எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைகளை அவர் துஷ்பிரயோகம் செய்வதாகவே தான் உணர்வதாகவும், அந்நிலைமையை தவிர்ப்பதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்ற முற்பட்ட போது, அதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையால் தற்போது மேற்கொண்டுவரும் ஊழல் மாேசடி தொடர்பாக சபையில் தெரிவித்து, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இதன்போது எழுந்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நிலையியற் கட்டளை 27/2 ஐ பயன்படுத்திக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் வேறு கேள்விகளை கேட்டு வருகிறார். அதனால், எமக்கு பதில் வழங்குவதில் பிரச்சினை ஏற்படுவதுடன், நிலையியற் கட்டளையை மீறி செயற்பட இடமளிக்க முடியாது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரவு -செலவுத்திட்ட விவாதத்தில் நாட்டின் அரச வருமானம் தொடர்பான பல முக்கியமான பிரேரணைகள், கருத்துகளை தெரிவிப்பதற்காக முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வரவு -செலவுத்திட்ட விவாதம் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை பாராளுமன்ற பிரதான நடவடிக்கை தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர், அரச வருமானங்களை அதிகரிக்கத் தேவையான ஆலாேசனைகள், கருத்துகளை தெரிவிக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்திருந்தார்.
அதனை நான் ஏற்றுக்கொண்டே, இலங்கை கிரிக்கெட் சபையில் மேற்கொள்ளப்பட்டடு வரும் ஊழல் மோசடியை சுட்டிக்காட்டி அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தேன்.
ஊழல் மோசடிகளே அரச வருமானம் இல்லாமல் போவதற்கு காரணமாகுமெனத் தெரிவித்தார்.
இதன்போது எழுந்த பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் புதிய சம்பிரதாயமாக நிலையியற் கடடளை 27/2க்கு மேலதிகமாக வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறார். அவ்வாறானதொரு நடைமுறை இருக்கிறதா? இது தொடர்பாக சபாநாயகர் தற்போது எமக்கு பதில் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு சபையில் கேள்வி கேட்பதற்கு விசேட சலுகைகள் இருக்கின்றன.
அது நாட்டில் அவசர நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கேள்வி எழுப்பலாம். அதற்காக நினைத்த நேரமெல்லாம் இவ்வாறு கேள்வி எழுப்ப முடியாதெனத் தெரிவித்தார்.
இதற்கு மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த போது, ஏஸ்கின் மேர் என்ற புத்தகத்தில் பாராளுமன்ற சம்பிரதாயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கேள்வி கேட்பதற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பிரதாயம் தெரியாதவர்களே இது தொடர்பாக பிரச்சினைப்படுவதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்த போது, எதிர்க்கட்சித் தலைவர் 27/2இன் கீழ் இரண்டு விதமான கேள்விகளை கேட்டிருக்கிறார். அதில் எந்தக் கேள்விக்கு பதிலளிப்பதெனத் தெரியாது. அதேநேரம் நீதிமன்றத்தில் விசாரணையிலிருக்கும் தேர்தல் தொடர்பாகவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். நீதிமன்ற விசாரணையிலிருக்கும் விடயங்கள் தொடர்பாக பதிலளிக்க முடியாதெனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த போது, உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசாங்கமோ பணம் இல்லையெனத் தெரிவித்து அதனை நடத்தாமல் இருக்கிறதெனத் தெரிவித்தார்.
இறுதியாக சபாநாயகர் பதிலளித்த போது, எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைகளை அவர் துஷ்பிரயோகம் செய்வதாகவே நான் உணர்கிறேன். அந்த நிலைமையை தவிர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போமென்பதுடன், அதற்கு தேவையான நிலையியற் கட்டளைகளில் திருத்தம் மேற்கொள்ளவும் விரைவில் நடவடிக்கை எடுப்போமெனத் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்