பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 98 ஆவது பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது. 1975 ஆம் ஆண்டு பகவானின் பிறந்தநாளில், பாபா கூறிய ஒரு தகவல் இது. “நான் எந்த ஒரு குறிப்பிட்ட தினத்தையும் என்னுடைய பிறந்த தினமாகக் கருதவில்லை.
ஏனென்றால் எப்போது உங்கள் இதயத்தில் இறைத்தன்மை மலர்கிறதோ, அன்றுதான் உங்களுக்குள் நான் பிறந்த தினம். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் இறைத்தன்மை மலர்ந்த அந்த நாளைத்தான், என்னுடைய பிறந்ததினமாகக் கொண்டாடவேண்டும். நீங்கள் எப்போது என்னுடைய அறிவுரைகளைக் கடைப்பிடிக்க உறுதி கொள்கிறீர்களோ, எனது வழிபாடுகளை பின்பற்றுகிறீர்களோ, எனது கட்டளைகளை சேவையாக மாற்றுகிறீர்களோ, சாதனையில் ஈடுபடுகிறீர்களோ, அந்த நாள் தான் உங்களுக்கு, எனது பிறந்த தினம்.
நான் பிறந்த தினம் என்று நீங்கள் கௌரவப்படுத்தும் நாள் 23 அன்று, வழக்கமான சடங்குகளுடன் கொண்டாடினாலும், அந்த நாளும் மற்ற நாட்களைப் போல ஒரு சாதாரண நாளாகவே விளங்கும். மனிதரை மதித்து வணங்குங்கள்.
அது என்னை வந்தடையும். மனிதரைப் புறக்கணிப்பது என்னைப் புறக்கணிப்பதாகும். மனிதரை ஒதுக்கிவைத்து, இறைவனை வணங்குவதால் என்ன பயன்?
இறைவன் மீதான பிரேமை, மனிதன் மேலான பிரேமையாக வெளிப்படவேண்டும். அதாவது அப்பிரேமையானது சேவையாகப் பரிணமிக்க வேண்டும். பிரேமையின் மூலம் மட்டுமே, ஒவ்வொரு தனி மனிதனுக்கும், நாட்டுக்கும் சாந்தி கிடைக்கும். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவும், மகான் சீரடி சாயி பாபாவும் எந்த ஒரு புதிய மதத்தை நிறுவவோ, போதிக்கவோ முயற்சி செய்யவில்லை. உலகிலுள்ள அனைத்து மதங்களையும் அனுசரித்து “தெய்வம் ஒன்றே” “அன்பே இறைவன்” என்ற அடிப்படையில் சாயி இயக்கத்தை தோற்றுவித்துள்ளார்.
சீரடி சாயி பாபாவும், சத்ய சாயி பாபாவும் ஒருவரே! சீரடி சாயி பாபா அருள்வாக்கின்படி 8 வருடங்கள் கழித்து சத்ய சாயி பாபா அவதரித்தார். சத்ய சாயி பாபாவின் அறிமுகத்துடன் தான், இலங்கையில் சாயி பக்தர்களுக்கு சீரடி சாயி பாபாவின் அருள் கிட்டியது. ஏன்? சீரடி சாயி பாபாவின் பிறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்தியவரும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாதான். இந்த வருடம் பகவான் சத்ய சாயி பாபாவின் 98 ஆவது பிறந்ததினம் குரு வாரமாகிய வியாழக்கிழமையில் வருவதனால். அவரது பிறந்த தினத்தை, கொழும்பு, புதுச் செட்டித் தெருவிலுள்ள ஸ்ரீ சத்ய சாயி மத்திய நிலையம், நவம்பர் 23 ஆம் திகதி வியாழக்கிழமை, சற்குருக்களாகிய சீரடி- சத்ய சாயிகளின் வழிபாட்டு நாளாகிய குருவாரத்தில் கொண்டாடவிருக்கிறது. அன்று காலையில் பிரசாந்திக் கொடியினை ஏற்றி, அன்னதான நிகழ்வுகளுடன், முழு நாள் நிகழ்ச்சிகளாக, திருவூஞ்சல், பிறந்தநாள் கேக் வெட்டுதல், சாயி பூஜை, பஜன் மற்றும் சீரடிசாயி பாபாவின் நான்கு கால ஆராத்திகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் நவம்பர் 22ஆம் திகதி புதன் கிழமை மாலை, புட்டபர்த்தியில் பாபாவின் சமாதியில் வைத்து பூஜீத்து எடுத்து வரப்பட்ட, பாபாவின் திருவுருவத்துக்கு, நவதிரவிய அபீஷேகம் செய்யப்பட்டு, சித்திரத்தேர் பவனி இடம்பெறவுள்ளது. உலகிலேயே சத்ய சாயி பாபாவின் சித்திரத்தேரோட்டம் நடைபெறும் இடம், கொழும்பு சாயி நிலையம் மட்டுமே!
எஸ்.டி.எஸ். உதயநாயகம்.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய
( கொழும்பு) நிலையம்-