ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சொன்ன விஷயம் அனைவரையும் கவர்ந்துவிட்டது. ஹீரோவானதுமே தன் பெயருக்கு பின்னால் இருக்கும் விஜய் சேதுபதியை நீக்கிவிட்டார். அப்பாவின் பெயரை வைத்து பெரிய ஆளாக அவர் விரும்பவில்லை.விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாகிவிட்டார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் ஃபீனிக்ஸ் வீழான் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார் சூர்யா.
படத்தின் பூஜையில் விஜய் சேதுபதியால் கலந்து கொள்ள முடியவில்லை. அவர் படிப்பிடிப்புக்காக மலேசியாவில் இருக்கிறார். இருந்தாலும் வீடியோ கால் செய்து அனல் அரசுவை வாழ்த்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் சூர்யாவும், அனல் அரசுவும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்பொழுது சூர்யா கூறியதாவது,
அப்பாவின் பெயரில் நான் வரக் கூடாது என முடிவு செய்தேன். அப்பா ஷூட்டிங்கில் இருந்தார். நான் அவருக்கு சாப்பாடு கொடுக்க சென்றேன். அப்பொழுது ஸ்டண்ட் காட்சியை படமாக்கினார்கள். எனக்கு ஸ்டண்ட் பிடிக்கும் என்பதால் அங்கு அமர்ந்து பார்த்தபோது மாஸ்டர் கண்ணில் பட்டுவிட்டேன். 6 மாதம் ஸ்டண்ட் பயிற்சி எடுத்தேன்.அப்பா வேற, நான் வேற. அதனால் தான் அறிமுகம் சூர்யா என போட்டிருக்கிறார்கள். நான் ஹீரோவானதில் அப்பாவும், அம்மாவும் சந்தோஷப்பட்டாங்க. ஆனால் அவர் வேற, நான் வேற. அதனால் அறிமுகம் சூர்யானு போட்டிருக்காங்க, சூர்யா விஜய் சேதுபதினு போடல.
பயமா இருக்குப்பானு போன் பண்ணி சொன்னேன். பார்த்துக்கலாம்டானு சொன்னார். நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
அப்பாவுடன் சேர்ந்து நடிப்பீர்களா என கேட்டதற்கு, அதை போகப் போக பார்க்கலாம் என்றார். சூர்யா பேசிய விதம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. அப்பாவின் பெயரை பயன்படுத்தி வாழ்க்கையில் பெரிய ஆளாகக் கூடாது என்று தெளிவாக இருக்கிறார். சொந்த உழைப்பில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த நினைக்கும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்.
ஃபீனிக்ஸ் பட வாய்ப்பும் சூர்யாவின் சொந்த முயற்சியால் தான் கிடைத்திருக்கிறது. சூர்யா ஒரு பாக்ஸர். ஆக்ஷன் கலந்த ஸ்போர்ட்ஸ் டிராமா என்பதால் பாக்ஸர் சூர்யா சரியாக இருப்பார் என அவரை தேர்வு செய்திருக்கிறார் அனல் அரசு.
சூர்யா துறுதுறுனு இருக்கிறார். தெளிவாக, அழகாக பேசுகிறார். அவரை ஏற்கனவே ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. இந்த சூர்யாவும் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமே இல்லை.
முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சூர்யா. பின்னர் தன் அப்பா நடித்த சிந்துபாத் படத்திலும் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த சூர்யா தற்போது ஹீரோவாகிவிட்டார்.நடிக்க வந்துவிட்டாலும் படிப்பை முடித்து பட்டம் வாங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். இது சூர்யாவின் வாழ்க்கை, அவர் விரும்புவதை செய்யட்டும் என ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
ஃபீனிக்ஸ் வீழான் என்பது நல்ல தலைப்பு. வாழ்க்கையில் வெற்றி, தோல்வி வருவது சகஜமே. உங்கள் அப்பா பார்க்காத போராட்டங்கள் இல்லை. அதனால் எது நடந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாமல் தொடர்ந்து போராடுங்கள், வெற்றி உங்களுடையதே சூர்யா.