மத்திய மலைநாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக அக்குறணை நகரினூடாக பாயும் பிரதான நீரோடையும் துனுவில வீதியினூடாக செல்லும் வஹகல ஓயாவும் நிரம்பியுள்ளதால், அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அக்குறணையை அண்மித்த பல வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன், வீடுகளில் இருந்த உடைமைகளும் வெள்ளத்தில் நனைந்துள்ளன.
அத்துடன், அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியதால், A-09 வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி வெள்ளத்தால் மூழ்கிய போதும், இந்த வீதியினூடாக பயணிக்க முயற்சித்த பஸ் வண்டியொன்றும் லொறியொன்றும் தொடர்ந்து பயணத்தை தொடர முடியாத நிலையில், வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டது.
இந்நிலையில், பஸ்ஸில் இருந்த பயணிகள் மிகவும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அக்குறணை நகரம் ஒரு மாதத்தில் நீரில் மூழ்குவது இது ஐந்தாவது தடவையென்பதும் குறிப்பிடத்தக்கது.