ராளுமன்றத்தில் இக்காலங்களில் அடிக்கடி தேவையற்ற சர்ச்சைகளும் அநாவசியமான விவாதங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன் அது பாராளுமன்றத்தின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளாகவே அமைந்து விடுகின்றன.
ஆளும் கட்சியினரின் சில கூற்றுகளுக்கு எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சியினரின் கூற்றுக்களுக்கு ஆளும் கட்சியும் எதிர்ப்புகளை வெளியிடும்போது இத்தகைய நிலை ஏற்படுகின்றது.
சில வேளைகளில் அவ்வாறான விவாதங்களும் சர்ச்சைகளும் ஆரோக்கியமானதாக அமைந்தாலும் பெரும்பாலான வேளைகளில் அது பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதிப்பதாகவே அமைந்து விடுகிறது.
பாராளுமன்றம் என்பது உயரிய கௌரவத்திற்குப் பாத்திரமான சபை என்பதுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் உயரிய தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட வேண்டியது அவசியமாகிறது.
மறுபுறம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் என்பதை மனதில் நிறுத்தி அவர்கள் செயல்படுவதும் அவசியம்.
அண்மைக்காலமாக சபையில் கைகலப்பு அல்லது மோதல்கள் ஏற்படுவது வரை அவர்களின் இத்தகைய செயற்பாடுகள் இருந்து வருகின்றன.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சம்பந்தப்பட்ட விவகாரம் சபாநாயகரால் குழு அமைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன் அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, எம்.பிக்களான ரோஹண பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகிய மூவருமே குற்றமிழைத்துள்ளனர் என குழுவின் தீர்மானம் வெளிவந்துள்ள நிலையில், அவர்கள் மூவருக்கும் சபாநாயகரால் ஒரு மாத கால சபை அமர்வுகளுக்கான தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க கடந்த வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்ட பல விடயங்கள் சபையிலும் வெளியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் அவரது சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளும் அவர் வெளியிடும் சிறுபிள்ளைத் தனமான கூற்றுக்களும் பாரிய விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தமக்கு வழங்கப்பட்டிருந்த விசேட சிறப்புரிமைகளை பயன்படுத்தி நிலையியற் கட்டளையின் 27 / 2ல் அவருக்கு வழங்கப்பட்டுள்ள கேள்விகளை எழுப்பும் சந்தர்ப்பத்தை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு பிரதமராலும் சபாநாயகராலும் ஆளும் கட்சிரனராலும் சபையில் முன் வைக்கப்பட்டு அவர்கள் தமது அதிருப்தியையும் வெளியிட்டனர்.
எனினும் எந்த அதிருப்தியையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து அவ்வாறு செயற்பட்டதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் 27/ 2 ல் கேள்விகளை எழுப்பும்போது நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அது தொடர்பில் சபாநாயகர் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நிலையியற் கட்டளையின் 27/2 இன் கீழ் கேள்விகளை எழுப்பும் போது அதற்கு மேலதிகமான கேள்வியையும் எழுப்ப முடியுமா? எனக் கேள்வி எழுப்பியதுடன் அது தொடர்பில் உத்தரவொன்றை சபாநாயகர் பிறப்பிக்க வேண்டும் என்றும், நாளை முதல் அது நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர், சபாநாயகருக்கோ அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கோ தேவையான விதத்தில் நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்ய முடியாது. அவ்வாறு அவர்கள் செயற்பட்டாலும் ஆளும் கட்சி அவ்வாறு செயற்படாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது. குறித்த நிலையியற் கட்டளை எதிர்காலத்துக்காக பாதுகாத்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க:
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளையின் 27/2இன் கீழ் உரையாற்ற முற்பட்டபோது, அதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல் மோசடி தொடர்பாக சபையில் தெரிவித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிலையியற் கட்டளை 27/2ஐ பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சபா பீடத்திற்கு சமர்ப்பித்துள்ள கேள்விகளை விட, வேறு கேள்விகளை கேட்டு வருகிறார். அதனால் எமக்கு அவற்றுக்கு பதில் வழங்குவதில் பிரச்சினை ஏற்படுகின்றது.
அதன் மூலம் அவர் நிலையியற் கட்டளையை மீறி செயற்பட இடமளிக்க முடியாது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரவு செலவு திட்ட விவாதத்தில் நாட்டின் அரச வருமானம் தொடர்பாக பல முக்கியமாக பிரேரணைகள் தொடர்பாக கருத்துக்களை தெரிவிப்பதற்காக முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வரவு செலவு திட்ட விவாதம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை பாராளுமன்றத்தில் பிரதான நடவடிக்கைகள் 606 நிமிடங்கள் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச;
அதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அரச வருமானங்களை அதிகரிக்க தேவையான ஆலோசனைகள் கருத்துக்களை தெரிவிக்க சபையில் முன்னுரிமையளிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்திருந்தார். அதனை நான் ஏற்றுக்கொண்டே, இலங்கை கிரிக்கெட் சபையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல் மோசடியை சுட்டிக்காட்டி அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தேன். ஊழல் மோசடிகளே அரச வருமானம் இல்லாமல் போவதற்கு காரணமாகும் என்றும் சுட்டி காட்டினார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன:
இதன்போது எழுந்த பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் புதிய சம்பிரதாயமாக நிலையியற் கடடளை 27/2க்கு மேலதிகமாக வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறார். அவ்வாறானதொரு நடைமுறை சபையில் உள்ளதா?
தொடர்ச்சியாக அவர் இவ்வாறு செயல்பட்டு வருவதால் ஏனையோருக்கு விவாதங்களில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைந்து விடுகின்றன. அது தொடர்பாக சபாநாயகர் எமக்கு பதில் சொல்ல வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு சபையில் கேள்வி கேட்பதற்கு விசேட சலுகைகள் காணப்படுகின்றன. எனினும், அது அவசர நிலைமை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே அவ்வாறு அவர் முக்கியமான கேள்வி எழுப்ப முடியும். அதற்காக அவர் நினைத்த நேரமெல்லாம் இவ்வாறு கேள்வி எழுப்ப முடியாது என்றார். இதற்கு மீண்டும் பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், ஏஸ்கின் மேர் என்ற புத்தகத்தில் பாராளுமன்ற சம்பிரதாயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கேள்வி கேட்பதற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பிரதாயம் தெரியாதவர்களே அது தொடர்பாக சபையில் பிரச்சினையை உருவாக்குகின்றனர் என்றார்.
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர:
அதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஜானக வக்குபுர குறிப்பிடுகையில், எதிர்க்கட்சித் தலைவர் 27/2இன் கீழ் என இரண்டு விதமான கேள்விகளை கேட்டிருக்கிறார். அதில் எந்த கேள்விக்குப் பதிலளிப்பது என தெரியாதுள்ளது.
அத்துடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள தேர்தல் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்புகின்றார் . நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயங்கள் தொடர்பாக சபையில் பதிலளிக்க முடியாது என்றார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல அது தொடர்பில் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசாங்கமே நிதி நெருக்கடி என தெரிவித்து அதனை நடத்தாமல் இருக்கின்றது என்றார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன:
இறுதியாக சபாநாயகர் இந்த சர்ச்சை மற்றும் வாக்குவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட சிறப்புரிமைகளை அவர் துஷ்பிரயோகம் செய்வதாகவே நான் உணர்கிறேன்.
அந்த நிலைமையை தவிர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அதற்கு தேவையான நிலையியற் கட்டளைகளில் திருத்தம் மேற்கொள்ள விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்றார். எவ்வாறாயினும் பாராளுமன்றத்தில் ஏனையவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் வகையில் தமது சிறப்புரிமையை பயன்படுத்தி பெருமளவு நேரத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது.
கேள்விகளைக் கேட்பதற்கும் உரையாற்றுவதற்குமான நேரங்கள் முறையாக முறைப்படுத்தப்படுமானால் இத்தகைய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதே எமது தாழ்மையான கருத்து.