பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஷாரப்பின் பெரும் முயற்சியால், பொத்துவில் உப பஸ் டிப்போவை பிரதான பஸ் டிப்போவாக தரம் உயர்த்தும் நிகழ்வு இன்று (19) முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறும். இந்நிலையில், முஷாரப் எம்.பி.யின் அழைப்பின் பேரில் பிரதம அதிதிகளாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொள்வதுடன், தரம் உயர்த்தப்படும் பிரதான பஸ் டிப்போவை அவர்கள் நாடா வெட்டி திறந்துவைக்க உள்ளனர்.
இந்நிகழ்வில் அதிதிகள் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்படுவதுடன், கலை நிகழ்வுகளும் நடைபெறும்.
பொத்துவில் உப பஸ் டிப்போவ பிரதான டிப்போவாக தரம் உயர்த்துவதற்கான தீர்மானம் கடந்த வருடம் அமைச்சு மட்டத்தில் எட்டப்பட்ட போதும், நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பொத்துவில் பஸ் டிப்போ அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குவதில் பல சிரமங்கள் காணப்பட்டன. ஆயினும், குறித்த காலப்பகுதியில் பொத்துவில் பஸ் டிப்போ அமைந்துள்ள காணிக்கு சட்ட ரீதியான உரிமை மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முஷாரப் எம்.பி.யின் முயற்சியால், இந்த பஸ் டிப்போவுக்கான உரிமம் சட்ட ரீதியாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பஸ் டிப்போவின் துரித அபிவிருத்திக்கு முதற்கட்டமாக சுமார் 60 மில்லியன் ரூபா, முஷாரப் எம்.பி.யின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட வேலை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை விசேட நிருபர்