‘தி.மு.க. உயர் மட்டத் தலைவர்கள் பெரியாரியம் பழகுபவர்களாகவும் அக் குடும்பத்துப் பெண்கள் சமய நம்பிக்கைகளில் ஊறியவர்களாகவும் ஊக்கப்படுத்தப்படுவதும் ஒரு மூலோபாய நகர்வே’
தமிழக அரசியலிலும் சரி, தமிழகத்திலும் சரி, அதிக செல்வாக்கு செலுத்தக் கூடிய குடும்பமாகத் திகழ்வது கலைஞர் கருணாநிதியின் குடும்பம் தான். இந்தியப் பிரதமர் மோடியே தன் அரசியல் உரைகளில் வாரிசு அரசியல் நடத்தும் குடும்பம் என விமர்சித்திருக்கிறார். முழு இந்தியாவிலும் மோடி வித்தை செல்லுபடியாகாத மாநிலமாக இன்றைக்கும் தமிழகம் விளங்கி வருவதற்கு இந்தக் குடும்பம்தான் காரணம் என்பதே அவரது எரிச்சலுக்குக் காரணம்.
பா.ஜ.க.வின் மேலாதிக்கத்தின் கீழ் இருக்கும்வரை தமிழகத்தில் தி.மு.க.வை வெல்வது கடினம் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அத்தளையில் இருந்து தன் கட்சியை விடுவித்துக் கொள்ள முடியாதவராக உள்ளார். அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடியின் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்காக பிரசாரம் செய்யாது விட்டால், அவரது எதிரியான ஓ.பன்னீர் செல்வத்தையும், டி.டி.வி. தினகரனையும் கூடவே சசிகலாவையும் ஓரணியின் கீழ் கொண்டுவந்து எடப்பாடிக்கு எதிரான வலுவான சக்தியாக அக்கூட்டணியை அமித்ஷா உருவாக்குவார் என்ற பயமும் எடப்பாடிக்கு உண்டு. எனவே 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்வரை பா.ஜ.க.வின் செல்வாக்கில் இருந்து அ.தி.மு.க. விடுபடுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரியவில்லை.
பா.ஜ.க. தன் எதிரிகளை வீழ்த்தவும், மடக்கி தன் பைக்குள் வைத்துக் கொள்ளவும் எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கட்சி என்பதை அ.தி.மு.க.வின் இன்றைய நிலையை வைத்தே புரிந்து கொள்ளலாம். இன்று பா.ஜ.க.வை நேரடியாகவும் இந்தியா கூட்டணி வாயிலாகவும் வலுவாக எதிர்த்து நிற்க தி.மு.க.வினால் முடிகிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை.
முதலாவது, கொள்கை ரீதியானது. இந்து மதம், இந்தி – சமஸ்கிருத மொழி ஆதரவு, இந்துத்துவ கொள்கை என்பன பா.ஜ.க.வின் மாற்றப்பட முடியாத ஆதார கொள்கைகள். தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும். தனது அரசின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை முன் வைப்பதற்கு பதிலாக தாமே இந்து மதத்தின், தேசபக்தியின் முகவரியாகத் திகழ்கிறோம் என்பதையே முன்னிலைப்படுத்தினார். இந்து மதக் காவலன் என்பதுதான் மோடி கையில் எடுத்திருக்கும் அரசியல் ஆயுதம். அது என்றைக்கு நீர்த்துப் போகுமோ அன்றைக்கு வட இந்திய மாநிலங்களில் பா.ஜ.க. தன் ஆதாரத்தை இழந்துவிடும்.
தமிழகத்தில் தி.மு.க.வின் பலமே, திராவிடச் சிந்தனைகளும் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளும்தான். இதே சமயம், ஏனைய மாநிலத்து மக்களைப் போலவே இறை பக்தியிலும், இந்துமத வழிபாடுகளிலும் தமிழர்கள் ஊறிப் போனவர்களாகக் காணப்படுகின்ற அதேவேளை, பா.ஜ.க.வின் இந்துத்துவக் கொள்கைகளை அவர்கள் ஆதரிப்பவர்களாகவும் இல்லை. உதாரணத்துக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு எதிரே காணப்படும் பெரியார் சிலையைச் சொல்லலாம். பா.ஜ.க. தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்குமானால் அச்சிலை அகற்றப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையானது. ஆனால் அண்ணாமலையின் கூற்றுக்கு ஆதரவான அலை தமிழகத்தில் ஏற்படவில்லை. பெரியாரின் சிலை அகற்றப்பட வேண்டுமென கோஷங்கள் எழும்பவில்லை. சிதம்பரம் கோவிலின் உள்ளே அனைவரும் செல்லவும், வழிபடவும் அத் தெருவில் பாதணி அணிந்து நடக்கவும் வழி செய்தவர் கடவுளை நம்பாத பெரியார்தான் என்ற தமிழர்கள் மத்தியிலான புரிதலே இதற்குக் காரணம் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டது.
திராவிட சிந்தனைகளில் கடவுள் – சமய மறுப்பு கொள்கைகள் காணப்பட்டாலும், இந்தியாவின் பூர்வ குடிகள் திராவிடர்களே; அதற்கென தனி மொழி, கலாசாரம், பண்பாடு உள்ளது, ஆரியர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்பதை திராவிடக் கொள்கைகள் ஆணித்தரமாக வலியுறுத்துவதோடு தமிழ் இனம் தனித்துவமானது என்ற தெளிவை கடைக்கோடி தமிழர்கள் சிந்தனையில் வெற்றிகரமாக விதைத்துமுள்ளது. இதனால்தான் கடவுள் மறுப்பு என்பதை மட்டும் தவிர்த்துவிட்டு, பெண்களுக்கு சமஉரிமை, சாதிகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனைவருக்கும் கல்வி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சலுகைகள் போன்ற பல்வேறு திராவிடக் கொள்கைகளைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் தனது அரசை ‘திராவிட மொடல் அரசு’ என அழைத்துக் கொள்ள இதுவே காரணம். முன்னர் மோடி முதல்வராக இருந்ததால் குஜராத் மாநிலம் வளர்ச்சி பெற்றது என்பதைக் காட்டுவதற்காக பா.ஜ.க. அந்த ஆட்சிக் காலத்தின் சிறப்பை வெளிக்காட்டு முகமாக ‘குஜராத் மொடல் ஆட்சி’ என சொல்ல ஆரம்பித்தது. இதைப் பின்பற்றியே தி.மு.க.வும் திராவிட மொடல் ஆட்சி எனத் தனது ஆட்சிக்கு பெயரிட்டுள்ளது.
தமிழகத்தின் முதல்வர்களாகவும் கட்சித் தலைவர்களாகவும் விளங்கியவர்களில் ராஜாஜிக்கு ஆண் வாரிசு இல்லை. காமராஜர் பிரம்மச்சாரி. பெரியாருக்கு குழந்தைகள் இல்லை. அண்ணாவுக்கு வாரிசு இல்லை. எம்.ஜி.ஆருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஜெயலலிதா குழந்தை குட்டி என வாழ்ந்தவரில்லை. கலைஞர் கருணாநிதி மட்டுமே இரண்டு மனைவியர் பல குழந்கைள் என வாழ்ந்தவர். தி.மு.க. தலைமையை ஏற்றது முதல் தன் வாரிசாக ஸ்டாலினை கட்சியில் வளர்த்தெடுக்க ஆரம்பித்தார். அரசியலில் அவருக்கு முழுமையான பயிற்சி அளித்து, ஒரு கட்டத்தில் துணை முதல்வர் பதவியையும் வழங்கினார். அவரது மறைவின் பின்னர் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின், கலைஞரே பரவாயில்லை; இவரிடம் பாச்சா பலிக்காது என அரசியல் எதிரிகளே பேசும் அளவுக்கு, திறமையுடனும் மக்கள் ஆதரவுடனும் தற்போது ஆட்சி செய்து வருகிறார். அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாகவும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாகவும் இந்திய மத்திய அரசு தமிழக அரசுக்கு எவ்வளவோ குடைச்சல் கொடுத்து வந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிந்து போவதாக இல்லை.
தி.மு.க. ஆட்சியையும் தி.மு.க. என்ற கட்சியையும் குலைக்க முடியாமல் இருப்பதற்கு முதல் காரணம், இரு கட்சிகளுக்கும் இடையே காணப்படும் நேரெதிரான சித்தாந்த மோதல்கள் அல்லது முரண்பாடுகள் என்றால் இரண்டாவது காரணம் குடும்ப வாரிசு அரசியல் எனலாம். கலைஞருக்கு பின்னர் ஸ்டாலின் அல்லாமல் வெளியார் கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தால் தி.மு.க.வை பிளவுபடுத்தவோ அல்லது கட்சித் தலைமையை விலைக்கு வாங்கவோ தேசிய கட்சிகளால் முடிந்திருக்கும். எம்.ஜி.ஆரின் பின்னர் ஜெயலலிதா என்ற ஆளுமை கட்சித் தலைமைக்கு வந்ததால் அவரால் தேசிய மட்ட சதிகளை முறியடிக்க முடிந்தது. ஈ.பி.எஸ். அல்லது ஓ.பி.எஸ் ஆகிய இருவருமே ஆளுமையற்ற தலைவர்கள் என்பதால் அக்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க.வினால் இன்றளவும் தான் நினைத்தபடி செல்வாக்கு செலுத்த முடிகிறது.
கலைஞரின் பின்னர் ஸ்டாலின் கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டதால், கலைஞரின் ஆதார கொள்கைகளை – திராவிட சிந்தனைகளை – அவர் கடைப்பிடிக்க வேண்டியவராகிறார். மேலும் திராவிடக் கொள்கைகள் தான் பா.ஜ.க. தமிழகத்தில் வேர் பிடிப்பதைத் தடுக்கும். ஸ்டாலின் ஒரு பக்கம் திராவிடக் கொள்கைகள் நீர்த்துப் போகாமல் இருக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்தால்தான் தி.மு.க.வினால் மக்கள் செல்வாக்கை தக்க வைக்கக் கூடும்.
இரண்டாவதாக, தி.மு.க.வின் செல்வாக்கு தமிழக அரசியலில் தொடர்ந்தால்தான் கலைஞரின் குடும்பமும் செல்வமும் செல்வாக்கும் மிக்க அரசியல் குடும்பமாக நீடிக்க முடியும். தமிழகத்தில் ஸ்டாலினும் உதயநிதியும் செல்வாக்குடன் அரசியலில் நீடிக்க, பின்புலத்தில் ஸ்டாலினின் மருமகன் சபரீஸ்வரன் நின்று செயல்படுகிறார். புதுடில்லி தேசிய அரசியலில் தங்கை கனிமொழியும், முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறனும் தி.மு.க. நலன்களின் பேரில் செயல்படுகின்றனர். புதுடில்லி அரசியலில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா போன்றோர் தி.மு.க.வை கைவிட்டால்கூட, இவ்விருவரினால் அதைத் தாங்கிப் பிடிக்க முடியும். இந்த அளவில் தமிழகத்திலும் புது டில்லியிலும் தி.மு.க. நம்பிக்கையுடன் கால் பதித்து நிற்பதற்கு அதன் குடும்ப அரசியல் பாரம்பரியமே காரணம்.
தி.மு.க.வுக்கு மாநில மற்றும் தேசிய அரசியலில் எதிர்ப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய எதிர்ப்புகளே ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் கருணாநிதியை கவிழ்த்தன. இந்த அடிப்படையிலேயே, அவசியப்படும் தருணத்தில் கட்சித் தலைமையை ஏற்கும் பொருட்டு 46 வயதுடைய உதயநிதி ஸ்டாலின் தற்போது தயார் செய்யப்படுகிறார். யாருக்கு தகுதியும் எதிர்க்கும் ஆற்றலும் மிகுதியோ அவரே நீடித்து நிலைப்பார் என்பது பரிணாம வளர்ச்சியின் அடிப்படை. இது அரசியலுக்கும் பொருந்தும். ஸ்டாலினுக்கு வயது எழுபதாகி விட்டது. அவர் கடுமையான உழைப்பாளி. அவரால் தொடர்ந்தும் இதே வேகத்தில் உழைக்கக் கூடுமா என்று தெரியாது. அவரது உடல் நிலை அதற்கு ஈடுகொடுக்குமா என்பதை அவர் குடும்பம் மட்டுமே அறியும். இத்தகைய காரணங்களினால்தான், திரைப்படங்களைத் தயாரித்தும், வெளியீடு செய்தும் நடித்துக் கொண்டுமிருந்த உதயநிதி முதலில் இளைஞர் அணி செயலாளர் ஆக்கப்பட்டு தற்போது இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களை வளைத்து பிடித்து தி.மு.க. வலையத்தில் அவர்களை வைத்திருக்க வேண்டும் என்பது கட்சிக்காக அவர் செய்ய வேண்டிய பணி. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன், கட்சி மற்றும் ஆட்சித் தலைமைக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்பு கொண்டவர் என்ற வகையில் உதயநிதி ஸ்டாலின் விலைபோகக் கூடியவர் அல்ல. கட்சியின் சகல அமைப்புகளும் அவரின் சொல்லுக்குக் கட்டுப்படும்.
இந்த வகையில்தான் உதயநிதியின் சமீபத்தில் சர்ச்சைக்குரிய சனாதன பேச்சு அமைந்தது. சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், எளிமையான மொழியில், கொசு, டெங்கு, கொவிட் என்பன எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என எடுத்துவிட, அது முழு இந்தியாவிலும் பற்றிக் கொண்டது. பலநூறு கூட்டங்களைப் போட்டும், பல நூறு பேட்டிகளை எடுத்தும் கிடைக்க முடியாத ஊடக வெளிச்சத்தையும், மூலை முடுக்கெல்லாம் உதயநிதி என்ற பெயரையும் இப்பேச்சு அவருக்கு பெற்றுத் தந்தது. ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு பத்துக்கோடி விலையையும் வைத்தார். டில்லி அரசியல் பரபரப்பானது. அவர் மீது வழக்குகளும் உள்ளன. வட மாநிலங்களில் தெரிந்த நபராகி விட்டார் உதயநிதி.
ஆரம்பத்தில், இள இரத்தம் காரணமாக தெரியாத்தனமாக பேசி விட்டார் என்றே பலரும் கருதினார்கள். பின்னர் தெரியவந்தது.
இந்தியா முழுவதும் அது பேசு பொருளாகிப் போன விஷயம். டில்லியில் அமித்ஷா தன் எதிர்ப்பைத் தெரிவிக்க, பிரதமர் மோடி தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் உதயநிதியின் பெயரைக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினார்.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கண்டும் காணாததுபோல கண்களை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று.
சனாதன விவகாரத்தைக் கொளுத்திப்போட்ட உதயநிதி, தன் கருத்தில் இருந்து தான் விலகப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்க, தமிழகத்தில் எவரும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எதிர்வினை ஆற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலைஞர் குடும்பத்தை கவனித்தீர்களானால், அக் குடும்பத்து பெண்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருப்பதில்லை. சத்யசாயி பாபா கோபாலபுரம் வந்தபோது கலைஞருடன் அவர் அமர்ந்திருக்க, கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் பாபாவின் காலைத்தொட்டு வணங்கினார்.
ஸ்டாலினின் மனைவி துர்கா, கோபாலபுரம் கலைஞர் வீட்டுக்கு அருகே அமைந்திருக்கும் இந்து கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபடுபவர். சாயிபாபா பக்தை. சமீபத்தில் பழனி சென்று வழிபட்டு வந்தார். கனிமொழியைத் தவிர ஏனைய பெண்கள் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவே திகழ்வதாக அறிய முடிகிறது.
தி.மு.க. உயர் மட்டத் தலைவர்கள் மற்றும் கலைஞர் குடும்ப ஆண்கள் வெளிப்படையாக பெரியாரியம், திராவிட சிந்தனைகள் பழக, அதை சமூகத்தில் சமன் செய்வது போல தம் வீட்டு பெண்களை தி.மு.க.வினர் வெளிப்படையாக பக்தி மார்க்கத்தில் ஈடுபட அனுமதிப்பது ஒரு அரசியல் தந்திரமாகவே எமக்குப்படுகிறது. பிறரின் கருத்துச் சுதந்திரத்தில், நம்பிக்கைகளில் நாம் நிர்ப்பந்தம் செய்வதில்லை; சுய மரியாதை கொள்கைகளை திணிப்பதில்லை என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா?
இது, குடும்ப மற்றும் வாரிசு அரசியலை நியாயப்படுத்தும் பார்வை அல்ல. தமிழகத்தில் வாரிசு அரசியல் நீடிப்பதற்கான காரணங்களையே ஆராய்கிறது.
-அருள் சத்தியநாதன்