Home » முஷ்பிக்கும் மத்தியூஸும்

முஷ்பிக்கும் மத்தியூஸும்

by Damith Pushpika
December 10, 2023 6:22 am 0 comment

முஷ்பிகுர் ரஹீம் பந்தை கையால் பிடித்து அட்டமிழந்தபோது, “அஞ்சலோ மத்தியூஸ் மூலையில் இருந்து சிரித்துக்கொண்டிருப்பார்” என்று சமூகதளத்தில் யாரோ நகைச்சுவையாக எழுதி இருந்தார்.

உலகக் கிண்ணத்தில் மத்தியூஸுக்கு கால தாமதத்திற்காக ‘டைம் அவுட்’ முறையில் பங்களாதேஷ் ஆட்டமிழப்புக் கேட்டபோது யாரும் பெரிதாக நம்பவில்லை. அது நாகரிகம் இல்லை என்று பலரும் கூறினார்கள். ஆனால் பங்களாதேஷ் சட்டப் புத்தகத்தை வைத்துக்கொண்டு வாதிட்டது.

கடைசியில் மத்தியூஸ் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை டைம் அவுட் ஆகி வெளியேற வேண்டியதாயிற்று.

மிர்பூரில் நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீமுக்கு இதே போன்ற ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது. கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி முதல் நாள் ஆட்டத்தில் 5ஆவது வரிசையில் வந்த முஷ்பிகுர், 41 ஆவது ஓவரை எதிர்கொண்டபோது அது நடந்தது.

கைல் ஜெமிசன் வீசிய பந்துக்கு தடுத்தாடிய முஷ்பிகுர் துடுப்பில் பட்டு துள்ளிச் சென்ற பந்து விக்கெட்டுக்கு செல்லாமல் இருக்க இடது கையால் தட்டிவிட்டார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி களத்தடுப்பை தடுத்ததற்காக ஆட்டமிழப்புக் கோரியது. தொடர்ந்து இதனை ஆராய்ந்த மூன்றாவது நடுவர் முஷ்பிகுர் ரஹீமுக்கு ஆட்டமிழப்பு வழங்கினார்.

இதுவும் சட்டப் புத்தகத்தில் இருக்கும் ஆட்டமிழப்புத்தான். முன்னர் “கையால் பந்தை பிடிப்பது” என்ற வகையராவுக்குள் இருந்த இந்த ஆட்டமிழப்பு முறை 2017 இல் மாற்றம் செய்யப்பட்டு “களத்தடுப்பை தடுக்கும்” வகையாராவுக்குள் சேர்க்கப்பட்டது.

எப்படி இருந்தபோதும் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை கையால் பிடித்து ஆட்டமிழக்கும் முதல் வீரர் முஷ்பிகுர் தான். இதற்கு முன் 1951 ஆம் ஆண்டு ஓவலில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் லென் ஹட்டன் இப்படி பந்தை கையால் பிடித்து ஆட்டமிழந்திருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு விதி மாற்றப்படுவதற்கு முன்னர் பந்தை கையால் பிடித்தற்காக ஏழு வீரர்கள் டெஸ்ட் வரலாற்றில் ஆட்டமிழந்திருக்கிறார்கள்.

டைம் அவுட் விதியை கையாண்டு வீரர் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்யும் வித்துவம் தெரிந்த பங்களாதேஷ் வீரர்களுக்கு துடுப்பெடுத்தாடும்போது பந்தை கையால் பிடிக்க முடியாது என்ற சாதாரண விதி தெரியாமல்போனதுதான் பெரும் கவலை. என்றாலும், முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழந்த பின்னர்தான் பங்களாதேஷ் வீரர்களுக்கு அஞ்சலோ மதியூஸும் ஞாபத்திற்கு வருகிறார்.

முஷ்பிகுர் ஆட்டமிழந்த தினம் போட்டி முடிவில் நடந்த ஊடக சந்திப்பில் பேசிய பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர் மஹதி ஹசன் கூறியதாவது,

“இது வேண்டும் என்று நடந்ததல்ல போகின்ற போக்கில் நடந்தது. தெரிந்தே அட்டமிழக்க யாரும் விரும்புவதில்லை. போட்டி ஒன்றில் பல்வேறு பட்ட சூழல்களில் மனதில் பல விடயங்களும் வந்து போய்க்கொண்டிருக்கும். உலகக் கிண்ணத்தில் எமக்கு சாதகமாக இலங்கை துடுப்பாட்ட வீரர் ஒருவருக்கு எதிராக டைம் அவுட் ஆட்டமிழப்பை பெற்றோம், ஆனால் இன்று அது முஷ்பிகுர் ரஹீமுக்கு நடந்துவிட்டது. அது போகின்ற போக்கில் நிகழ்கின்ற ஒன்று” என்றார்.

அரிதான முறையில் நிகழும் ஆட்டமிழப்புகள் என்பது எப்போதுமே சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். ஆனால் மத்தியூஸின் ஆட்டமிழப்புக்கும் முஷ்பிக்கின் ஆட்டமிழப்புக்கும் இடையே சர்ச்சைகளைத் தாண்டி ஒரு தார்மீக முரண்பாடு இருப்பது கிரிக்கெட் உலகில் எல்லோருக்கும் தெரியும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division