துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் நிலைத்து அனைவரும் சமம் எனும் அறம் வெல்லவும் அநீதி தோற்கவும் ஓர் அடையாளத் திருநாளாக திகழும் தீபாவளித் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்பதாக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மனித குலத்தின் மகத்தான வாழ்வின் வெற்றியென்பது புதிய உலகு நோக்கி நிமிர்ந்தெழும் காலத்தைப் படைப்பதேயாகும்.
‘நாமார்க்கும் அடிமை அல்லோம், யமனை அஞ்சோம்’ என்று எமது மக்களின் நம்பிக்கையை வெல்லவும் முயல்வோம். வெல்வோம்…நிமிர்வோம்.. உளம் சோரோம் என்ற எமது இலட்சியப்பயணம் எண்ணிய இலக்கை எட்டவும் நாம் இடையறாது உழைப்போம்!
எம் தமிழ்த் தேசம் தலை நிமிரவும் அரசியல் பொருளாதார சமூக சமத்துவ நீதி ஓங்கவும் பாமர மக்களின் வாழ்வு உயரவும் உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்லவும் அழிவு ஆயுதங்களின்றி அறிவு ஆயுதம் ஒன்றே மாற்று வழியென நாம் பாதையை மாற்றினோம். பயணத்தை நிறுத்தவில்லை.
தீபாவளித் திருநாளானது வெறுமனே புத்தாடை அணியவும் பொது விழாக்களை பட்டாசு கொளுத்தி கொண்டாடி மகிழவும் உண்டாக்கிய நாள் மட்டுமல்லாது மாறாக, மாற்றமொன்று எமது மண்ணில் மலர்ந்ததை கொண்டாடும் பெருநாளாக அது மலர வேண்டும்.
அழிவு யுத்தத்தின் அநீதியைக் கடந்து வந்த எமது மக்கள், நிம்மதிப் பெருமூச்சை இன்று விடுகின்றனர். அந்த நிம்மதிப் பெருமூச்சு சுதந்திரக் காற்றாக எமது மண்ணில் நீடித்து வீச வேண்டும்.
மாற்றமொன்றே எமக்கு தேவை. மாற்றங்களை எமது மண்ணில் உருவாக்கி காட்டுவதற்கு மாறாக நாளாந்தம், வாராந்தம், மாதாந்தமென புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். அவற்றை ஊதிப் பெருப்பித்து, மக்களை உசுப்பேற்றி கூச்சலிட்டும் வருகின்றனர். அதன் மூலம் அடுத்த தேர்தல் போட்டிக்கான அத்திவாரங்களே இங்கு நடந்தேறி வருகின்றன.
தேர்தலுக்காக அன்றி எம் தமிழ்த் தேசத்துக்காக தியாகத்தை ஏற்று நடக்கும் எமது யதார்த்த வழிமுறை மீது யாரும் சேற்றை வாரித் தூற்றுவோர் முடிந்தளவு தூற்றட்டும். நாம் நேசிக்கும் மக்களுக்கான நிரந்தர விடியலை எட்டும் எமது இலட்சியப் பயணத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவதூறு பொழிவோரை எதிர்கொண்டு நாம் பயணிப்பதே இன்று நாம் ஆற்றும் தியாகம்.
கூச்சலாலும் கொக்கரிப்பாலும் எந்தக் கோட்டையின் கதவும் திறக்காது, அழகார்ந்த உரிமை வாழ்வை சகல மக்களும் அனுபவித்து நிமிர வேண்டும். இல்லங்கள் தோறும் துயரமற்ற மகிழ் வாழ்வு மலர வேண்டும். தீபாவளித் திருநாளின் அர்த்தம் தேசமெங்கும் தீப ஒளியாக துலங்க வேண்டும். அநீதி தோற்கும்…, அறம் வெல்லும்…!” இவ்வாறு தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.