Home » அவள் இன்னும் காத்திருக்கிறாள்

அவள் இன்னும் காத்திருக்கிறாள்

by Damith Pushpika
November 26, 2023 6:00 am 0 comment

ந்த நள்ளிரவு நேரம் வெண்ணிலவின் வருகை ஜன்னல் வழியாக ஊடுருவி ஒளிக்கீற்றுகளாக அவள் கண்களில் பட திடுக்கிட்டு எழுந்தாள் பரிமளா. அவளுக்கு இனந்தெரியாத ஒரு பயம், தனியாகத் தூங்கும் போதும் சரி, தனியாக அமர்ந்திருக்கும் போதும் சரி, எத்தனையோ முறை இந்தப் பயம் அவளை கவ்விக்ெகாண்டே இருக்கிறது. கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டும்.

மெதுவாக எழும்பி ஜன்னலை திறந்துவிட்டு வானத்தைப் பார்த்தாள். வளர்பிறை வானத்தை அலங்கரித்த வண்ணம் இருந்தது. உறக்கம் எங்கேயோ ஓடிப் போனது. உடனே அவன் நினைவு அவள் மனம் முழுவதும் வியாபித்துக் கொண்டது. அவன் சாதுர்யமாகப் பேசிய வார்த்தைகள் அவளைக் குடைந்தன. கண்ணீர் கண்களைக் குளமாக்கின. மீண்டும் படுக்ைகயில் வந்து படுத்துக்ெகாண்டு தலையணையை முகத்தில் புதைத்துக்ெகாண்டு விம்மி விம்மி அழுதாள்.

‘பரிமளா’ இருபது வயது நிரம்பிய இளம் பெண். அவள் அப்பாவும் அம்மாவும் அந்த தேயிலைத் தோட்டத்திலே சாதாரண தொழிலாளர்கள். பரிமளா தோட்டப் பாடசாலையிலேயே சாதாரண தரம் வரை கல்வி கற்றுவிட்டு வறுமை காரணமாக மேற்படிப்பை மேற்கொள்ளவில்லை. அவளுக்கு கீழே தம்பியும் தங்கையும் இருந்ததால் அவர்களும் படிக்க வேண்டுமே. பெற்றோரின் உழைப்பு போதியதாக இருக்கவில்லை. படித்தது போதுமென அவளே முடிவு பண்ணிக்ெகாண்டு வீட்டிலேயே நின்றுவிட்டாள். அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளில் ஈடுபட்டு தனது பொழுதைக் கழித்தாள்.

ஒருநாள் பரிமளாவின் அப்பா முருகானந்தம் கவ்வாத்து மலையிலிருந்து வேலைமுடித்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது “கொஞ்சம் நில்லுங்க முருகானந்தம்” என்றொரு குரல் கேட்டது.

“எங்க ஸ்கூல்ல இப்போ பிள்ளைகள் அதிகம்…. போதிய ஆசிரியர்கள் இல்லை… கஷ்டமாக இருக்குது… பரிமளா வீட்டில சும்மா தானே இருக்கிறாள்…. கொஞ்சம் ஸ்கூலுக்கு வந்து உதவி பண்ணச் சொல்லுங்க, அவளுக்கும் பொழுது போன மாதிரி இருக்குமே, அத்தோடு தொண்டர் ஆசிரியர் நியமனமும் வழங்கப் போறாங்களாம். பரிமளாவ மெதுவா போட்டு விடுறேன்” என்று பரிமளா படித்த அதே தோட்டப் பாடசாலையின் அதிபர் ‘சரோஜா டீச்சர்’ முருகானந்தத்தைக் கேட்டுக்ெகாண்டபோது அவராலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, எடுத்தெறியவோ முடியவில்லை. வீட்டுக்குப் போய் தன் மகளிடம் விடயத்தைக் கூறியபோது பரிமளா புள்ளிமானாய்த் துள்ளிக் குதித்தாள். தொண்டர் ஆசிரியர் ஆட்சேர்ப்பு பற்றியும் அவள் கொஞ்சம் தெரிந்து வைத்துத்தான் இருந்தாள். தன் மகள் பேருக்காவது டீச்சரா போகப் போறாளே என்று அவள் அம்மா கமலத்துக்கும் விருப்பமாக இருந்தது. “என்னம்மா உன் யோசனை என்ன, சரோஜா டீச்சருக்கு நான் என்ன சொல்ல” அப்பா கேட்க “நம்ம பரிமளாவையே தேடி வந்திருக்கிற இந்த வேலைய அவ மட்டும் என்ன வேணான்னு சொல்லவோ போறா? நீங்க பெரிய டீச்சருக்கிட்ட சரின்னு சொல்லிடுங்க” கமலம் ஆனந்தத்தோடு கூற “ஆமாம் அப்பா, டீச்சரே சொல்லி அனுப்பி இருக்காங்க இல்ல, இன்னும் எத்தனை புள்ளைங்க படிச்சிட்டு இருக்கும்போது ஏம்மேல மட்டும் நம்பிக்ைக வச்சி சொல்லி இருக்காங்க இல்ல, சரின்னு சொல்லுங்கப்பா” மகளும் பூரிப்போடு கூறும்போது “அப்போ சரியம்மா. நான் டீச்சருக்கு சரின்னு சொல்லிடுறேன்” என்று முருகானந்தமும் ஆமோதித்தார்.

பரிமளா சிறுமியாக இருக்கும்போது கமலத்தின் பழைய சேலைகளை கட்டிக்ெகாண்டு ஒரு டீச்சரைப்போல ஆடி ஓடித் திரிந்தது கமலத்துக்கு நினைவுக்கு வந்தது. அவள் அன்று விளையாட்டாக செய்தது, இன்று நிஜமாகப் போகப் போகிறதே என்று கமலமும் ஆச்சரியப்பட்டாள். அந்த மாரியம்மனை நினைத்து மனதுக்குள் வணங்கிக் கொண்டாள்.

இரண்டு நாட்களில் ஒரு ஆசிரியைப் போல தன்னை தயார்படுத்திக் கொண்டு, அவள் படித்த அந்தப் பாடசாலைக்ேக போன போது, அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியாக இருந்தது. சரோஜா டீச்சர் உட்பட ஏனைய ஆசிரியர்களும் பரிமளாவுக்கு தெரிந்தவர்கள் தான். ஆகவே எல்லோரும் அவளை ஆசையோடு வரவேற்றார்கள். இப்படியாக அவள் மாணவர்களோடும் பாடசாலை சூழலோடும் ஒன்றிணைந்து போவதைக் கண்ணுற்ற அவள் பெற்றோருக்கும் பெருமிதமாக இருந்தது. அவளின் இந்தச் செயலால் அவள் குடும்பத்துக்ேக அந்த தோட்டத்தில் தனியொரு மதிப்பும் கிடைத்தது.

நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் இரண்டை எட்டிப் பிடித்தபோது, அந்தப் பாடசாலைக்கு வேறு மாவட்டத்திலிருந்து புதிதாக ஒருவர் ஆசிரிய நியமனம் பெற்று வந்தார். அவர் பெயர் சுந்தர், வாட்டசாட்டமான இளைஞன். எடுப்பான் தோற்றம், நேர்த்தியான நடை, உடை, பாவனை. சுந்தரின் வரவால் அனைத்து ஆசிரியர்களுக்கும், ஏன் மாணவர்களுக்கும் கூட மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பரிமளாவுக்கு மட்டும் என்னவோ போல் இருந்தது. “பரிமளா, நீங்க ஒண்ணும் யோசிக்காதீங்க, நான் கல்விப் பணிப்பாளருக்கு உங்களைப்பத்தி சொல்லி வச்சிருக்ேகன், தொண்டர் ஆசிரியர் நியமனத்துக்கு உங்க விபரத்தை எல்லாம் அனுப்பச் சொல்லி இருக்கிறார். நீங்க நிக்காம தொடர்ந்து வாங்க” என்று சரோஜா டீச்சர் சொன்னபோது அவளுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. ஆகவே அவளும் தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தாள்.

சுந்தர் வெளிமாவட்டத்திலிருந்து வந்திருப்பதால் சரோஜா டீச்சர் அவரை அங்குள்ள தோட்ட குமாஸ்தாவின் வீடொன்றில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்திருந்தார். சுந்தர் எல்லோருடனும் சகஜமாகப் பழகினான். ஆனால் பரிமளாவோடு கொஞ்சம் அதிகமாகவே பழகினான். ஆனால் பரிமளாவுக்கு அவனைக் காணும் போதெல்லாம் இனம்புரியாத ஓர் பய உணர்வு மேலிட்டது. அது ஏன் என்று சில சமயங்களில் அவளுக்ேக புரியாமல் இருந்தது.

“ஏன் பரிமளா… என்னைக்கண்டு இப்படி பயப்படுறீங்க, நான் என்ன உங்கள கடிச்சித் தின்னுடவா போறேன்” என்று நகைச்சுவையாகப் பேசுவான். “இல்ல சுந்தர் சேர், அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” என்று அவள் ஒருவித கூச்சத்தோடு தயங்கித் தயங்கி பதலளித்தபோது “சேர்… கீர்… எல்லாம் வேணாம்… சுந்தர் என்றே கூப்பிடுங்க” என்று அவளை ஆசுவாசப் படுத்தினான். நாளடைவில் பரிமளா மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வது போல் அவளுக்கு தோன்றியது. சரோஜா டீச்சரும் ஏனைய ஆசிரியர்களும் அதற்கு ஒத்து ஊதுவதும் அவளுக்கு புரிந்தது. “ஏன் பரிமளா, சுந்தரைக் கண்டா பயமா இருக்கா, நல்ல எடுப்பான் வாலிபன் தானே. உங்களுக்கு ரொம்ப பொருத்தம், வேறு யாருமா இருந்தா இன்னேரம் கைக்குள்ள போட்டிக்கிட்டு இருப்பாங்க” என்று அவர்கள் பகிடி பண்ணும் போதெல்லாம் அவளுக்கு தூக்கி வாரிப்போடும்.

அதன் பின்னர் அவன் கொஞ்சம் அதிகமாகவே நெருங்கினான். “இங்க பாருங்க பரிமளா, எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, நான் உங்கள லவ் பண்றன்” என்று அவன் சொன்னபோது அவள் திடுக்கிட்டுத் தடுமாறினாள்”. என்ன சொன்னீங்க?” “ஆமாம் மிஸ் பரிமளா. ஐ லவ் யூ மைடியர்” “இங்க பாருங்க சேர். இது ரொம்ப அதிகம். நான் யாரு நீங்க யாரு. நான் லயத்தில இருக்கிறேன். எங்களுக்ெகன்று பெரிசா ஒண்ணும் இல்ல, ஏதோ இப்படியாவது ஒரு தொழில் புடிச்சிக்குவோம்னுதான் இதுக்கு வந்தேன். ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்குங்க”…. “அதெல்லாம் எனக்குத் தெரியும் பரிமளா. ஆனா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்க அழகில நான் மயங்கிட்டேன். ப்ளீஸ் என் காதலை ஏற்றுக்ெகாள்ளுங்க”, அவன் அசடுவழிய சொன்னபோதும் அவள் வளைந்து கொடுக்கவில்லை.

“இங்க பாருங்க மிஸ்டர். என்னை உங்க விளையாட்டு பொம்மையா நினைச்சீங்களா. என்னை நம்பிதான் எங்க குடும்பமே இருக்கு. கொஞ்சம் புரிஞ்சுக்குங்க. இந்த விளையாட்டெல்லாம் வேற யாருக்கிட்டவாவது வச்சுக்குங்க!” ஆனால் அவள் என்ன சொன்னாலும் அவன் விட்டபாடில்லை. “வெரி சொரி பரிமளா. நீங்க என் காதலை ஏத்துக்க இல்லையின்னா நான் ட்ரான்ஸராகி ஊருக்ேக போயிடுவேன், அப்போ உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல ஆசிரியரை இழக்க வேண்டி இருக்கும். ” அவன் பேச்சைக் கேட்டு அவள் அதிர்ந்து போனாள். உடனே தலை வலிப்பதாக சரோஜா டீச்சரிடம் பொய் சொல்லிவிட்டு வீட்டுக்கு போய் விட்டாள்.

வீட்டுக்கு போனவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. மயக்கம் வருவதுபோலிருந்தது. உடனே ஒடிப்போய் கட்டிலில் சாய்ந்து கொண்டாள். அன்றைய சம்பவங்கள் அனைத்தும் அசைபோடத் தொடங்கின. ‘ஏன் நாம் இப்படி நடந்துகொள்கிறோம். சுந்தர் நல்லவராகத் தானே தெரிகிறார். அவருக்கு சம்மதத்தை கொடுத்தால் என்ன? அத்தோடு மாற்றலாகி போகப்போவதாகவும் கூறுகிறாரே? எவ்வளவோ காலத்துக்குப் பிறகு நம் பாடசாலைக்கு ஒரு நல்ல திறமையான ஆசிரியர் ஒருவர் கிடைத்திருக்கிறார். அதை நழுவ விடுவதா? இந்த விடயம் சரோஜா டீச்சருக்கும் ஏனைய ஆசிரியைகளுக்கும் தெரியவந்தால் என் நிலை என்னவாகும்’ அவள் குழம்பிப்போய் இருந்தாள். நான் என்ன செய்வது? ‘சம்மதித்து விடு! சம்மதித்து விடு’ என்று அவள் மனசாட்சி சொன்னது. நாளை விடியட்டும் பார்ப்போம். அப்படியே அவள் உறங்கிப்போனாள்.

மறுநாள் பொழுதும் ரம்மியமாக விடிந்திருந்தது. வழமைபோல தன்னை தயார்படுத்திக் கொண்டு பாடசாலைக்கு போனபோது பரிமளாவின் வரவுக்காக காத்திருந்தது போல சுந்தரின் சுபாவம் தெரிந்தது. “ஹாய் குட்மோர்னிங், எப்படி?” என்றவாறு அவள் முன்வந்து நின்றான். “என்ன, என் கோரிக்ைகக்கு பச்சைக்ெகாடி தானே”அவள் தலை குனிந்தாள். “என்ன மிஸ் பரிமளா. ஓகே தானே” அவள் ‘ம்’ என்று குனிந்த தலை நிமிராமல் நாணத்தோடு தலையாட்டினாள். அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது.

“அப்படா. இப்போ தான் எனக்கு உயிரே வந்திருக்கு, நாளைக்கு சனிக்கிழமை தானே. நம்ம ரெண்டு பேருக்குமே லீவு நாள். ஜாலியா எங்கேயாவது வெளியில போய் மனசார பேசுவோமே” அவள் ஆச்சரியம் மேலிட அவனை நோக்கினாள். எதுவுமே பேசாமல் வகுப்பறையை நோக்கி நடக்கலானாள். மனதில் ஏதோவொரு இனம்புரியாத பயம் கௌவிக் கொண்டது. வகுப்பறையிலும் அவளால் இருக்க முடியவில்லை. ஏதோ மாணவர்களோடு ஒருவாறு பட்டும் படாமலுமாக பொழுதைக் கழித்தாள்.

காலமும் நேரமும் தன்பாட்டில் ஓடியது. பாடசாலையை விட்டு வீட்டுக்கு போனவளுக்கு ஒரே மனக்குழப்பமாக இருந்தது. “என்னம்மா, ஒரு மாதிரியா இருக்க , என்னாச்சு” அம்மாவுக்கும் அவளின் மாற்றம் புரிந்துவிட்டது போலும். “கொஞ்சம் தலை வலிக்கிறமாதிரி இருக்கம்மா” “சரி சரி, ரெண்டு பெனடோலைப் போட்டுக்ெகாண்டு படு. எல்லாம் காலையில சரியாய் போகும்” என்று அம்மா கூற ‘காலையில் சரியாகிடுமா? அந்த மறுநாள் தானே என் டென்ஸனுக்கு காரணமே…. பாவம் அம்மா, ஒண்ணும் புரியாம பேசுறா, அம்மாவை ஆசுவாசப்படுத்துவதற்காக போய்ப் படுத்துக்ெகாண்டாள். எப்படியோ கொஞ்சம் உறங்கிப் போனாள்.

கதிரவனின் வரவு கண்டு காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக புலர்ந்திருந்தது. சேவல் கூவும் சிங்கார ஒலிகேட்டு பரிமளா திடுக்கிட்டு எழும்பி சுவர்க்கடிகாரத்தை பார்த்தாள். நேரம் காலை ஐந்தரையையும் தாண்டி இருந்தது. ‘அடடா இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமே’ என்று பதறியடித்துக்ெகாண்டு எழுந்து ஆயத்தமானாள்.

“என்ன மகள்? எங்க போகப் போறீங்க, இன்னைக்கும் ஸ்கூல்லா?” கவ்வாத்து மலைக்கு கையில் கத்தியோடு போவதற்கு தயாராகிய அவள் அப்பா கேட்டபோது ‘இல்லப்பா இன்னைக்கு செமினார், கொஞ்சம் நேரத்தோட போகணும்”….. “சரி சரி கவனம் கவனம்” என்று சொல்லிக்ெகாண்டே அப்பா புறப்பட்டு விட்டார்.

அந்தக் காலைப் பொழுது என்னவோ அவளுக்காகப் புலர்ந்தது போலிருந்தது. மொட்டவிழ்ந்திருந்த மலர்களில் முத்து முத்தாய் தேங்கி நின்ற பனித்துளிகள் தகதகவென ஜொலித்த அந்த காலை வெயிலால் காய்ந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு மனோரம்மியமாக இருந்தது. தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு நின்ற பரிமளா முற்றத்தில் வந்து நின்று சுற்றும் முற்றும் மெதுவாக பார்வையைச் சுழல விட்டாள். பாதையில் ஜனநடமாட்டம் குறைவாக இருந்தது. மெதுவாக நடந்து பாடசாலைக்கு போகும் பாதையோரமாக பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சுந்தர் வந்து சட்டென நின்றான். “ஹாய் பேபி, எங்கே வரமாட்டீங்களோன்னு பயந்துபோய் வந்தேன். குட் கேர்ள், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ சரி ஏறுங்க” என்று தலைக் கவசத்தையும் நீட்டினான். இதயம் ‘படக் படக்’ எனத் துடிக்க, ஒருவித பீதியோடு ஏறிக்ெகாண்டாள். அந்த மோட்டார் சைக்கிள் காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாகப் பறந்தது. அவளுக்கோ ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. ஏனெனில் இது அவளைப் பொறுத்தவரையில் ஓர் புது அனுபவம், அவளையும் அறியாமல் சுந்தரை இறுகப் பற்றிக் கொண்டாள். அந்த மோட்டார் சைக்கிள் ஒரு அழகான பூங்காவுக்குள் நுழைந்தது. “பரிமளா பயப்படாதீங்க. இங்க யாரும் நம்மள பெரிசா கண்டிக்க மாட்டாங்க. இங்கிருக்கும் பூக்களோடு பூக்களாய் நீங்களும் வண்டுகளோடு வண்டாய் நானும் ஜாலியா இருக்கலாம்”, அவன் என்னதான் தைரியத்தை வரவழைத்துத் தந்தாலும், அவளுக்கு என்னவோ ஒருவித பதற்றமாகவே இருந்தது. வாழ்க்ைகயில் முதல்முறையாக அதுவும் ஆடவன் ஒருவனுடன் இவ்வாறு இருப்பது அவளுக்கு புது அனுபவம். அந்த அச்ச உணர்வு அவன் முகத்தில் கொஞ்சம்கூட காணாததையும் அவள் கண்ணுற்றாள். இதற்கு முன்னும் இவர் இப்படி வந்திருப்பாரோ என்ற சந்தேகமும் அவளுக்கு ஏற்படத் தொடங்கியது.

“பரிமளா…. கமான் பேபி கமான்” அவள் கரங்களை இறுகப் பற்றிக்ெகாண்டு அவன் ஆனந்தமாய் நடந்தான். அந்த அழகிய நந்தவனத்தின் நடுப்பகுதிக்கு அவளை அழைத்துச் சென்று, நன்கு பூத்துக் குலுங்கி நின்ற மரத்துக்கு அடியல் அவளை அமரச் செய்தான். அவள் மடியில் அவனும் தலை சாய்ந்து கொண்டே இருவரும் பல கதைகள் பேசினார்கள். பரிமளாவுக்கோ இதுவரையில் காணாத ஓர் இன்பம் உடலெங்கும் பரவியது. இன்னும் இன்னும் அவன் நெருங்க மாட்டானா என்று துடிதுடித்து நின்றாள். நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை. இவ்வாறு சுந்தரும் பரிமளாவும் அடிப்படி இப்படி உல்லாசமாய்ச் சுற்றித் திரிந்தார்கள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. அது தன்பாட்டில் ஓடியது. சுந்தர் ஆசிரியர் பயிற்சிக்காக கலாசாலைக்கு விண்ணப்பித்திருந்தான். மலையகத்தில் உள்ள ஆசிரியர் கலாசாலைக்கு அவன் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இவ்விடயத்தை தெரிந்துகொண்ட பரிமளா துடி துடித்துப் போனாள். “கவலை படாதீங்க பரிமளா பயிற்சியை முடித்துக் கொண்டு இதே ஸ்கூலுக்குத் தான் வருவேன். வந்தவுடன் நம்ம கலியாணத்தை வச்சுக்குவோம், என்னை நம்புங்க” அவள் கரங்களைப் பற்றிக்ெகாண்டு கனிவோடு அவன் கூறியபோது பரிமளா அவனை முழுமையாக நம்பினாள். கண்ணீரோடு அவளை வழியனுப்பி வைத்தாள். போய் ஒருசில வாரங்களில் அவளுக்கு கடிதமும் அனுப்பி இருந்தான்.

இப்போதெல்லாம் அவளுக்கு சுந்தர் இல்லாமல் அந்தப் பாடசாலை வெறுத்துப் போய் இருந்தது. பாடசாலைக்கு போவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வந்தாள். அவளின் நடவடிக்ைககளை கவனித்த சரோஜா டீச்சரும் ஏனையோரும் அவ்வப்போது அவளை சமாதானப்படுத்தினார்கள்.

ஒருநாள் பரிமளா வகுப்பறைக்குள் திடீரென மயக்கமுற்றாள். குழம்பிப் போன ஆசிரியர்கள் அவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று டாக்டரிடம் காட்டியபோது, டாக்டர் புன்னகையோடு கூறியதைக் கேட்டு வியந்து போனார்கள். “அதிர்ச்சி அடையத் தேவையில்லை. இவங்க தாய்மைப் பேற்றை அடைந்திருக்காங்க. டிஸ்சார்ச் பண்ணுறன். கூட்டிக்கிட்டு போகலாம்”, விடயம் வீட்டாருக்கும் தெரியவந்தது. பரிமளாவுக்குத் தெரியும். அவள் எதிர்பார்த்ததுதான். அவள் அப்பா கோபத்தில் கொதித்தெழுந்தார். அம்மா அவளை கட்டிப்பிடித்துக்ெகாண்டு ஓவென்று அழுதாள். “அழுகாதீங்க அம்மா. அவரு நிச்சயம் என்னை ஏத்துக்குவார். கலாசாலையிலிருந்து வந்தவுடன் என்னைக் கட்டிக்கிறதாக சத்தியம் செய்துவிட்டு போய் இருக்கிறார்” என்றாள், அவள். “அது அப்போ! இப்போ இது தெரிஞ்சா என்னாகும்” “ஒண்ணுமே யோசிக்காதீங்க. அவரை நான் நம்புறன். நீங்களும் நம்புங்க”. அவள் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. இருந்தாலும் பரிமளாவின் பெற்றோருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. “நாங்க கண்ட கனவெல்லாம் நாசமாப் பேச்சே கடவுளே. ஏன் இப்படிப் பண்ணிட்டியே ஆண்டவா” என்று புலம்பினார்கள். “சரி, சரி, நடந்தது நடந்து போச்சு. இனி என்ன பண்ண? எல்லாத்தையும் அந்த மாரியாத்தா மேல போட்டுவிட்டு நடக்குறத பாருங்க” அக்கம் பக்கத்தார் ஆறுதல் கூறினார்கள். ஆனாலும் கமலம் குசினியின் ஒரு மூலையில் அமர்ந்தவாறு ஒப்பாரி வைத்துக்ெகாண்டு இருந்தாள். என்ன இருந்தாலும் பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்து சீராட்டி பரிமளாவை வளர்த்தெடுத்த தாய் அல்லவா! அவள் என்னென்ன கனவெல்லாம் கண்டிருப்பாள். எல்லாமே ஒட்டுமொத்தமாக இப்படி கலைந்து போனால் யாரால் தான் தாங்கிக்ெகாள்ள முடியும்? தன் மூத்தமகள் ஏனையவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பாள் என்று எதிர்பார்த்திருந்த அவள் அப்பா முருகானந்தனும் சோர்ந்து துவண்டு போயிருந்தார். அன்று அவர்கள் வீடே சோகமயமாக இருந்தது. யார் யார் ஆறுதல் சொன்னாலும் அவர்களின் உள்ளத்து வலி அவர்களுக்கு மட்டுமே புரியும்.

நாட்கள் நகர்ந்தன. அவள் உடலிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் பல மாற்றங்கள் நடந்தன. அவள் அதைப்பற்றி கொஞ்சம்கூட ஆதங்கப்படவில்லை. ‘சுந்தர் எப்படியும் வருவார்’ என்று அவன் வரவுக்காக நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் இந்த விடயம் காற்றாய்ப் பறந்து சுந்தரின் காதுகளுக்கும் எட்டியது. அவனுக்கு என்னவோ இந்த விடயம் கசப்பைத் தந்தது. அவன் பயிற்சி முடிவடையும் காலமும் நெருங்கி இருந்தது. பயிற்சி முடிந்ததும் வேறொரு பாடசாலைக்கு, ஏன் வேறொரு மாகாணத்துக்ேக போய்விட வேண்டுமென்று எண்ணிக்ெகாண்டான்.

அன்று பரிமளாவுக்கு பிரசவநாள். ஓர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். சரோஜா டீச்சரும் ஏனைய ஆசிரியர்களும் பார்க்க வந்திருந்தார்கள். “கவலைப் படாதீங்க பரிமளா. சுந்தர் நல்லவர்தான். நாங்க அவருக்கு செய்தி அனுப்பி இருக்ேகாம் கூடிய சீக்கிரம் வரலாம்” என்று ஆசுவாசப்படுத்தினார்கள்.

இரண்டு நாட்களில் தாயையும் சேயையும் வீட்டுக்கு கூட்டி வந்தார்கள். அனைத்து அலுவல்களையும் பரிமளாவின் அம்மா கமலமே பார்த்துக் கொண்டாள். அவள் அப்பா முருகானந்தம் வெளியில் தலைகாட்டவில்லை.

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். என்னதான் தன் மகள் சொன்னாலும் சுந்தர் மீது அவருக்கு நம்பிக்ைக வரவே இல்லை. யாருக்கும் சொல்லாமல் மகள் தந்த சில தகவல்களை வைத்துக்ெகாண்டு சுந்தரைத் தேடித்தேடி அலைந்து திரிந்தார். அவன் எங்குமே கிடைக்கவில்லை. இனி அவன் வரவே மாட்டான் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் எப்போதாவது அவன் தன்னைத் தேடி வருவான் என்ற திடநம்பிக்ைகயோடு அவள் மட்டும் காத்திருக்கிறாள்.

பசறையூர் ஏ.எஸ். பாலச்சந்திரன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division