Home » யாருக்கும் புரியாத இராஜதந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கர்!

யாருக்கும் புரியாத இராஜதந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கர்!

தனது 100-ஆவது வயதில் காலமானார்

by Damith Pushpika
December 3, 2023 6:00 am 0 comment

லக அரசியல் விவகாரங்களில் கோலோச்சிய ஹென்றி கிஸ்ஸிங்கர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 100.

வெளிநாட்டு உறவுகளில் “ரியலிசத்தை” உறுதியுடன் கடைப்பிடிப்பவராக விளங்கிய, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் மறுபுறம் அவர் ஒரு போர்க் குற்றவாளி என்று கடுமையான கண்டனங்களையும் எதிர்கொண்டார்.

அவரது யாருக்கும் புரியாத ராஜதந்திரம் 1973ஆம் ஆண்டு அரபு-, இஸ்ரேலிய போரை முடிவுக்குக் கொண்டு வர உதவியது. பாரிஸ் சமாதான உடன்படிக்கையின் பேச்சுவார்த்தை அமெரிக்காவை வியட்நாமில் இருந்து வெளியேற்றியது.

சிலியில் ஒரு இடதுசாரி அரசாங்கத்தை கவிழ்த்த ரத்தக்களரி ஆட்சிக்கவிழ்ப்புக்கு மறைமுகமான ஆதரவு மற்றும் அர்ஜென்டினா இராணுவம் அதன் மக்களுக்கு எதிராக நடத்திய போரை கண்மூடித்தனமாக ஆதரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன.

கிஸ்ஸிங்கருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதைக் கேள்விப்பட்ட நகைச்சுவை நடிகர் டாம் லெஹ்ரர், “அரசியல் நையாண்டிகள் வழக்கற்றுப் போய்விட்டன” என்று பிரபலமாக அறிவித்தார்.

அமெரிக்க, -சீன உறவுகள் மிகச்சிக்கலாக இருக்கும் இச்சமயத்தில், ஹென்றி கிஸ்ஸிங்கருக்குச் சீனாவில் உணர்ச்சிகரமான இரங்கல் செய்திகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் சமூக வலைதளமான வெய்போவில் ‘நீங்கள் என்றென்றும் சீனாவின் நண்பர்’ என்று பதிவிடப்பட்ட ஒரு இரங்கல் குறிப்பைப் பலரும் ‘லைக்’ செய்து வருகின்றனர். கிஸ்ஸிங்கரின் மரணச் செய்தி வெளியானதும், அதுதொடர்பான ஹேஷ்டேக் சீனாவில் அதிகமாகத் தேடப்பட்ட ஒன்றானது, பல கோடி முறை பார்க்கப்பட்டது.

சீனாவின் தேசியத் தொலைக்காட்சி சீன செய்திச் சேவை அவரை ‘உலக அரசியலை ஆழப் புரிந்துகொண்ட கூர்மையான பார்வை கொண்டவர்’ என்று வர்ணித்திருக்கிறது.

1979-ஆம் ஆண்டு கிஸ்ஸிங்கரின் முயற்சியால் அமெர்க்காவும் சீனாவும் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தைகளைத் துவங்கின.

அவரது முயற்சியால் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் முதன்முறையாகச் 1972-இல் சீனாவுக்குச் சென்று மாவோ சே துங்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பிற்காக 1971-ஆம் ஆண்டு கிஸ்ஸிங்கர் ரகசியமாகச் சீனா சென்றார்.

அதன்பிறகு அவர் 100 முறைக்கு மேல் சீனா சென்றார். இறுதியாக இந்த ஆண்டு ஜூலையில். அப்போது அவரை ஷி ஜின்பிங் வரவேற்று உபசரித்தார்.

ஹீன்ஸ் ஆல்ஃப்ரெட் கிஸ்ஸிங்கர் 27 மே 1923-இல் பவேரியாவில் நடுத்தர வர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். நாஸி துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் அவரது குடும்பம் தாமதமாக வெளியேறியது. ஆனால் அக்குடும்பத்தினர் 1938 இல் நியூயார்க்கில் உள்ள ஜெர்மன்-யூத சமூகத்துடன் கலந்து வாழத்தொடங்கினர்.

‘ஹென்றி’ இயற்கையாகவே கூச்ச சுபாவமுள்ள இளைஞராக இருந்தார். அவர் கால்பந்தின் மீதான தனது காதலை ஒருபோதும் இழக்கவில்லை. பகலில் ஷேவிங் பிரஷ் தொழிற்சாலையில் பணிபுரியும் போது, ​​இரவில் உயர்நிலைப் பாடசாலைக்குச் சென்றார். கணக்கியல் படிக்க திட்டமிட்டார் ஆனால் ராணுவத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.

1957ஆம் ஆண்டில், அவர் அணுசக்தி போர் மற்றும் வெளியுறவுக் கொள்கை எனப்பொருள்படும் (Nuclear War and Foreign Policy)புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில், ஒரு வரையறுக்கப்பட்ட அணு ஆயுதப் போரை எளிதில் வெல்லமுடியும் என்று கூறினார். ஒரு புதிய வகை சிறிய ஏவுகணையின் “தந்திரோபாய” மற்றும் “மூலோபாய” பயன்பாடு பகுத்தறிவு மிக்கதாக இருக்கலாம் என்று சந்தேகத்திற்கு எதிரான மொழியில் அவரது புத்தகம் இருந்தது.

இப் புத்தகம் அவரைக் கவனிக்க வைத்தது. அவரது “சிறிய அணுசக்தி போர்” கோட்பாடு அப்போதும் செல்வாக்கு செலுத்தியது.

அவர் நியூயார்க் கவர்னர் பதவிக்கு வருவார் என நம்பப்பட்ட நெல்சன் ராக்பெல்லரின் உதவியாளரானார். 1968 இல் ரிச்சர்ட் நிக்சன் என்ற அமெரிக்க ஜனாதிபதியால் கிஸ்ஸிங்கருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற முக்கிய பதவி வழங்கப்பட்டது.

பனிப்போர் உச்சத்தில் இருந்த காலம் அது: கியூபா மீது மட்டும் தாக்குதல் தவிர்க்கப்பட்டது. அமெரிக்க இராணுவத்தினர் அப்போதும் வியட்நாமில் இருந்தன என்பதுடன் ரஷ்யா அப்போது தான் ப்ரேக் மீது படையெடுத்தது.

ஆனால் நிக்சனும், கிஸ்ஸிங்கரும் சோவியத் யூனியனுடனான பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அணு ஆயுதங்களின் அளவைக் குறைப்பதற்கான பேச்சுக்களை புதுப்பிக்கும் நடவடிக்கை தான் அது. அதே நேரத்தில், சீன அரசாங்கத்துடன், பிரதமர் சூ என்லாய் மூலம் ஒரு உரையாடல் தொடங்கப்பட்டது.

இது சீன- அமெரிக்க உறவுகளை மேம்படுத்தியது என்பதுடன் சோவியத் தலைமையின் மீது இராஜதந்திர அழுத்தத்தை ஏற்படுத்தியது –

கிஸ்ஸிங்கரின் முயற்சிகள் 1972 இல் நிக்சனின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் பயணத்திற்கு நேரடியாக வழிவகுத்தது, அவர் சூ என் லாய், மாவோ சேதுங் ஆகிய இருவரையும் சந்தித்தார், 23 ஆண்டுகாலம் இராஜதந்திர ரீதியாக தனிமைப்பட்டிருந்த, விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இதற்கிடையில், வியட்நாமில் இருந்து அமெரிக்கா தன்னை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. “கௌரவத்துடன் அமைதி” என்பது நிக்சன் தேர்தல் உறுதிமொழியாக இருந்தது. மேலும், கிஸ்ஸிங்கர் நீண்ட காலமாக அமெரிக்க இராணுவ வெற்றிகள் அர்த்தமற்றவை என்று முடிவு செய்திருந்தார். ஏனெனில் அவற்றின் மூலம் “இறுதிப் பின்வாங்கலைத் தக்கவைக்கக்கூடிய ஒரு அரசியல் யதார்த்தத்தை அடைய முடியாது,” என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. அவர் வடக்கு வியட்நாமுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். ஆனால், கம்யூனிஸ்டுகளிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் வீரர்களைப் பறிக்கும் முயற்சியாக நடுநிலையான கம்போடியாவில் ரகசிய குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்த நிக்சனுடன் ஒப்புக்கொண்டார்.

அவரது இந்தக் கொள்கை, குறைந்தது 50,000 குடிமக்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது, மேலும் கம்போடியாவின் ஸ்திரமின்மையைக் குலைத்து உள்நாட்டுப் போர் மற்றும் போல்பாட்டின் மிருகத்தனமான ஆட்சிக்கு வழிவகுத்தது. ஹென்றி கிஸ்ஸிங்கர் 1973 இல் பாரிஸில் வடக்கு வியட்நாமின் லு டக் தோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்களுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பாரிஸில் வியட் காங் உடனான கடுமையான பேச்சுவார்த்தைகளின் போது, ​​கிஸ்ஸிங்கர் – அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார் – தெற்கு வியட்நாமில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

கிஸ்ஸிங்கர் இந்த விருதை “அடக்கத்துடனும், அமைதியுடனும்” ஏற்றுக்கொண்டார். மேலும் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு பரிசுத் தொகைகளை வழங்கினார்.

பிந்தைய ஆண்டுகளில், மனித உரிமை மீறல் மற்றும் இராணுவ ஆட்சியின் கீழ் வெளிநாட்டு பிரஜைகளின் மரணங்கள் குறித்து விசாரிக்கும் பல நீதிமன்றங்களால் கிஸ்ஸிங்கருக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.’ ஹென்றி கிஸ்ஸிங்கர் ஏராளமான நட்புவட்டாரத்தையும், எதற்கும் தயாராக இருந்த புத்திசாலித்தனத்தையும் எப்போதும் கைவசம் வைத்திருந்தார். “அதிகாரம்”, என்பது “கடைசியில் ஒரு போதையைத் தரும்” என சொல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த நூற்றாண்டின் உலகளாவிய முக்கிய தருணங்களில் அவர் மனித வாழ்க்கையைவிடப் பெரிய பங்களிப்பை நல்கியவராக அவர் கருதப்படுகிறார். பலரின் கோபத்திற்கு ஆளான போதும் அவர் ஏற்றுக்கொண்ட நாடான அமெரிக்காவின் நலன்கள் தான் முக்கியம் என்பதில் இருந்து அவர், எப்போதும் பின்வாங்கவில்லை.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division