2024 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பித்திருந்தார். நாட்டை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டெடுத்த பின்னர் ஜனாதிபதி சமர்ப்பித்த இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் இதுவாகும்.
கடந்த வருடத்தில் நிலவிய மக்கள் கியூ வரிசைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் சுமுகமான நிலைமை ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில், அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் தேர்தல் வருடமாக இருக்குமென ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதாவது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பன நடைபெறவிருப்பதால் அதனை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் இதுவென்ற விமர்சனங்களும் மற்றொரு புறத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், “தேர்தலை இலக்கு வைத்து இந்த வரவுசெலவுத் திட்டத்தை நாம் தாக்கல் செய்யவில்லை, நாட்டின் எதிர்காலத்தையும் மக்களையும் நோக்காகக் கொண்டே இதனைத் தாக்கல் செய்திருக்கிறோம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவுத்திட்ட உரையில் கூறியிருந்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘சிலர் இந்த வரவுசெலவுத் திட்டத்தை தேர்தல் வரவுசெலவுத் திட்டம் என்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் இவ்வாறு அழைக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முடிவில்லாத சலுகைகளையும் சம்பள அதிகரிப்பையும் வழங்குவதே அத்தகைய தேர்தல் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
சுதந்திரம் அடைந்த பின்னரும் 75 வருடங்களில் பலமுறை அதுதான் நடந்தது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் வித்தியாசமானது. இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவுசெலவுத் திட்டமாகும். தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப ஒரு புதிய பொருளாதார அமைப்பின் அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டம்.
தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே எனக்கு முக்கியம். இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் வெற்றிக்காகத் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும். பௌத்த பொருளாதார தத்துவத்தின்படி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம். சமநிலைவாழ்வு என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், நாட்டுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் பல முன்மொழிவுகள் இந்த வரவுசெலவுத் திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வரவுசெலவுத் திட்டம் நீண்ட கால பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாட்டில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு குறித்துக் கவனத்தில் எடுத்து அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனைவை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை இதற்கு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம்.
2015 ஆம் ஆண்டின் பின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தற்பொழுதுள்ள 1.3 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்குமான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.
அரச ஊழியர்களுக்குத் தற்பொழுது கிடைக்கும் மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 7,800 ரூபாவை 10,000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். திறைசேரிக்கு குறித்த வருடத்திற்குரிய வருமானம் கிடைக்க ஆரம்பிப்பது பெப்ரவரி, மார்ச் மாதங்களின் போதாகும்.
எனவே இக்கொடுப்பனவு அதிகரிப்பினை மாதாந்த சம்பளத்தில் சேர்த்துக் கொள்வது ஏப்ரல் மாதத்திலிருந்தாகும். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான நிலுவைத் தொகையினை ஒக்டோபர் மாதத்திலிருந்து தவணை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
அதேபோல, ஓய்வூதியம் பெறுகின்ற 730,000 பேருக்கும் தற்பொழுது கிடைக்கும் 3,525 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஆகும். அவர்களுக்கு தற்போது கிடைப்பது ரூபா 3,525 மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாகும். அரச ஓய்வூதியதாரர்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை ரூபா 6,025 வரை அதிகரிக்கவிருப்பதாகவும் வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மாத்திரமன்றி, சமூகத்தில் நலிவுற்றவர்களுக்காக வழங்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவான ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம், கர்ப்பிணித் தாய்மாருக்கான விசேட கொடுப்பனவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு இதனைவிட அதிகமாக இருக்க வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இருந்த போதும், நடைமுறைச் சாத்தியமான தொகையினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும், ஒரு சில தொழிற்சங்கங்கள் இதுவிடயத்தைத் தூக்கிப்பிடித்து தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவே தெரிகிறது.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் தொடர்பிலும் வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பெருந்தோட்டப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு வீட்டு உரிமையை வழங்கும் நோக்கில் அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு காணி உரித்து வழங்குவதற்கும், இதன் ஆரம்ப கட்டமாக ரூபா 4 பில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி வரவுசெலவுத்திட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் அதேபோன்று பதுளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை உள்ளடக்கிய மலைநாட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக 10 வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமுதாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றினை 2024 ஆம் வருடத்திலிருந்து செயற்படுத்துவதற்கும், இதற்காக ரூபா 10 பில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
வீடமைப்பு எனும் போது வடக்கு, கிழக்குத் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவடைந்த 14 வருடங்கள் பூர்த்தியடைந்திருந்தாலும், அப்பிரதேசங்களில் மக்கள் இன்னமும் வீடற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களை மீள்குடியேற்றுவதற்கான தேவைகளை நிறைவேற்ற 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக நிதி ஒதுக்கீடாக வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தவும், மீதமுள்ள வீடற்ற குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்கவும் ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, யுத்தத்தினால் காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுக்காக ஏற்கனவே ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேசத்தில் குடிநீர்ப் பிரச்சினை பல வருடங்களாக தீர்க்கப்படாதிருப்பதுடன் வெற்றிகரமான கருத்திட்டமெதுவும் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. தற்பொழுது காணப்படும் சிக்கலான பல்வகை நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றாக ஏற்கனவே சாத்தியவள ஆய்வு நிறைவு செய்யப்பட்டுள்ள பாலி ஆறு நீர் கருத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்திட்டத்தின் ஆரம்ப வேலைகளை 2024 இன் முதல் அரை ஆண்டில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், இதற்காக 250 மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
யாழ்ப்பாணம்-, மன்னார் பிரதான வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள பூநகரி நகரத்தை சுற்றுலாத்துறைக்கு ஒரு முக்கிய நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் மலையகத்தின் முன்னேற்றம் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பது அப்பகுதி மக்களின் மீது கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடாக அமைகிறது.
இது இவ்விதமிருக்க, ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவுசெலவுத் திட்டத்தில் கல்வித்துறை தொடர்பில் குறிப்பாக உயர்கல்வி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. விசேடமாக நான்கு புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது குறித்த முன்மொழிவுகள் பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சீதாவக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (இதற்கு லலித் அதுலத்முதலி பட்டப்பின் படிப்பு நிறுவனம் சேர்த்துக் கொள்ளப்படும்.), கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச பல்கலைக்கழகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, உயர்கல்வித் துறையில் தற்பொழுது செயற்பட்டு வரும் தனியார் நிறுவனங்களான வியாபார முகாமைத்துவ தேசியக் கல்லூரி, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஹொரைசன் வளாகம் மற்றும் றோயல் இன்ஸ்ரிடியூட் ஆகியவற்றை பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்துவதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளும் பல்கலைக்கழங்களை ஆரம்பிப்பதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மாகாண சபைகளின் மூலமும் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் முன்மொழிந்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு துறைகள் பற்றியும், நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தும் காலத்துக்குப் பொருத்தமான வரவுசெலவுத்திட்டமாக இது அமைந்துள்ளது.