திரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது எளிதானதல்ல. துடுப்பெடுத்தாடுபவருக்கு விக்கெட்டில் நீடிப்பதற்கு பல மாற்று வழிகள் இருந்தாலும், பந்து வீசுபவருக்கு விக்கெட்டை வீழ்த்துவது மட்டுமே குறிக்கோளாக இருக்கும். அதன் வெற்றி தோல்வி தங்கியிருப்பது பந்து வீச்சாளரின் திறமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்தாகும். சர்வதேச கிரிக்கெட் துறையில் எவ்வாறிருந்தாலும், பாடசாலை கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
அந்த வகையில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரிஷி யுதான் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் அண்மையில் பத்தரமுல்ல, ஜயவர்தனபுர எம்.டி.எச். ஜயவர்தன கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் எதிரணிக்கு ஓட்டங்கள் எதனையும் எடுக்க வாய்ப்பளிக்காமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் பத்து வயதே நிரம்பிய யுதான், தனது பாடசாலையின் 13 வயதுக்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி காட்டிய இந்த சாதனையானது பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் 47 ஆண்டு சாதனையை சமனாக்கியுள்ளது.
இதற்கு முன்னர் 1976ம் ஆண்டு அப்போதைய 12 வயதுக்குக் கீழான பாடசாலை கிரிக்கெட் போட்டியில் கோட்டை சென் தோமஸ் கல்லூரி அணிக்கு எதிராக நாலந்தா கல்லூரியின் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளராகச் செயற்பட்ட கபில விக்ரமசூரிய இந்த சாதனையை ஏற்படுத்தி இருந்ததோடு, அதன்பின்னர் 47 வருடங்கள் வரைக்கும் அந்த சாதனையை சமப்படுத்த இந்நாட்டு பாடசாலை கிரிக்கெட் அணிகளின் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் முடியாமல் போனது.
சுழற்பந்து வீச்சாளரான ரிஷி யுதான் 13 வயதுக்குக் கீழான இந்துக் கல்லூரி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சாதனையை ஏற்படுத்தியிருப்பது அவருக்கு 10 வயதான் ஆகிறது என்பது விசேட அம்சமாகும். இந்துக் கல்லூரியின் 13 வயதுக்குட்பட்ட அணியின் ஆரம்ப பந்துவீச்சாளரான இவர் அந்தப் போட்டியில் எடுத்த 8 விக்கெட்டுகளில் நான்கு விக்கெட்டுகள் பந்து நேரடியாக விக்ெகட்டில் மோதி வீழ்த்தப்பட்டவையாகும்.
மீதி 4 விக்கெட்டுகளும் உயரப் பந்துகளாகப் பிடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டன.
தற்போது பாடசாலை கிரிக்கெட் துறையில் மாத்திரமின்றி இந்நாட்டு தேசிய மட்ட கிரிக்கெட்டிலும் அதிகளவு பேசு பொருளாகியுள்ள இந்த சிறிய சாதனை வீரனைத் தேடி நாம் நாரஹென்பிட்டி மாதா வீதியில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றோம்.
“எனது மகனுக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டில் விருப்பம் இருந்தது. அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போதே விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் நான் அவரது ஏழாவது வயதில் அவரை பிராண்டன் குறுப்பு சேரின் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தேன். பிராண்டன் சேர்தான் எனது மகனின் முதலாவது கிரிக்கெட் பயிற்சியாளராகும்” என்ற தகவலை கூறியவாறு எம்மோடு இணைந்து கொண்டவர் ரிஷி யுதானின் தந்தையான செல்வசேகரமாகும்.
“ஆரம்ப காலத்தில் மகன் துடுப்பாட்டத்தில் தான் திறமை காட்டினார். எமது மகனுக்கு பிராண்டன் சேர் பெருமளவில் உதவி செய்துள்ளார். இந்து கல்லூரியில் அவர் சேர்ந்ததன் பின்னர் தான் அவரது கிரிக்கெட் துறை திறமை மேன்மையடைந்தது. ஆரம்பத்தில் இந்துக் கல்லூரியின் 13 வயதின் கீழ் அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கு முன்னர் ஆரம்ப பயிற்சி செயலமர்வுகளின் போது மகனின் திறமைகள் தொடர்பில் கல்லூரியின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான கார்த்திக் செல்வம் சேர் மிகத் தெளிவாக இருந்தார்.
அதன்பின்னர் 13 வயதுக்குட்பட்ட அணியில் மகன் இணைத்துக் கொள்ளப்பட்டார்” என்றார் செல்வசேகரம்.
முச்சக்கர வண்டி ஓட்டுனரான செல்வசேகரமும் அந்தக் காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்ததோடு, அவர் வத்தளை ரோயல் கிரிக்கெட் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் விளையாடியுள்ளதாக குறிப்பிட்டார்.
“என்றாலும் தொடர்ந்தும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவதற்கு முடியாமல் போனது. நான் மூன்றாம் டிவிசனில் விளையாடியதும் திருமணத்திற்கு பின்னர் தான். எங்கள் சிறிய மகன் ஷெயோன் ஆருஷ் பிறந்த பிறகு, அவரது உடல்நிலை சரியில்லாததால் நான் விளையாட்டிலிருந்து ஒதுங்கிவிட்டேன்” என்றார் அவர்.
விளையாட்டில் மாத்திரமின்றி விற்பனை பிரதிநிதி மற்றும் முகாமையாளராக பணியாற்றிய விற்பனை நிறுவனத்திலிருந்தும் செல்வசேகரம் வெளியேறியது அவரது இரண்டாவது மகனின் நோய் நிலையின் காரணமாகவாகும். தனது மகனின் நோய்நிலை காரணமாக அவருக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதனாலேயே தற்பொழுது அவர் முச்சக்கர வண்டி ஓட்டுனராக இருக்கிறார்.
எத்தனை சிரமங்கள் வந்தாலும் மூத்த மகனின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்வதற்கு இயன்ற பங்கை ஆற்ற வேண்டும் என்பதே செல்வசேகரத்தின் ஒரே குறிக்கோளாகும். மனைவி நித்யா பொன்னம்பலமும் ரிஷி யுதானின் கிரிக்கெட் வாழ்க்கைக்காக அதிக பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, வீட்டில் உள்ள வறுமையை போக்க உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்.
“மகனுக்கு தேவையான கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்கு நிறைய செலவாகிறது. அதற்காக நானும் வருமான வழியை தேடிக்கொள்வதற்காக கேக் வகைகள், சிற்றுண்டி வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறேன். எமது மகன் என்றோ ஒரு நாள் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை காண்பதே எங்களது பெரிய கனவாக உள்ளது. இதுவே எனது கணவரின் பெரிய கனவாகும். காரணம் கிரிக்கட்டில் உயர்ந்த இடத்துக்கு போவதற்கு அவராலும் முடியாமல் போனது. தன்னால் சாதிக்க முடியாமல் போனதை மகன் சாதிக்க வேண்டும் என்றே எனது கணவரும் அடிக்கடி கூறுவார்” எனக் கூறினார் நித்தியா.
நித்யாவும் செல்வசேகரமும் தங்கள் கிரிக்கெட் ஹீரோவுக்கு ஒரு வித்தியாசமான பெயரை வைத்துள்ளனர். யுதான் என்பது முருகக் கடவுளின் பெயர் என்றார் செல்வசேகரம். “எங்கள் சிறிய மகன் சேயோனின் பெயரும் முருகனின் மற்றொரு பெயராகும்”
இந்த வருடத்திலிருந்து 13 வயதுக்குக் கீழான கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வலது கை பந்துவீச்சாளரான யுதான் பந்தை மேலே வீசியவாறு எங்களோடு பேசினார். 13 வயதுக்குக் கீழான அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் கலந்து கொள்ளும் போது தனக்கு எந்த பதட்டமும் ஏற்படவில்லை என யுதான் கூறினார். பாதுக்கை சிரிபியரத்ன கல்லூரி அணியோடு இடம்பெற்ற யுதானின் முதலாவது போட்டியில் அவர் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார். அவர் அணியின் ஆரம்ப பந்துவீச்சாளராக செயற்படுவதோடு, துடுப்பாட்டக்காரர்களின் வரிசையில் 4வது இடத்தில் வலது கை பேட்ஸ்மேனாக களம் இறங்குகிறார். ஓட்டங்கள் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் பின்னர் தான் பாடசாலை மட்ட சாதனையை ஏற்படுத்தியிருப்பதாக பயிற்சியாளர் கார்த்திக் கூறியதாக யுதான் எங்களிடம் கூறினார்.
“என்னால் ஆறு விதங்களில் பந்து வீச முடியும்” என்றும் யுதான் எங்களிடம் கூறினார்.
offspin, legspin, loop, flat loop, fast மற்றும் googly என்றவாறு சுழற்பந்து வீச்சாளர்களிடம் காணப்படும் துரும்பு சிறிய யுதானின் பந்துவீச்சில் உள்ளடங்கியுள்ளது. பல்வேறு வீடியோக்களை பார்த்ததன் பின்னர்தான் சிறிய வயதிலேயே தன்னால் பரீட்சிக்க முடிந்ததாக அவர் எம்மிடம் கூறினார்.
“அன்று நான் ஒன்பது ஓவர்களுடன் நான்கு பந்துகளையும் வீசினேன். எனது முதலாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே முதலாவது விக்கெட் வீழ்த்தினேன். அந்த ஓவரின் நான்காவது பந்திலும் மற்றொரு விக்ெகட்டை வீழ்த்தினேன். இது ஒரு சாதனை என்று எமது சேர் என்னிடம் கூறினார்” என்றார் யுதான். அவர் அந்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான இரண்டு வாய்ப்புகளைத் தவறவிட்டார்” என்றவாறு யுதானின் தாய் நித்யா மீண்டும் உரையாடலில் இணைந்து கொண்டார்.
“அன்று எமது மகன் பாடசாலை மட்ட சாதனையை ஏற்படுத்தியதன் பின்பு அவரை வாழ்த்தியவர்களுள் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமாலும் ஒருவராகவும். அத்துடன் குசல் மெண்டிசும் வாழ்த்துக்களை தெரிவித்தார். பாடசாலை கிரிக்கெட் சங்கம் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் என்பனவும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியதாக யுதானின் பயிற்சியாளர் கார்த்திக் தினகரனிடம் தெரிவித்தார்.
பெளஸ் முஹம்மட் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்