வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்துக்கு மேலாக திருகோணமலையிலிருந்து சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதை தொடர்ந்து இது விருத்தியடைந்து அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் சக்திமிக்க தாழமுக்கமாக மாற்றமடைவதுடன், இன்று மேலும் இது விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையும் சாத்தியமுள்ளதாக, சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
இந்தச் சூறாவளியானது இலங்கையின் வடகரையை அண்மித்ததாக வடமேற்கு திசையினூடாக எதிர்வரும் 5ஆம் திகதியளவில் இந்தியாவினுடைய தமிழ்நாட்டின் வடகரையை சென்றடையுமென்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பினூடாக பொத்துவில்வரையான கடல் பிராந்தியங்களுக்கு கடற்றொழிலாளர்களையும் கடல்சார் ஊழியர்களையும் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ள அவர், ஏற்கெனவே இக்கடல் பிராந்தியங்களுக்கு சென்றவர்கள் கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு திரும்புமாறும் கேட்டுக்கொண்டார்.
காலி தொடக்கம் மாத்தறையினூடாக பொத்துவில்வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் கடற்றொழிலாளர்களையும் கடல்சார் ஊழியர்களையும் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென்பதுடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டையினூடாக காலிவரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பினூடாக பொத்துவில்வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான வேளைகளில் இக்கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடுமெனவும், அவர் தெரிவித்தார்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வேளைகளில் பொதுமக்களை அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.