கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழில் பயிற்சிநெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தினூடாக தொழில் பயிற்சிநெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் உ/த பரீட்சை முடிவடைந்தவுடன் தொழில் பயிற்சிக்கான விண்ணப்பங்களை கோரவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், ஆங்கிலமொழி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடங்களுக்கு மேலதிகமாக தாம் விரும்பிய 2 தொழில்நுட்பப் பாடங்களை தெரிவுசெய்து, பாடநெறியை மாணவர்கள் தொடரலாமெனவும் தெரிவித்தார்.
உ/த பரீட்சை பெறுபேறு வெளி யாகும்வரை 4 மாதங்கள் இப்பாடநெறியை மாணவர்கள் தொடர முடியுமென்பதுடன், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களைத் தவிர, ஏனைய மாணவர்களுக்கு பரீட்சை நடத்தி, பொருத்தமான பாடநெறிக்கு தெரிவுசெய்யவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கேற்ற தொழில் பயிற்சிநெறியை தொடரும் வாய்ப்பும் குறைந்த வருமானமுடைய பிள்ளைகளுக்கு இப்பயிற்சியை தொடரும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசெம்பர் 22ஆம் திகதி முதல் பெப்ரவரி 2ஆம் திகதிவரை வழங்கப்படுமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.