சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவினால் விண்ணுக்கு ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதன் முறையாக படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வைத்துறையில் இதுவொரு மகத்தான வெற்றியாகும்.
இந்தியாவினால் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ரொக்கட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த 29 ஆம் திகதி சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதன் முறையாக படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனைப் பதிவு செய்துள்ளது. இந்தப் பதிவு எலக்ட்ரோன் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுடன் படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய ‘லெக்ராஞ்சியன் புள்ளி-1’ ஐ நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாகப் படமெடுத்து அனுப்பியுள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியே உயர் ஆற்றல் கொண்ட சூரியக் கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளது.
உயர் ஆற்றல் சூரியக் கதிர்கள் குறித்து ஆதித்யா-எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ‘எச். இ. எல் 10 எஸ்’ கருவி நன்றாக ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்காகவே ஆதித்யா எல்-1 விண்கலம் வடிவமைக்கப்பட்டது.
ஆதித்யா எல்-1 விண்கலம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் ெலாக்ரேஞ்ச் பொயிண்ட் 1 புள்ளியில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். பின்னர் விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சூரியனின் மேல்வளிமண்டலம், வெளிப்புற அடுக்கு குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல் -1 விண்கலம் மேற்கொள்ள உள்ளது. ஜனவரி மாதத்தில் இந்த விண்கலம் ஆய்வினை தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ முக்கிய அப்டேட்டை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது.
சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் பிற விண்வெளி வானிலை நிகழ்வுகளை ஆய்வு செய்வது முக்கியம். ஏனெனில், அவை பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதிக்கலாம். அவை ஆற்றல் அமைப்புகள், செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகள் மற்றும் வானொலி தகவல் தொடர்புகளை பாதிக்கலாம். மோசமான சூழ்நிலைகளின் போது, அவை மணிக்கணக்கில் பூமியின் பெரிய பகுதிகளை பாதிக்கும் இருட்டை ஏற்படுத்தும். சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் சூரிய செயல்பாடுகளை ஆய்வு செய்வது அத்தகைய அபாயங்களை எதிர்கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நிலவின் தென்துருவத்திற்கு அருகே விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகத் தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தியாவுக்கு சூரியனின் ஆய்வு தொடர்பான வெற்றிகளும் பெரும் சாதனைகளாகவே அமைகின்றன.
சூரியனைக் கண்காணிக்கவும் சூரியக் காற்று (solar wind) போன்ற விண்வெளி வானிலை அம்சங்களை ஆய்வு செய்யவும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகத்தை தொடங்குவதே இந்தத் திட்டம் ஆகும். சூரியன் ஆய்வு செய்யப்படுவது இது முறை அல்ல. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக கருவிகளை வைத்துள்ளன. ஆனால் இந்தியாவின் திட்டம் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
உண்மையில், இந்த விண்கலம் சூரியனைச் சென்று அடையாது. இதன் இலக்கு பூமியிலிருந்து 15 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட சுமார் நான்கு மடங்கு அதிகம். ஆனால் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கான தூரத்தில் ஒரு சிறிய பகுதியே ஆகும். அதாவது சுமார் ஒரு வீதம் ஆகும்.
ஏவப்பட்டதில் இருந்து எல்-1 வரையிலான மொத்தப் பயணத்திற்கு ஆதித்யா -எல்1 இற்கு சுமார் நான்கு மாதங்கள் ஆகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா திட்டத்தின் பெயரில் உள்ள ‘L1’ என்பது ஒரு புள்ளியைக் குறிக்கிறது. இது சூரியன் மற்றும் பூமி போன்ற இரண்டு பெரிய கோள்களின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளி. இங்கு ஒரு விண்கலம் குறைவான எரிபொருளைப் பயன்படுத்தி சமநிலையில் இருக்க முடியும்.
18 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் இதனை ஆய்வு செய்த பிரெஞ்சு கணிதவியலாளர் ஜோசப்-லூயி லக்ராஞ்ஜின் பெயரில் இது அழைக்கப்படுகிறது. ஆதித்யா விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் 2019- இல் சுமார் 380 கோடி ரூபா செலவில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இஸ்ரோ இந்தத் திட்டத்திற்கான உண்மையான செலவின் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.
இஸ்ரோ விண்வெளியில் ஆழமாகச் செய்ய வேண்டியப் பயணங்களுக்கு குறைந்த சக்தி வாய்ந்த ெராக்கெட்டுகளைப் பயன்படுத்துகிறது. மேலும், அதிக தூரம் பயணிக்க ஈர்ப்பு விசையைப் பயன்படுத்துகிறது. இது சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற இடங்களை அடைய எடுக்கும் நேரத்தை அதிகரிக்கிறது, ஆனால் இது கனரக ரொக்கெட்டுகளுக்கு ஆகும் செலவைக் கணிசமாகக் குறைக்கிறது. இஸ்ரோ ஒப்பீட்டளவில் குறைவான பட்ஜெட்டில் இயங்கி, சமீபத்திய காலங்களில் பெரிய வெற்றிகளை அடைந்திருக்கிறது.
இந்தியாவின் விண்வெளி சாதனைகள் வெற்றியுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆளில்லா விண்கலமான சந்திரயான்- 3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியபோது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா ஆனது.
2014-ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஒரு விண்கலத்தைச் செலுத்திய முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்திருந்தது. இந்தியா அடுத்த ஆண்டுக்குள் பூமியின் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்பும் மூன்று-நாள் திட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.