வாசிப்புத்துறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தினகரன் மற்றும் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் தலைமையில் 2012இல் ஆரம்பிக்கப்பட்ட நோட்டன் வாசகர் வட்டம் இன்று ஒரு தசாப்தத்தையும் கடந்து பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என நோட்டன் வாசகர் வட்டத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான நோட்டன் ராம் என அறியப்படும் மு.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நோட்டன் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் 2022/2023ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற, பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்கள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அட்டன், கார்பெக்ஸ் கல்லூரியில் (26) கடந்த வாரம் நடைபெற்றது.
தலைமையுரை நிகழ்த்திய தலைவர் நோட்டன் ராம் மேலும் கூறுகையில், அங்கத்துவ கட்டணம் இல்லாது ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரையும் எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் ஒரு தசாப்தத்தை கடந்து பயணிக்கும் நோட்டன் வாசகர் வட்டத்தின் ஆரம்பவிழா மலையகத்தின் மறைந்த இரு பெரும் ஆளுமைகளான சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோஸப், கல்வி வெளியீட்டுத் திணைக்கள உதவி ஆணையாளர் லெனின் மதிவானம் ஆகியோர் உட்பட மலையகத்தின் பல முக்கிய ஆளுமைகளின் முன்னிலையில் 2012ஆம் ஆண்டு அட்டனில் மாபெரும் விழாவாக நடைபெற்றது
அதன் பின்னர் நோட்டன் வாசகர் வட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முதியோரைக் கௌரவித்தல் பரீட்சையில் அடைவு மட்டங்களை எட்டிய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசில்கள் வழங்குதல், கௌரவித்தல், பாடசாலை மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சைக் கருத்தரங்குகளை நடத்துதல் போன்ற பல்வேறு செயற்திட்டங்களை சில நலன்விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவிகளுடன் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றது.
முக்கியமாக, அமரர் லெனின் மதிவானம் மறைந்து ஒரு மாதத்துக்குள் ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் தொகுத்த, ‘லெனின் மதிவானம், இளமை, புலமை, இனிமை’ எனும் நூலை நோட்டன் வாசகர் வட்டம் வெளியிட்டமை ஒரு மைல்கல் ஆகும். ஓர் ஆளுமை மறைந்து ஒரு மாத காலப்பகுதிக்குள் இவ்வாறானதொரு தொகுப்பு நூல் வெளிவருவது பெரும் சாதனை என்பதையும் ராம் நினைவு படுத்தினார்.
இந் நிகழ்வில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன், காசல்ரி பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் உட்பட உயர்தரத்தில் சித்தி பெற்ற 31 மாணவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 11 மாணவர்கள் என அனைவரும் பதக்கம் அணிவித்து சான்றிதழ், அப்பியாசக் கொப்பிகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் பெற்றோரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் விஜயசந்திரன் கலந்து கொண்டுள்ளமை சிறப்பான அம்சமாகும். பேராசிரியர்களில் எமது சமூகத்தை சேர்ந்த ஒருவர் இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்வது மிக முக்கியமானதாகும். பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பட்டமளிப்பு விழாக்களிலேயே அதிகமாக கலந்து கொள்பவர்களாக இருந்தாலும் எமது பிரதேசத்தில் பாடசாலைக் கல்வி சார்ந்த வெற்றிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்க வேண்டும் என்ற பெருந்தன்மையோடு அவர் இந்த நிகழ்விலேயே கலந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு எமது சமூகம் சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவரை எமது சமூகம் சார்ந்தவர் என்று மாணவர்கள் மத்தியிலே அறிமுகம் செய்யும்போது மாணவர் இதிலிருந்து ஒரு படிப்பினையை பெற்றுக் கொள்ள வேண்டும். அதாவது எங்கள் சமூகத்தில் முன்னரே பல பேராசிரியர்கள் தோற்றம் பெற்றிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் ஏன் அந்த நிலையை எங்களால் அடைய முடியாது என்ற ஒரு வினா உங்கள் மத்தியிலே தோன்ற வேண்டும். அதுதான் இவருடைய வருகையினது மிகப்பெரிய சிறப்பாகும். இன்னொரு விருந்தினரும் இந்த நிகழ்விலே கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிறார் அவர்தான் எனது நண்பரும் வைத்திய கலாநிதியுமான வசந்தராஜா. பல வருடங்களுக்கு முன் இப்பாடசாலையிலே கல்வி கற்று உயர்கல்வியை கற்று வைத்திய பீடத்துக்குத் தெரிவானவர். இப்படியானவர்களை நீங்கள் இந்த நிகழ்விலே கண்டுகளிக்கும் போது இவர்களைப் போன்று நாளை எதிர்காலத்தில் நாமும் வரவேண்டும் என்ற ஒரு நம்பிக்கையை இவ்விடத்தில் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதனைப் போலவே கல்வித்துறையில் பணியாற்றுகின்ற பல கல்விமான்கள் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்விலே விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்றார்கள். எதிர்காலத்திலே அந்த இடங்களை நிரப்ப வேண்டியவர்கள் நீங்களே. என்றார்.
சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் ராஜாராம் உரையாற்றுகையில், இன்று விருது பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை பதிவு செய்வதுடன், ஒவ்வொரு விருதுகக்குப்பின்னாலும் பெற்றோரின் உழைப்பும், ஆதங்கமும், எதிர்ப்பார்ப்பும் நிறைந்திருக்கின்றது.
மலையக மாணவர்களும் மாணவிகளும் பெறுபேறு பெறுவது வீட்டுக்காக மட்டும் அல்ல மலைநாட்டுக்காகவும் என்பேன். தொடர்ந்து படியுங்கள். தொட்டுப்பார்த்தால் ஒரு காகிதம் தான் புத்தகம் ஆனால், அதனை தொடர்ச்சியாக படித்தால் அது சமூகத்துக்கு மிகப்பெரிய ஆயுதம். சுவாசிப்பதைப்போல வாசிப்பதை வாடிக்கையாக கொள்ளுங்கள். என்று மாணவர்களுக்கான காத்திரமான உரையை நிகழ்த்திய அவர் அன்னை திரேசா, உலகம் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாம் உட்பட பல தலைவர்களின் வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துரைத்து பேசினார்.
இதனையடுத்து, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் விஜேசந்திரன் உரையாற்றுகையில்
பரீட்சைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இவ்வாறு கௌரவிப்பு வழங்க முன்வந்த நோட்டன் வாசகர் வட்டத்துக்கு எனது பாராட்டுக்கள். இங்கு ஐந்தாம் தரத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் பாராட்டி விருது வழங்கி கௌவிக்கப்பட்டனர்.
இவர்கள் தொடர்ச்சியாக ஐந்தாம் தர பரீட்சையில் வெற்றிபெற முழு முயற்சியுடன் அர்ப்பணிப்புடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டது போல பல்கலைக்கழக கல்விவரையில் தொடர்ச்சியாக இவ்வாறு முயற்சிப்பதன் மூலமே எதிர்காலத்தில் கல்வியில் சிறந்த மட்டத்தை அடைய முடியும் என்பதுடன் சாதனை புரியவும் முடியும்.
பெரும்பாலானவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்தவுடன் மீண்டும் தரம் 10க்கு வந்த பிறகே மூளைக்கு அதிகளவு வேலை கொடுக்க முயற்சிக்கின்றனர். இந்நிலையிலேயே தோல்வியையும் சந்திக்க வேண்டிய நிலையையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். புலமைப்பரிசில் பரீட்சை என்பது மலையக மாணவர்களுக்கு பெரும் சவாலானது. நகர்ப்புற மற்றும் பெயர்பெற்ற பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. ஆகையால் வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட வேண்டும், என்றார்
நிகழ்ச்சிகளை ஆசிரியர்களான விஸ்வகேது, சந்திரமோகன் ஆகியோர் அருமையாக தொகுத்து வழங்கினர். நிகழ்வில் நன்றியுரையை நோட்டவாசகர் வட்டத்தின் தலைவர் நோட்டன் ராம் நிகழ்த்தினார். தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
தொகுப்பு நோட்டன் பிரிட்ஜ் நிருபர் படப்பிடிப்பு- சிவகுமார்