2024ஆம் ஆண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக அமையும் என்பது அனைவரும் எதிர்பார்த்துவருகின்ற ஒரு விடயமாக இருந்தாலும், தேர்தல்கள் நடத்தப்படுமா என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது. எனினும், தேர்தல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் சந்தேகத்தை ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியன அடுத்தவருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதிக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தேர்தல்களை நடத்தாது இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியிருப்பது அரசியல் அரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனப் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஜனாதிபதி, ஒரு தேர்தலும் பிற்போடப்படாது அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் எனக் கூறினார்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியும் எனவே, வாக்காளர்களுக்கு நாங்கள் பயப்படுகிறோம் என்று யாரும் கூற முடியாது. அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றமான தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதிப் பதவிக்காலம் அடுத்த வருடத்துடன் முடிவடைகிறது.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் அடுத்தவருடம் நடத்தப்பட வேண்டும். பாராளுமன்றத் தேர்தலை நினைத்தால் அதற்கடுத்த வருடம் கூட நடத்த முடியும். எனினும், ஜனாதிபதி இரண்டு தேர்தல்களையும் அடுத்த வருடம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளார். இந்த இரண்டு தேர்தல்களிலும் எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பது இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தம்மைத் தேர்தலுக்குத் தயார்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதபோதும், வேட்பாளர்கள் குறித்த பேச்சுக்கள் பல்வேறு மட்டங்களில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
ஐக்கிய தேசிக் கட்சி தமது வேட்பாளராகத் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் களமிறக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தமது கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தான் என்பதை பகிரங்கமாகக் கூறியிருந்தார். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிவரும் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்பது போன்ற செய்திகள் முன்னதாக வெளியாகியிருந்தன. எனினும், கட்சியின் தலைமைத்துவத்திடமிருந்து எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகவில்லை.
அதேநேரம், பொதுஜன பெரமுன தமக்கான வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகத் தெரியவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதற்கான முன்மொழிவை வைத்திருப்பதாகவும் ஊட கங்கள் பல அறிக்கையிட்டிருந்தன.
இவ்வாறான நிலையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டமையால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடுத்துவரக்கூடிய தேர்தல்களில் ஒரு சில தரப்புக்குத் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்பொழுது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இதற்குக் காரணமாகியுள்ளது.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பில் கடந்த சில நாட்களாகப் பாராளுமன்றத்திலும் அதிகம் பேசப்பட்டதுடன், இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப முற்பட்டபோது ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் குழப்பநிலையும் ஏற்பட்டிருந்தது. இதுபோன்ற விடயங்கள் அடுத்தவருடம் நடத்தப்படவிருப்பதாக் கூறப்படும் தேர்தல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
விசேடமாக விலைவாசி அதிகரிப்புப் போன்ற விடயங்களால் மக்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், தமது அதிருப்தியை வெளிப்படுத்த மக்களும் சந்தர்ப்பமொன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில், நாட்டு மக்கள் தற்பொழுது ஓரளவுக்கேனும் சுமுகமான நிலையில் இருப்பதற்குக் காரணம் யார் என்பதும் இங்கு நோக்கப்பட வேண்டியுள்ளது.
ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட மக்கள் வரிசை நிலைமை மாற்றப்பட்டு தமக்குத் தேவையானவற்றை நினைத்தவுடன் பெற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலைக்குக் கொண்டுவந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?” என அண்மையில் நடைபெற்ற ஊடகத் தலைவர்களுடனான சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “தேர்தலில் போட்டியிடுவதைவிட நாட்டைப் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீட்பதே அவசியமானது” எனக் கூறியிருந்தார்.
மறுபக்கத்தில், எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்கான தயார்படுத்தல்களைத் தொடங்கியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியாகாத போதும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே தமது ஜனாதிபதி வேட்பாளர் என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன.
இருந்தபோதும் இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. அதேபோல, தேசிய மக்கள் சக்தி அதாவது ஜே.வி.பி தலைமையிலான கூட்டணி அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை முன்னிலைப்படுத்தி அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அநுரகுமார போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக்க கொண்டு அவர்கள் பல்வேறு கூட்டங்களைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.
இது இவ்விதமிருக்க, வேறு கட்சிகள் மற்றும் சுயாதீனமாச் செயற்படும் தரப்பினரையும் ஒன்றிணைத்து பாரிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளும் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகத் தொடங்கிவிட்டன என்பது உறுதியாகிறது.
பி.ஹர்ஷன்