Home » “சூல்சோறு” மூலம் இலக்கிய விருந்து படைக்கும் ரஹீமா

“சூல்சோறு” மூலம் இலக்கிய விருந்து படைக்கும் ரஹீமா

by Damith Pushpika
December 3, 2023 6:54 am 0 comment

சிறுகதையாசிரியர் கொழும்பு எம். ஏ. ரஹீமாவின் ”சூல்சோறு” எனும் நூல் வெளியீடு இம்மாதம் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

1978ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை சிறுகதை எழுத்தாளர்கள் மத்தியில் கொடி கட்டிப் பறந்த எழுத்தாளர்தான் சகோதரி எம். ஏ. ரஹீமா. 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு எழுத்து உலகில் இருந்து சில ஆண்டுகள் காணாமல் போன இவர் 2021 ஆம் ஆண்டு முதல் மீண்டும் எழுத்தில் பிரவேசித்தது மகிழ்ச்சியை தருகிறது.

இவர் எழுதிய சிறுகதைகளின் பல பிரதிகள் கறையானுக்கு இலக்காகி விட்டதாக கூறும் இவர், எஞ்சிய 14 சிறுகதைகளை தொகுத்து “சூல் சோறு” என்ற பெயரில் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி (10/12/2023) வெளியிடுகிறார். இது மகிழ்ச்சியான செய்தியாகும். இவரது சிறுகதைகள் நூலுரு பெறாதோ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டவர்களில் நானும் ஒருத்தி.

இவரை காணும் தோறும் இவரது படைப்புகள் நூலுருப் பெற வேண்டும் என்று கூறி வந்திருக்கிறேன். அந்த ஆசை இப்போது நிறைவேறுவதில் அக மிக மகிழ்கிறேன். அஸீமத்துல் ரஹீமா என்ற முழுப் பெயர் கொண்ட சகோதரி ரஹீமா ஏ .ஆர். எம். முஹம்மத் – உம்மு ஹுசைமா தம்பதிகளின் புதல்வியாவார். ஆரம்பத்தில் ஸார்மி என்ற

புனைப்பெயரில் எழுதி வந்த இவர் கொழும்பு ரஹீமா என்ற பெயரில் தான் இலக்கியத்தில் வலம் வந்தார். கொழும்பு ரஹீமா என்ற பெயர் தமிழ் சிறுகதை உலகில் கோலோச்சிய பெயர் எனலாம். முஸ்லிம் பெண் சிறுகதை ஆசிரியர் என்றால் எம்.ஏ. ரஹீமாதான் என்ற அளவுக்கு இவரது பெயர் அன்று பிரபல்யமாக இருந்தது.

கொழும்பில் பிறந்த எம்.ஏ. ரஹீமா தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு மிகுந்து மாவத்தை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும், உயர்கல்வியை திஹாரிய தாருஸ்ஸலாம் முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் கற்றார். கல்விச் சேவையில் பி. ஈ. டி. சித்தி பெற்றவர். கு/தெலும்புகல்ல முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியையாக முதல் நியமனம் பெற்ற இவர், கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் கடமை ஆற்றினார். அதனை அடுத்து கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தொடர்ச்சியாக 22 வருடங்கள் சேவையாற்றிய இவர் 2008 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார். ஆசிரியர் தொழிலில் இருந்து மட்டுமல்ல இலக்கியத் துறையில் இருந்தும் ஓய்வு பெற்றிருந்தார்.

1978 ஏப்ரல் 27ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் இவரது “கனவுகள் கலைகின்றன” என்ற முதலாவது சிறுகதை பிரசுரமானது. அதே ஆண்டு மீண்டும் தினகரன் வாரமஞ்சரியில் “துயரங்கள் சிரிக்கின்றன” என்று இரண்டாவது சிறுகதை பிரசுரமானது. இக்காலப் பகுதியில் பிரபல எழுத்தாளர் எம்.எச். எம். ஷம்ஸின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அவ்வறிமுகமே இவர் எழுத்துலகின் கவனத்தை ஈர்க்க கால்கோளாயிற்று.

பொழுதுபோக்காக எழுதத் தொடங்கிய ரஹீமாவின் எழுத்துகள் ஷம்ஸின் வழிகாட்டலில் செம்மைப்படுத்தப்பட்டது. 1979 ஜூனில் அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு நடந்த போது அ. ஸ. அப்துஸ் ஸமதுவால் தொகுக்கப்பட்ட சிறுகதை தொகுதியான ‘பிறைப் பூக்களில்’ “சூல்சோறு” என்னும் இவரது சிறுகதையும் இடம் பெற்றது. தொடர்ந்து 1978- _88க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் பத்திரிகைகள் இவரது சிறுகதைகளை வெளியிட்டன. இவர் எழுதிய சூல் சோறு (பிறைப் பூக்கள்), ஸீக்குவின்ஸ், பார்வை (மல்லிகை), கல்யாண கோலங்கள் (அஷ்ஷூரா) போன்ற சிறுகதைகள் பெரிதும் பாராட்டப்பட்டன. வானொலியில் இலக்கிய மஞ்சரி, மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

மேலும் பத்திரிகைகள் வானொலி என்பவற்றில் கட்டுரைகள், விமர்சனங்கள் என்பனவற்றையும் எழுதியுள்ளார்வா னொலி முஸ்லிம் சேவை விசேட கவியரங்கு, மேடை கவியரங்கு என்பனவற்றிலும் பங்கு பற்றி உள்ளார். தன்னுடைய வாழ்வில் பல்வேறு நெருக்கடிகளால் 1990 களிலிருந்து இவரது எழுத்து பணி தடைபட்டுப் போயிருப்பினும், பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கலை இலக்கிய தமிழ்த் தினப் போட்டிகளுக்காக நாடகப் பிரதிகள், கவிதைகள் என்பனவற்றை எழுதி தனது எழுத்துகளை உயிர்ப்புடனே வைத்திருந்தார்.

அந்த உயிர்ப்பே மறுபடி எழுத்துலகிற்கு இவரை மீண்டும் இழுத்து வந்துள்ளது எனலாம். இன்று வெளிவரும் “சூல் சோறு” சிறுகதை நூலை தனது எழுத்துலக வழிகாட்டியான பிரபல எழுத்தாளர் மறைந்த எம்.எச். எம். ஷம்ஸுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். இது சகோதரி ரஹீமாவின் நன்றி உணர்வை எடுத்துக்காட்டுகிறது. இவர் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த கவிதாயினியும் தான். பல வானொலி. மேடை கவியரங்கங்களில் கவி பாடி உள்ள இவர் சமீப காலமாக வலம்புரி கவிதா வட்டத்தின் மாதாந்த கவியரங்குகளிலும் கலந்து கொண்டு கவி பாடி வருகிறார். இது அவரது இலக்கிய பயணத்தின் ஆரோக்கியமான நிகழ்வாகும்.

எம்.ஏ. ரஹீமாவின் “சூல் சோறு” நூலை ஜீவநதி பதிப்பகமே வெளியிட்டிருக்கின்றது. ஜீவநதி பதிப்பகத்தின் பொறுப்பாளர் பரணிதரன் தொடர்ச்சியாக எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து இலக்கிய உலகிற்கு பெரும் பங்காற்றி வருகிறார் என்பதையும் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். தினகரன் வார மஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர், ஞானம் ஆசிரியர் டாக்டர் ஞானசேகரம், விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ் ஆகியோரும் இவரது ஆக்கங்களுக்கு களம் கொடுத்து வந்திருக்கின்றனர்.

- கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division