Home » நீதித்துறையை பலப்படுத்த அவசியமான திருத்தங்கள்!

நீதித்துறையை பலப்படுத்த அவசியமான திருத்தங்கள்!

by Damith Pushpika
November 19, 2023 6:34 am 0 comment

நாட்டின் நீதித்துறையைப் பலப்படுத்துவதற்கு அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்க ஊடகமான இலங்கை வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கே: கடந்த வருடங்களில் நீதியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது. இதனை சற்று விளக்கமுடியுமா?

பதில்: உலகில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகளில் சட்டத்தின் ஆட்சியையே மக்கள் பொதுவாக எதிர்பார்க்கின்றனர். சட்டத்தின் ஆட்சி எனப்படும்போது சாதாரண மக்கள் மாத்திரமன்றி, சட்டத்தை இயற்றுபவர்களும், அதனை நிர்வகிப்பவர்களும் அந்த நீதிக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதேபோல நாட்டில் காணப்படும் சட்டக் கட்டமைப்பும் அதற்கு ஏற்றால் போல நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாடு கடந்த வருடத்தில் பல்வேறு பக்கங்களாலும் வீழ்ச்சியுற்றிருந்தது. இது ஓரிரு நாட்களில் ஏற்பட்ட நிலைமை அல்ல, எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியாமையால் ஏற்பட்ட நிலைமையாகும்.

இதன் பின்புலத்தை எடுத்து நோக்குவோமாயின், கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாகக் குறிப்பாக 78ஆம் ஆண்டு அரசியலமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மக்கள் பல்வேறு விடயங்களில் நம்பிக்கையிழந்திருந்தனர். இருந்தாலும் அவ்வப்போது அரசியல் மேடைகளில் இதற்கான மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன. 90களில் ஜனாதிபதியின் அதிகாரம் மற்றும் பொதுத்தேர்தல் முறை தொடர்பான சாதகமான விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனினும், துரதிஷ்டவசமாக இது 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி பல்வேறு துறைகளிலும் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டது. இந்தக் குழப்பத்தாலேயே மக்கள் மோசமான சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு அரசியல்வாதிகள் என்ற ரீதியில், நிர்வாகம் செய்பவர்கள் என்ற ரீதியில் நாம் எதனைச் செய்தாலும் பயனில்லை. அதற்குத் தேவையான அடிப்படை நீதிக்கட்டமைப்பை நாட்டுக்குள் உருவாக்க வேண்டும். இதற்கமையவே 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாம் நிறைவேற்றினோம். அதுதான் எமது ஆரம்பமாகும். பல்வேறு பக்கங்களிலிருந்து இதற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அரசியல் வேறுபாடின்றி அதனை நிறைவேற்ற முடிந்தது. ஒட்டுமொத்த நாட்டிலும் பிரதான இடங்களை அரசியலிலிருந்து விடுவிக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம். நீதிச் சேவைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, உள்ளிட்ட நிறுவனங்களை அரசியலில் இருந்து விடுவித்து சுயாதீனமாகச் செயற்படும் நிறுவனங்களாக மாற்றுவதற்கான திருத்தங்களைக் கொண்டுவந்தோம். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சுயாதீனமாக இயங்குவதற்கான கட்டமைப்பு அவற்றுக்கு உள்ளன.

இருந்தபோதும், தொடர்ந்தும் பாராளுமன்றத்துக்குப் பொதுமக்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதில் காணப்படும் சட்ட ஏற்பாடுகள் குறித்து பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதில் ஒன்று மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுபவர்கள் யார்? இதற்கான அடிப்படை என்ன? தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டத்துக்கு அமைய அதிக பணத்தைச் செலவுசெய்யக் கூடியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. பணத்தைச் செலவுசெய்து மக்கள் மத்தியில் பலவந்தமாகத் தம்மைத் திணிக்கின்றனர். இதற்கு, பாதாள உலகக் குழுவினர் உள்ளிட்ட சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் பணமே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. தமது சொந்தப் பணத்தைப் பயன்படுத்துவது மிகவும் குறைவது.

இதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் பிரசாரத்துக்காக நிதியளிப்பைக் கண்காணிக்கும் சட்டத்தை ஜனவரி மாதம் நிறைவேற்றியிருந்தோம்.

கே: அரசியல்வாதிகள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் காணப்படும் சட்டத்திலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

பதில்: அரசியலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிதியைக் கண்காணிப்பது இதன் நோக்கமாகும். வரையறுக்கப்பட்ட அளவைவிட அளவுக்கதிகமாகச் செயற்பட்டால் குற்றவியல் செயற்பாடாகக் கருதி அதற்கு எதிராகத் தண்டனை வழங்க முடியும். தேர்தல் சட்டத்தை மீறியமைக்காகப் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பறித்து அதற்கான தண்டனையை வழங்குவதற்கும் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த மாவட்டத்தில் போட்டியிடக்கூடிய ஒருவர் தேர்தல் பிரசாரத்துக்குச் செலவுசெய்யக் கூடிய அதிகூடிய தொகையை அறிவிக்க வேண்டும். அரச சொத்துக்களைப் பயன்படுத்த முடியாது, வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெறத் தடை மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்து 3 வாரங்களுக்குள் செலவு செய்த பணம் குறித்த சத்தியக்கடதாசியை வழங்க வேண்டும். இதில் நிதி செலவு செய்த முறை மாத்திரமன்றி எங்கிருந்து அந்தப் பணம் கிடைத்தது என்பதும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 42 நாட்களுக்கு காலஅவசாகம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நிதியளித்தல் எல்லையைத் தாண்டி செலவு செய்துள்ளார் அல்லது தடை செய்யப்பட்ட தரப்பிலிருந்து பணத்தைப் பெற்றுள்ளார் என நீதிமன்றத்தில் நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பறிப்பதற்கு அல்லது சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அறவிடுவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் உள்ளன.

கே: சட்டம் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் காணப்படுவதாக நீங்கள் கருதவில்லையா?

பதில்: இந்தச் சட்டம் மாத்திரமன்றி எந்தவொரு சட்டத்தை எடுத்துக் கொண்டாலும் இந்நிலைமை உள்ளது. குற்றவியல் சட்டக்கோவையில் கொலைக் குற்றவாளிகளுக்கான தண்டனை இருந்தாலும், கொலை செய்தவர்கள்தான் நூறுவீதம் இதில் அகப்படுவதில்லை. குற்றமிழைக்காதவர்களும் இதில் அகப்படுகின்றனர். எனவே, சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுதல் என்பதை எம்மால் தடுக்க முடியாது. முடிந்தளவு தவறுகளைத் தடுப்பதற்கே எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்.

கே: தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அமைச்சரவையில் முன்மொழிவொன்றை வைத்துள்ளீர்கள். இது பற்றி விளக்க முடியுமா?

பதில்: தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு அதனை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு அமைய பாராளுமன்றத்துக்கு 160 தொகுதிகளை உருவாக்கி 160 உறுப்பினர்களை தொகுதிகளிலிருந்து நேரடியாகத் தெரிவுசெய்தல் மற்றும் எஞ்சிய 65 ஆசனங்களுக்கும் தேசியப் பட்டியல் மற்றும் மாகாணப் பட்டியலில் தெரிவுகளை மேற்கொள்ளும் யோசனை இதில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளபோதும் இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை. எதிர்வரும் வாரங்களில் இது பற்றிப் பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அமைப்பு மாற்றம் என்பது இதுவாகும். இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்.

கே: நீதித்துறையைப் பலப்படுத்த வேறு எவ்வாறான மாற்றங்களைச் செய்துள்ளீர்கள்?

பதில்: நாட்டில் ஊழல் மோசடி அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இலஞ்ச ஊழல் மோசடித் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். இது மாத்திரமன்றி நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் காணப்படுகின்றன. இவற்றைத் துரிதப்படுத்தும் வகையில் மத்தியஸ்த சபைச் சட்டத்தைத் திருத்தியுள்ளோம். அது மாத்திரமன்றி காணி உறுதிகளை எழுதுதல், உயில் எழுதுதல் போன்ற விடயங்களில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கும் செயற்பாடுகள் அதிகரித்திருந்தன. இதனைத் தடுக்கும் வகையில் பல வருடங்களாகத் திருத்தப்படாதிருந்த சட்டங்கள் திருத்தப்பட்டன. இந்தத் திருத்தத்தின் ஊடாக எதிர்காலத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணி உறுதிகளைச் சரிக்கட்டுதல் மற்றும் உயில் தொடர்பான ஆவணங்களைத் தயாரித்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். கடந்த வருடத்தில் வீதியில் இறங்கிப் போராடிய மக்களும் இவ்வாறான மாற்றத்தையே பெரும்பாலும் எதிர்பார்த்திருந்தனர். அரசாங்கம் என்ற ரீதியில் குறிப்பாக நீதி அமைச்சர் என்ற ரீதியில் நான் இதற்கான நீதித்துறையை வலுப்படுத்த பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளேன் என்பதில் பெருமை கொள்ள முடியும்.

கே: தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படுகிறது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: தேர்தலைப் பிற்போடவேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது. இந்தக் குற்றச்சாட்டு எங்கிருந்து வருகின்றது என்பது எனக்குத் தெரியவில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்குத் தாக்கம் செலுத்திய காரணங்கள் என்ன என்பது இந்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். அன்று அந்தத் தேர்தலை நடத்தியிருந்தால் நாடு இன்று இருக்கும் நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும். தேர்தலை நடத்துவதற்குப் பணம் இல்லாத சூழ்நிலையில் தேர்தலை நடத்தியிருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பும் மக்களையே சென்றடைந்திருக்கும். ஆனால் நாட்டை ஓரளவுக்கு சுமுகமான நிலைக்கு நாம் கொண்டு வந்திருப்பதால் தேர்தலை ஒத்திவைப்பதற்கோ அல்லது பிற்போடுவதற்கான தேவையோ எதுவும் எமக்குக் கிடையாது.

கே: சமூக ஊடகங்களை ஒழுங்குறுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் அரசாங்கம் இழைக்கும் தவறுகளை மூடிமறைப்பதற்கான முயற்சியா?

பதில்: நாம் எந்தவொரு சட்டமூலத்தைக் கொண்டுவரும்போதும் அதற்கு ஆதரவான தரப்பினர் இருக்கின்றனர், எதிரானவர்களும் இருக்கின்றனர். சமூக ஊடகங்களை ஒழுங்குறுத்துவது தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகள் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அமைய சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் போது சுய கட்டுப்பாட்டை மேற்கொள்வதாக இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. இனினும், நடைமுறையில் இது சாத்தியமாகவில்லை. சமூக ஊடகங்களின் பயன்பாடு மோசமான நிலைக்குச் சென்றது. எனவே நியாயமான ஒழுங்குபடுத்தல் ஒன்றுக்கான தேவை என பெரும்பாலான தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம், கருத்துச் சுதந்திரத்தை எவராலும் தடுக்க முடியாது. இது அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்தில் அவ்வாறான நிலைமை எதுவும் இல்லை.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division