Home » சர்வதேச தமிழ் வானொலி சேவை

சர்வதேச தமிழ் வானொலி சேவை

இயக்குனர் சரவணையூர் விசு செல்வராஜா

by Damith Pushpika
November 26, 2023 6:15 am 0 comment

தமிழர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்றாலும் தாங்கள் வாழ்கின்ற இடங்களில் அல்லது நாடுகளில் தமிழ் மொழியையும் தமிழ் பாரம்பரிய கலாசாரத்தையும் பேணுவதிலும் வளர்ப்பதிலும் அளப்பரிய பணிகள் ஆற்றி வருகின்றனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்து போனவர்கள், தமிழையும் கலை கலாசாரத்தை வளர்ப்பதிலும் காட்டும் கரிசனையை தாம் பிறந்த நாட்டின் மீதும் காட்டத்தவறுவது இல்லை.

அவ்வாறு சென்றவர்களில் சரவணையூர் விசு செல்வராசாவும் ஒருவர். இவர், கவிஞர், அறிவிப்பாளர், மேடை நாடகக் கலைஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளிலும் தன்னிகரில்லா விளங்கும் ஒரு கலைஞன் கவிஞர் சரவணையூர் விசு செல்வராசா.

இவர், இலங்கையை விட்டுச் சென்று 37 வருடங்களாகின்றன. இலங்கையை விட்டுப் போகும் போது ஓரிரண்டு வருடங்கள் வேலை செய்து விட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பலாம் என்ற நோக்கத்துடன்தான் இவர் இலங்கையை விட்டுச் சென்றார். ஆனால் காலமும் நேரமும் இவரை நிரந்தரமாகவே அங்கு இருக்கச் செய்து விட்டது.

அங்கு இருந்தாலும் இவரது மனவலைகளும் எண்ண அலைகளும் இலங்கையைப் பற்றி எண்ணியே அலை மோதிக் கொண்டிருந்தன. யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். வறுமை கோட்டுக்குள் வாழுகின்ற மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்தன. விளைவு யுத்தம் முடிவுற்று இலங்கைக்கு திரும்பக் கூடிய வாய்ப்பு கிடைத்ததும் திரும்பி வந்து இம்மக்களை பார்த்ததுடன் உதவியும் செய்ய ஆரம்பித்தார்.

விசு செல்வராசாவின் தாயார் பூமணி அம்மா. விசு செல்வராசா தனது தாயாரின் பெயரில் “பூமணி அம்மா அறக்கட்டளை” என்ற பெயரில் அமைப்பொன்றை நிறுவி வறிய மக்களுக்கு உடைகள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வருகின்றார். அதுபோல் மாணவ மாணவிகளுக்கு கணினிகள், கற்றல் உபகரணங்கள் வழங்கி வருகின்றார். விசேட தேவையுடையோருக்கு சைக்கிள்கள் ஆகியவற்றையும் வழங்கி வருகின்றார். ஒரு பிரதேசத்திலும் ஒவ்வொரு பிரதிநிதிகளை நியமித்து இந்த அறப்பணிகளை ஆற்றிவருகின்றார். சரவணையூர் விசு செல்வராசா, சர்வதேச தமிழ் வானொலியின் இயக்குனராகவும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் துணைத் தலைவராகவும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பிரான்ஸ் கிளையின் தலைவராகவும் விளங்குகின்றார்.

இவர் பிறந்தது யாழ்ப்பாணத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற சரவணையூர் என்ற சின்ன கிராமம். அங்கு இருக்கின்ற பாடசாலை ஒரு சிறிய பாடசாலை. அது சின்ன மடு றோமன் கத்தோலிக்க பாடசாலை. இவர், ஆரம்பக் கல்வியை இங்கு பயில ஆரம்பித்துள்ளார். இங்கு 5ஆம் வகுப்பு வரை படித்து விட்டு உயர் கல்வியை வேலணை மத்திய கல்லுாரியில் பயின்றுள்ளார்.

இவருக்கு, இலங்கை போக்குவரத்துச் சபையிலே பணியாற்றுவதற்கான வேலை கிடைத்ததும், அங்கு சில காலம் பணியாற்றியுள்ளார். படிக்கின்ற காலத்திலேயே கிராமத்து மண்வாசனை என்று சொல்லுவார்கள். அந்த காலத்திலே கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களில் கூட தொலைக்காட்சி இல்லாத காலம். வானொலி கேட்பதாக இருந்தால்கூட நாலு வீட்டுக்கு அப்பால் சென்று தான் கேட்க வேண்டும். அவ்வாறான ஒரு காலத்திலே இந்த மக்களுக்கு பொழுதுபோக்குக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்தின் விளைவாக அவரது ஊரிலே, 16 வயதில் ஒரு நாடகத்தை மேடையேற்றியுள்ளார். அந்த நாடகம் பரவலாக பேசப்பட்டது. இதன் விளைவாக இந்த நாடகம், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல மேலும் பல இடங்களிலும் மேடையேற்றப்பட்டது. இவரது உறவு முறை உறவினர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் இன்னாசி முத்து. இந்த இன்னாசி முத்து. ஈழநாடு பத்திரிகையிலே உதவி ஆசிரியராகக் கடமையாற்றியவர். அவர் இந்த நாடகத்தைப் பற்றி விமர்சனம் எழுதினார். இது விசு செல்வராசாவின் கலை ஆர்வத்தை மேலும் துாண்டியது. இன்னும் இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது. கவிதை, கட்டுரை, நாடகம் என்று எழுதினார்.

நாடகங்களை மேடையேற்றி மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்த இவர், 50 குடும்பங்கள் வாழ்ந்த இவரது கிராமத்து மக்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்த சைக்கிளோட்டப் போட்டி, மாட்டு வண்டி ஓட்ட போட்டி என இன்னொரன்ன போட்டிகளை நடத்தி மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்துள்ளார்.

இங்கு இருந்து அவர் வெளி நாட்டுக்குச் சென்றவுடன் 1981 ஆம் ஆண்டு தேவகுமாரன் என்பவர் ரியூனன் நாட்டிலே பண்பலை வானொலி என்ற வானொலி சேவையை ஆரம்பித்தார்.

இந்த வானொலி ஒரு நாளைக்கு இரண்டரை மணித்தியாலயம் தனது ஒலிபரப்பு சேவையை நடத்தியது. அது தான் ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ் வானொலி. ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலியில் அறிவிப்பாளராக சரவணையூர் விசு செல்வராசா கடமையாற்றத் தொடங்கினார். இது இடைநடுவில் நிறுத்தப்பட்டது. அதன்பின் பல வருடங்களாக ஒரு வானொலி சேவையை ஆரம்பிக்க முயற்சிகள் செய்யப்பட்டாலும் 1995ஆம் ஆண்டு வரை அது கைகூடவில்லை. 1995இல் ரேடியோ கனடா என்ற வானொலி சேவையை மாபெரும் இரு கலைஞர்களான பரமேஸ் – கோணேஸ் ஆரம்பித்தார்கள். அதில் நான் பிரான்ஸுக்கு பொறுப்பாளராக இருந்தேன்.

இதுவும் பெரும் செலவில் நடத்தப்பட்டது. செலவு கட்டுப்பாடாகாத காரணத்தால் அதுவும் இடையில் நிறுத்தப்பட்டது. இவ்வாறு பல தமிழ் வானொலி சேவைகள் ஆரம்பிக்கபட்டு இடையில் நிறுத்தப்பட்டன. 2000 ஆம் ஆண்டு இன்னுமொரு வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதுவம் 2009ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன்பின் இணையத்தில் இவர் ஆரம்பித்த வானொலி சேவை தான் தற்போதுள்ள சர்வதேச தமிழ் வானொலி சேவை. இது 24 மணித்தியாலயமும் இயங்கிக் கொண்டிருக்கும் வானொலி சேவை. இந்த வானொலி சேவை மொன்டியலிலும் கனடாவிலும் 24 மணித்தியாலமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் செய்திகள், கலை, இலக்கிய நிகழ்வுகள், தமிழ் தலைவர்களின் பேட்டிகள், பாடல்கள் , சிறுவர் நிகழ்ச்சிகள், திருக்குறள்கள், தேவாரம் என்பன ஒலிபரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.

இதனை ஆரம்பிப்பதற்கு இவரது தாயாரான பூமணி அம்மாவும் பெரும் உதவி புரிந்துள்ளார். அதன் இயக்குனராகவும் அறிவிப்பாளராகவும் இவர் விளங்குகின்றார்.

இவர் 21 வருடங்களாக தமிழ்சுடர் என்ற சஞ்சிகையை நடத்தி வந்துள்ளார். பாரதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பாரிஸில் தமிழ் இலக்கிய மாநாடொன்றையும் நடத்தியுள்ளார்.

சர்வதேச தமிழ் வானொலியின் 27ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு எதிர்வரும் 2023.12.02ஆம் திகதி மு.ப. 9 மணி முதல் பி.ப. 5 மணி வரை யாழ் பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் முனைவர் சதீஸ்குமார் சிவலிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள்.

[email protected]
வட்ஸ்அப்: 0773124543

முனைவர் கே. ஈஸ்வரலிங்கம்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division