நல்லதை சொல்கிறோம்
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
இலங்கையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளதை காண முடிகிறது. சர்வதேச ரீதியிலும் இது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய விடயமாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையில் 638 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தகவல்களின் படி அறிய முடிகிறது.
பாராளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் நடந்த கலந்துரையாடல் ஒன்றின் போது, இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதே செப்டெம்பர் மாதத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவற்றோடு சிறுவர் பாதுகாப்பு நிலையமொன்றின் உத்தியோகத்தரின் கணவரால் துஷ்பிரயோகிக்கப்பட்ட சிறுமிகளில் நால்வரும் கர்ப்பிணிகளாகியுள்ளதாக தகவலொன்று தெரிவிக்கிறது.
இவற்றை நோக்கும் போது, பதிவாகியுள்ள சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாறாக இருந்த போதிலும் பதிவாகாத இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை ஊகித்து அறிய முடியும். இத்தொகை மேலும் மூன்று மடங்கு அதிகமாக இருக்க கூடும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையே தெரிவித்துள்ளது.
அறியாமை, சமூகத்தின் மீதுள்ள அச்சம், கலாசாரக் கட்டுப்பாடுகள், குடும்ப மானம் மீதுள்ள கரிசனை, முறைப்பாடுகளின் பின்னர் விசாரணைகளை எதிர்நோக்குவதிலுள்ள சிரமங்கள், பாதிப்புக்குள்ளான சிறார்களின் எதிர்காலம் போன்ற பல காரணிகளினால் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி முறைப்பாடுகள் செய்வதிலிருந்து பலரும் தவிர்த்துக் கொள்கின்றனர் என அறிய முடிகிறது.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக இருப்பவர்களில் பலர் அவர்களின் உறவினர்களாக இருப்பதும், அல்லது குடும்ப உறவுகளில் தொடர்புடையவர்களாக இருப்பதும், இத்தகைய சம்பவங்கள் மூடி மறைக்கப்படுவதற்கும், முறைப்பாடுகள் செய்யாமலிருப்பதற்கும் மேலதிக காரணங்களாக உள்ளன.
தொழிலுக்காக தாயார் அல்லது தந்தை அல்லது இருவரும் வெளிநாடுகளுக்கு செல்கின்ற குடும்பத்தை சார்ந்த சிறார்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாவது அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர ஆசிரியர்கள், மாணவர்களை அழைத்துச் செல்கின்ற சாரதிகள், பிரேத்தியேக வகுப்புகளுக்கு செல்கின்ற சந்தர்ப்பங்களில் சந்திக்கின்றவர்கள் என பலரும் இவற்றுக்கு காரணமாக இருப்பதையும் காண முடியும்.
சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான கட்டுப்பாடுகள் மூலமாகவோ இவற்றை பெரிய அளவில் தவிர்ப்பது சிரமமாயினும், பொருத்தமான முறையில் சிறுவர்களை அறிவூட்டுவதன் மூலமே பெருமளவில் அவர்கள் பாதுகாப்பை பெற முடியும், என துறைசார் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். “தகாத தொடுதல்” (Bad Tuch) முதல் இத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக அமையக்கூடியவற்றை சிறுவர்களுக்கு உரிய, முறையான விதத்தில் உணர்த்துவதன் மூலம் நல்ல விளைவுகளை பெற முடியும். இவ்விடயத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் என அனைவரும் ஆக்க பூர்வமாக சிந்தித்து செயல்பட முன் வர வேண்டும்.
கேட்டதில் கவர்ந்தது
‘பாரம்பரியம்’ தந்த ‘பக்கீர்பைத்’
இலங்கையில் பிரபல்யம் மிக்க கிராமியப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள் வரிசையில் முஸ்லிம்களின் மரபு ரீதியான இஸ்லாமிய இசையாக ‘பக்கீர்பைத்’ எனும் இசை வடிவம் முக்கியத்துவம் பெறுகிறது. எனினும் இலங்கையில் இப்போது அருகி வரும் ஓர் இசைக் கலையாக ‘பக்கீர்பைத்’ காணப்படுவது கவலைக்குரியது.
பக்கீர் பைத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு புத்துயிரளிப்பதில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பங்களிப்பு மகத்தானது. கடந்த நவம்பர் 21ம் திகதியன்று (2023.11.21) ஒலிபரப்பான “பாரம்பரியம்” நிகழ்ச்சி அதனை மீட்டிப் பார்த்தமை விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
பக்கீர் பைத்துக்களில் ‘நூறு மசாலா’, ‘திருவெண்ட அரசன் சரித்திரம்’, தாய் மகளுக்கு உபதேசிக்கும் ‘பீர்சா உம்மா சரித்திரம்’, ‘காட்டுபாவா சரித்திரம்’, பாத்திமா நாயகி தன் கணவருக்குச் செய்த ‘வசியத்து நாமம்’ போன்றன மிகவும் பிரபலமானவை. இவற்றில்‘நூறு மசாலா’, ‘காட்டுபாவா சரித்திரம்’ என்பவை முஸ்லிம் சேவையில் தொடராக ஒலிபரப்பு செய்யப்பட்டமையும் நினைவூட்டப்பட்டது. இது இன்றைய தலைமுறையினருக்கு புதிய தகவலாக இருக்கும். இக்கலையை வளர்ப்பதில் முஸ்லிம் சேவை எந்தளவுக்கு அக்கறை காட்டியிருக்கிறது என்பதையும் இந்நிகழ்ச்சி அறிய வைத்தது.
அக்கறைப்பற்று, மர்ஹும் பீ. எம். ஜமால்தீன் பாவாவின், பக்கீர்பைத்துகான, பங்களிப்புகள் குறித்த தகவல்களை, அவரின், புதல்வர், நஜ்முல் ஹுசைன் தீன் பாவா பரிமாறிக் கொண்ட அதே வேளை, ‘இலங்கை முஸ்லிம் பக்கீர்பைத் ஜமாவின்” தலைவர், பேராசிரியர், எம். சீ. பக்கீர் ஜவ்பரை அழைத்து கருத்துக்களை பரிமாறியமை இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.
‘பக்கீர்மார்கள் யார்?’ என்பதை சிறப்பாக விளக்கிய பேராசிரியர், “பக்கீர்மார்களை ஏழைகள் என அடையாள படுத்தி விட முடியாது. பக்கீர்மார்கள் ஏழைகளல்ல, அவர்கள் இறை திருப்தியை நாடி தம்மை தாமே, வெறுமைப்படுத்தி வாழ்பவர்கள். அவர்கள் ‘வறுமையற்ற வெறுமையாளர்கள்’ ஆனால், ஏழைகள் இயல்பாகவே வறுமைக் கோட்டுக்குள் வாழ்கிறார்கள். அவர்கள் தாம் சீமான் தனத்தை நோக்கி போகக் கூடியவர்களாக இருந்து வருகிறார்கள்” என பக்கீர்மார்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளியை சிறப்பாக தெளிவுபடுத்தினார்.
முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு செய்தோரைப் பற்றிய கருத்துக்களை பரிமாறும் ‘பாரம்பரியம்’, இடையிடையே இஸ்லாமிய கலை கலாசார விடயங்களுக்கும் முக்கியத்துவமளித்து நிகழ்ச்சிகளை இடம்பெறச் செய்வது வரவேற்புக்குரியது. முஸ்லிமல்லாத இசைக் கலைஞர்களான சுஜாதா அத்தநாயக்க, வீ. முத்தழகு போன்றவர்களை அழைத்து இஸ்லாமிய இசைப் பாரம்பரியத்தைப் பற்றிய விடயங்களை வெளிக் கொண்டுவர ஏற்கனவே நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ள ‘பாரம்பரியம்’, இப்போது ‘பக்கீர்பைத்’ பாரம்பரியத்தை நினைவுபடுத்தியமையானது, இக்கலை மீது மீண்டும் ஆர்வம் பிறக்க வழி வகுக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
‘பாரம்பரியம் ‘நிகழ்ச்சிகள் இப்போது ‘யூடியூப்’பில் சேர்க்கப்பட்டுள்ளதால் வானொலியிலே, கேட்க தவறியோரும், ஆர்வமுள்ளவர்களும் அவற்றை கேட்டு மகிழவும், தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
நலமே வாழ்வோம்
‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்’
வருடாந்தம் டிசம்பர் 1ஆம் திகதியன்று ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்’ கடைபிடிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள், மருத்துவ சிகிச்சை, அடிப்படை தேவைகள் ஆகியவற்றை பாதுகாப்பது, மேலும், உலக அளவில் எய்ட்ஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள், நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற செயல்களை இத்தினத்தை அடிப்படையாகக் கொண்டு, உலக சுகாதார அமைப்பு செய்து வருகிறது.
எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்கள், மற்றும் எச்.ஐ.வி என்னும் மனித நோயெதிர்ப்புக் குறைபாட்டு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் இத்தினத்தில் நினைவுகூர்கின்றனர். 1987ஆம் ஆண்டில, எய்ட்ஸ் பற்றிய உலகளாவிய செயல் திட்டத்தின் இரு அதிகாரிகளான ஜேம்ஸ் பன், தாமஸ் நெட்டர் இருவரும், தொற்றுநோய் பற்றிய சர்வதேச விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், அதற்கான அறிவூட்டல்களை வழங்கவும் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்துக்கான யோசனையை முன்வைத்தனர்.
உலக எய்ட்ஸ் தினமானது, எய்ட்ஸ் தொற்று நோயினால் ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கவும், வைரஸ் பற்றிய உண்மைகள், அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் மக்களுக்குக் கற்பிக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட புதிய நபர்களின் எண்ணிக்கை இன்னும் குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது என்பதையும், இதை எதிர்த்துப் போராட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை மக்களுக்கும் அரசுகளுக்கும் நினைவூட்டும் தினமாகவும் இத்தினம் அமைகின்றது.
எச்.ஐ.வி, மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் சிவப்பு நாடா பரவலாக அங்கீகரிக்கப்பட்டு, பலரும் உலக எய்ட்ஸ் தினத்தன்று சிவப்பு ரிப்பனை அணிகின்றனர். ஒவ்வோர் ஆண்டும், UNAIDS, WHO, மற்றும் பிற அமைப்புகளுடன் கலந்துரையாடிய பிறகு, உலக எய்ட்ஸ் பிரசாரம் உலக எய்ட்ஸ் தினத்தின்போது கடைபிடிக்க ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கிறது.
தகவல் களஞ்சியம்
நகரும் பாரிய பனிப்பாறை
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கடலில் தரைதட்டி நின்றிருந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, இப்போது நகரத் துவங்கியிருக்கிறது. A23a என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை, 1986ல் அண்டார்டிக் கடற்கரையிலிருந்து பிரிந்தது. ஆனால் அது விரைவாக வெட்டல் கடலில் தரை தட்டியது. கடந்த ஆண்டு அது வேகமாக நகரத் துவங்கியது. இப்போது அது அண்டார்டிக் கடற்பரப்பைக் கடக்கவிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 4,000சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறை, ஒருங்கிணைந்த லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கும். இந்தியாவின் சென்னையைப் போல நான்கு மடங்கும் பெரியது. அதன் தடிப்பு 400 மீட்டர் (1,312 அடி). ஐரோப்பாவின் மிக உயரமான அடுக்குமாடிக் கட்டிடடமான லண்டன் ஷார்டின் (London Shard) உயரம் வெறும் 310மீட்டர் தான் என்பது கவனிக்கத் தக்கது.
“பல வழிகளில் இந்த பனிப்பாறைகள் உயிர்களுக்கு முக்கியமானவை. அவை பல உயிரியல் செயல்பாடுகளுக்கு மூலப் புள்ளியாக இருக்கின்றன,” என்று வூட்ஸ் ஹோல் கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கேத்தரின் ேவாக்கர் தெரிவித்துள்ளார்.
பொன் மொழி அது பொய்யா மொழி
குன்றக்குடி அடிகளாரின் சிந்தனைகள்
* இன்றைய சமுதாயத்திற்குப் பணத்தின்மீது மட்டுமே ஆசை. பணம் கிடைக்கக்கூடிய வழிகளில் அல்ல பொது மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் யோக்கியர்களாக மாட்டார்கள்.
* பணி செய்த ஆண்டுகளைக் கணக்கிட்டுத் திறமைகளைக் கணக்கிட முடியாது. பணி செய்யும் பாங்கும் திறமையுமே அளவுகோல்கள்.
* காலந் தவறுதலை ஒழுக்கக்கேடு என்று உணராதவரை சமூகம் வளராது.
* சலுகைகளால் ஒரு சமுதாயத்தை வளர்த்து விட முடியாது.
* உடலை வளர்த்தவர்கள், உணர்வை வளர்த்துக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.
* பதவியைப் போல மனிதனைக் கெடுப்பது வேறு ஒன்றும் இல்லை.
கைவண்ணம் காணீர்
கலைஞன் ஒருவனின் கைவண்ணத்தில்
கடற்கரையிலே அழகு அணங்கு ஒருத்தி!
****
இப்பத்தியில் இடம்பெறும் அம்சங்களின் நோக்கை, போக்கை, அமைப்பை, அளவை,
அழகை பின்பற்றி எவரும் எழுதலாம்.
“படித்ததும் பகர்வதும்” பகுதியுடன் தொடர்பு
கொள்ள, மின்னஞ்சல் (email): pptknvm@gmail.com, வாட்ஸ்எப் (WhatsApp): 0777314207