடன் உதவிகள் மற்றும் நிதி உதவிகள் என்பனவும் நிறுத்தப்பட்டன.

மத்திய வங்கியின் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்றும், நாட்டின் நிதி குறித்த கட்டுப்பாட்டைக் கொண்ட பாராளுமன்றத்தின் கருத்துக் கேட்கப்படவில்லையென்றும் பல்வேறு அரசியல்வாதிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான பின்னணியிலேயே இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் உதவியைக் கோரியது. இதற்கு அமைய 48 மாதங்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

இதன் முதலாவது தவணை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு கடன் மறுசீரமைப்பில் இணக்கப்பாடு அவசியம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், கடந்த வாரம் சர்வதேச கடன்படுனர்களும் கடன்மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது என்ற அறிவிப்பை இம்மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அண்மையில் பிட்டகோட்ட பிரதேசத்தில் நடைபெற்ற அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டை 18 மாதங்களில் வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டுள்ளதாகவும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மத்திய வங்கி ஏற்கனவே பணம் அச்சிடுவதை நிறுத்தி விட்டது. அத்துடன் அபிவிருத்திக்காக அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் இல்லாமல் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியாது. நாட்டுக்கு நிதி ஒழுக்கம் தேவை. பொருளாதாரத்தை நிதி ஒழுக்கத்துடன் நிர்வகித்தால், எதிர்காலத்தில் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க முடியும்.

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளி மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், அரசின் செலவினங்களை குறைக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் புதிய திட்டங்களை தயாரித்துள்ளோம். சுற்றுலாத்துறையின் மூலம் அதிக அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்.

அடுத்த ஆண்டு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சமாக உயர்த்தினால் இந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளைப் பெற முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, வங்குரோத்து நிலையிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்படும் பட்சத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச கடன் உதவிகள் மற்றும் நிதி உதவிகள் என்பன கிடைக்கப்பெறும். குறிப்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தான கடன் உதவிகளால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கும் 20 பில்லியன் ரூபா கடனின் ஊடாக கிராமிய வீதிகள் உள்ளிட்ட பல்வேறு வீதிக் கட்டமைப்புக்களை முன்னெடுக்க முடியும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். இதுபோன்று பல்வேறு வீதி அபிவிருத்திப் பணிகள் மற்றும் பாலம் அமைப்புப் பணிகள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றையும் ஆரம்பிப்பதற்கு இயலுமானதாக அமையும்.

அதேநேரம், ஜனாதிபதி கூறியதைப் போன்று பழைய பொருளாதாரக் கொள்கைகளை மீண்டும் கடைப்பிடிப்பது பாரிய பின்னடைவை மீண்டும் நாட்டுக்கு ஏற்படுத்தும். எனவே, அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களும் நாட்டை முன்னேற்றமான நிலைக்குக் கொண்டு செல்ல உறுதுணையாக இருக்கும். இதற்கு அரசாங்க நிறுவனங்கள் வினைத்திறனான முறையில் செயற்படுவதும் அத்தியாவசியமானதாகும்.

பி.ஹர்ஷன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division