நெதர்லாந்தின் ஆட்சிக் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு தற்போது நெதர்லாந்தின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள சில தொல்பொருட்களை கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கும் பணி எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பில் தேசிய அருங்காட்சியகத்துக்குச் சென்று பார்வையிட்ட அவர், டச்சுக்காரர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இலங்கையின் புராதன தொல்பொருட்கள் திரும்பக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவற்றை காட்சிக்கு வைக்கும் இடங்களைப் பார்வையிட்டதன் பின்னர், பேசிய சாகல ரத்னாயக்க, நெதர்லாந்து அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்தப் புராதனப் பொருட்களை இலங்கைக்கு மீளத் திரும்பக் கொடுக்க தீர்மானித்ததாகக் குறிப்பிட்டார். முதற்கட்டமாக வாள் உறைகள் உள்ளிட்ட சில தொல்பொருட்களை இலங்கையிடம் ஒப்படைக்க நெதர்லாந்து அரசாங்கம் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமைத்துவத்தின் ஒருங்கிணைப்புடன் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.