Home » கனவான் கிரிக்கெட்டில் இனியும் பயனில்லை

கனவான் கிரிக்கெட்டில் இனியும் பயனில்லை

by Damith Pushpika
November 12, 2023 6:00 am 0 comment

துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வந்து ஒரு பந்துக்குக் கூட முகம்கொடுக்காதபோது நடுவர் அட்டமிழப்புச் சொன்னது அஞ்சலோ மத்தியூஸுக்கு நகைச்சுவையாக இருந்தது. அவர் சிரித்துவிட்டார். நடுவர் மீண்டும் உறுதியாகச் சொன்னபோது அவர் தீவிரம் அடைந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் நிகழாத ஒன்று. ஏன், முதல்தர, கிராமப்புற கிரிக்கெட்டில் கூட இப்படி ஒன்று பெரும்பாலும் நடக்காது. 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் ஆடும் 36 வயதான பழுத்த அனுபவம் பெற்ற அஞ்சலோவுக்கே அது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் நான்காவது விக்கெட்டாக சதீர சமரவிக்ரம 24.2 ஆவது ஓவரில் ஆட்டமிழந்த பின் 6ஆவது வீரராக மத்தியூஸ் துடுப்பெடுத்தாட ஆடுகளம் வந்தது, தொடர்ந்து பந்துவீச்சாளருக்கு முகம்கொடுக்க விக்கெட்டுக்கு முன்னால் நின்றவரைக்கும் வழக்கமானது.

ஆனால் தனது தலைக்கவசத்தின் பட்டியை தாடையில் இழுத்துக் கட்டும்போது அறுந்துவிட்டது. வேறு தலைக்கவசம் எடுத்துவரும்படி உடைமாற்றும் அறைக்கு கூறிவிட்டு காத்திருந்போது சம்பவம் நடந்தது.

அதாவது சதீர ஆட்டமிழப்பதற்கும் மத்தியூஸ் பந்துக்கு முகம்கெடுக்க வேண்டிய காலத்திற்கும் இடையிலான இடைவெளி 2 நிமிடத்தை கடந்து விட்டது. அது ஐ.சி.சி போட்டி விதியின்படி, ஆட்டமிழப்புக்குரிய விதி மீறலாகும்.

அப்போது பார்த்து பந்துவீசிக்கொண்டிருந்தவர் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன். கடந்த காலத்தில் பல சர்ச்சைகளுக்கு காரணமானவர் வேறு. காலம் தாமதித்ததால் நடுவரிடம் ஆட்டமிழப்பு கேட்டுவிட்டார். அது நடுவர் மரைஸ் எரஸ்முஸ்ஸிற்குக் கூட அதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும். இரண்டாவது முறையாக அந்த முறையீட்டை வாபஸ் பெறுகிறீரா? என்று கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.

அதன் பின் ஷகீபிடம் பேசிப்பார்த்த மத்தியூஸ், சரிப்பட்டுவராது என்று உணர்ந்தபோது மைதானத்தை விட்டு வெளியேறி தனது தலைக்கவசம், கையுறையை ஓரமாக வீசிவிட்டுச் சென்றார்.

அதற்குப் பின்னர் துடுப்பெடுத்தாட வந்த பங்களாதேஷ் வீரர்களை இலங்கை வீரர்கள் சில சந்தர்ப்பங்களில் சீண்டியதும், ஆட்டம் முடிந்த பின் பங்களாதேஷ் வீரர்களுக்கு கைகொடுக்காமல் இலங்கை வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியதும் எதிர்பார்த்ததே.

எப்படியோ பங்களாதேஷ் போட்டியில் வெற்றியீட்டியது. ஏற்கனவே, உலகக் கிண்ணத்தில் தகுதி இழந்திருந்த அந்த அணிக்கு 2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கு தகுதி பெற இந்த வெற்றி முக்கியமாக இருந்தது.

மறுபக்கம் இலங்கை அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு நுழைவதற்கு இருந்த குறுகிய வாய்ப்பு இந்தத் தோல்வியோடு முடிந்துவிட்டது.

பங்களாதேஷின் செயல் வெட்கரமானது என்று அஞ்சலோ மத்தியூஸ் திட்டித் தீர்த்தார். நான் சட்டப்படியே நடந்தேன் என்று ஷகீப் பதில் கூறினார்.

கிரிக்கெட் உலகில் இது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “தலைக்கவச விவகாரத்திற்கு டைம் அவுட்டா. புதிதாக இருக்கிறதே..” என்று இங்கிலாந்து முன்னாள் அணித் தலைவர் மைக்கல் வோகன் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். “இது நல்லதல்ல” என்றார் தென்னாபிரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின்.

இந்திய முன்னாள் வீரர் சஞ்சே மஞ்ரேகரோ, “எப்படி இருந்தபோதும் ஷகீப் அல் ஹசனின் இந்த முடிவு தைரியமானது” என்கிறார்.

அடிப்படையில் கிரிக்கெட் விதிகளின்படி துடுப்பாட்ட வீரர் ஒருவரை 10 முறைகளில் ஆட்டமிழக்கச் செய்ய முடியும். இதில் விக்கெட்டை சாய்த்து போல்ட் செய்வது, விக்கெட்டை மறைப்பதால் எல்.பி.டபிள்யு செய்வது, ஸ்டம்ப், ரன் அவுட், ஹிட் விக்கெட், பந்தை கையால் பிடிப்பது, பந்துக்கு இரு முறை அடிப்பது, களத்தடுப்பாளருக்கு இடையூறு செய்வது, காயத்தால் வெளியேறுவது ஆகிய அட்டமிழப்புகள் தவிர்த்து இந்த டைம் அவுட் விவகாரம் பற்றி யாரும் பெரிதாக அக்கறை கொள்ளவதில்லை.

146 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மத்தியூஸுக்கு முன்னர் யாரும் இப்படி ஒன்றை சந்தித்ததில்லை. எதிரணி இப்படி செய்யும் என்று எந்த வீரரும் எதிர்பார்ப்பதும் இல்லை. அதிலும் மத்தியூஸ் விவகாரத்தில் வேண்டுமென்று நடந்ததல்ல!

2007 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சவ்ரவ் கங்குலிக்கும் இப்படித் தான் நடந்தது. மத்தியூஸை போன்று அவருக்கும் கால நேரம் சரியாக அமையவில்லை. துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல் இரு விக்கெட்டுகளும் மூன்று பந்து இடைவெளியில் ஆட்டமிழந்ததால், 4ஆவதாக துடுப்பெடுத்தாட வேண்டிய சச்சின் டெண்டுல்கர் களமிறங்க முடியவில்லை. ஏனென்றால் களத் தடுப்பு நேரத்தில் போதுமான காலம் அவர் மைதானத்தில் இருக்கவில்லை.

வி.வி.எஸ். லக்ஷ்மன் துடுப்பெடுத்தாட வரவேண்டும். அப்போது அவர் குளித்துக் கொண்டிருந்தார். எனவே கங்குலி அவசர அவசரமான துடுப்பெடுத்தாட தயாராக வேண்டி ஏற்பட்டது.

அதற்குள் டை அவுட் நேரமும் வந்துவிட்டது. நல்லவேளை எதிரணி தலைவர் கிராம் ஸ்மித்துக்கு கிரிக்கெட் மரபு, நாகரீகம் தெரியும். நடுவர் கூறியபோதும் அவர் அப்படி ஒரு ஆட்டமிழப்பை எடுக்கவில்லை. இதனால் ஆறு நிமிடங்கள் கழித்து துடுப்பெடுத்தாட வந்த கங்குலிக்கு பிரச்சினை ஏற்படவில்லை.

ஆனால் மத்தியூஸின் நிலை அப்படியல்ல. “வேறு எந்த அணியும் இப்படி செய்யும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் இது கறுப்பு, வெள்ளை போன்று தெளிவாக இருந்தது. உபகரண பிரச்சினை இருந்தது, தலைக்கவசம் கழன்று வந்தது. அது பாதுகாப்பு பிரச்சினையும் கூட” என்கிறார்.

போட்டியில் தேவையற்ற தாமத்தை தடுக்கும் வகையிலேயே இந்த டைம் அவுட் அல்லது கால தாமத விதி 1980இல் கிரிக்கெட் சட்டப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் அது தொடக்கம் ஆறு முறை மாத்திரம் முதல்தர கிரிக்கெட்டில் இப்படி ஆறு வீரர்கள் ஆட்டமிழந்திருக்கிறார்கள்.

கடைசியாக 2017 இல் புலவாயோவில் நடந்த மெளண்டனியர்ஸ் அணிக்கு எதிராக மெடபலனன்ட் டாஸ்கஸ் வீரர் சார்ல்ஸ் குஞ்சே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

டைம் அவுட் விவகாரத்தில் காலம் பற்றிய குழப்பமும் இருக்கத் தான் செய்கிறது. கிரிக்கெட் விதிகளின் காவலர் என்று அழைக்கப்படும் லோட்ஸை மையமாகக் கொண்ட மெரில்போன் கிரிக்கெட் கழக விதியின்படி அது மூன்று நிமிடங்களாக இருக்கிறது.

அதாவது எம்.சி.சி. விதி 40.1.1 இல் கூறப்பட்டிருப்பதாவது: “விக்கெட் வீழ்த்தப்பட்டது அல்லது துடுப்பாட்ட வீரர் காயத்தால் வெளியேறிய பின் அடுத்து வரும் துடுப்பாட்ட வீரர் டைம் அவுட் என அழைக்கப்படாவிட்டால் பந்துக்கு முகம்கொடுக்க தயாராக இருத்தல் வேண்டும் அல்லது ஆட்டமிழப்பு அல்லது காயத்தால் வெளியேறி 3 நிமிடங்களுக்குள் மற்ற துடுப்பாட்ட வீரர் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராக இருத்தல் வேண்டும்.”

ஆனால் உலகக் கிண்ணத்திற்கான சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் போட்டி விதிகளின்படி அடுத்து வரும் துடுப்பாட்ட வீரர் இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த பந்துக்கு முகம்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று காலம் குறைக்கப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட்டுக்கான மரபு பழையது அதன் விதிகளை பொதுவாக விதிகள் என்பதற்கு பதில் சட்டங்கள் என்றே அழைப்பார்கள். எழுதப்பட்ட விதிகளுக்கு அப்பால் விளையாட்டின் பண்பு அல்லது ஆன்மாவை பின்பற்ற வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றி ஆடும் இரு அணிகளுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு அப்பால் கிரிக்கெட் “கனவான்களின் விளையாட்டு” என்ற சொல்லடல் மூலம் வேறு விளையாட்டில் இருந்து அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அது விதிகளுக்கு அப்பால் தொன்று தொட்டு வரும் சம்பிரதாயங்களை மதிப்பதாக இருக்கும்.

கிரிக்கெட்டின் தோற்றம் 13 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்றபோதும் 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் பிரபுக்கள் அந்த விளையாட்டை ஆட ஆரம்பித்தபோதே அது பிரபலம் பெற்றது. அதாவது அப்படி கிரிக்கெட் ஆடிய பிரபுக்கள் கிரிக்கெட்டை கனவான்கள் முறையில் ஆட வேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தை வகுத்தார்கள்.

அதாவது எதிரணியை திட்டுவது, ஏமாற்றுவது, உடலை தாக்கும் வகையில் பந்து வீசுவது, அதிக கோபம் மற்றும் அளவுக்கு அதிகமான முறையிடுவது போன்றவை கூடாது. ஏன் ஆரம்ப கால கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வி கூட பெரிதாக கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கவில்லை.

ஆனால் கிரிக்கெட் உலகெங்கும் பரவி, தொழில் முறை விளையாட்டாக மாற மாற ‘கனவான்களின் கிரிக்கெட்’ என்ற சொல்லாடல் பேச்சளவுக்கு மாற ஆரம்பித்துவிட்டது.

1932, 33 இல் ஆஷஸ் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா சென்றபோது எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திட்டம் தீட்டிய இங்கிலாந்து எதிரணி துடுப்பாட்ட வீரர்களின் உடலை இலக்கு வைத்து பந்தை வேகமாக வீசியபோது ‘கனவான்கள் கிரிக்கெட்’ என்ற பேச்சு பெரிதாக கேள்விக்குள்ளானது.

தொடர்ந்து வேனு மான்கட் எதிர் பக்கத்தில் இருக்கும் துடுப்பாட்ட வீரரை கோட்டை விட்டு வெளியேறியதற்காக ஆட்டமிழக்கச் செய்தபோதும், ட்ரவர் செப்பல் கைக்குக் கீழால் (அன்டர் ஆம்) பந்தை வீசியபோதும் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பண்டைய எழுதப்படாத சட்டங்களை நம்பி தொடர்ந்து கிரிக்கெட் ஆட முடியாது. மரபு ரீதியாக கிரிக்கெட் ஆடும் நாடுகளை தாண்டி கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது. அங்கெல்லாம், கிரிக்கெட் ஒரு கனவான் விளையாட்டாக அறிமுகமாகவில்லை. வெற்றி, தோல்வி என்ற இரண்டுக்கும் இடையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கும் அணிகளும், வீரர்களும் அதிகரிக்கும்போது அதற்கு ஏற்ப கிரிக்கெட்டை மாற்றிக் கொண்டால் தான் முன்னேற முடியும்.

இந்த டைம் அவுட் விவகாரத்தை எடுத்துக் கொண்டாலும், அவுஸ்திரேலியாவின் போக்கை அவதானித்தால் அந்த அணி நல்ல புரிதலுடன் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸி. வீரர் நெதன் லியோனுக்கு களத்தடுப்பின்போது காலில் காயம் ஏற்பட்டு நடக்கவே சிரமப்பட்டார். அவர் கடைசியாக துடுப்பெடுத்தாட வேண்டி இருந்தது. நடக்கச் சிரமப்படுவதால் டைம் அவுட் ஆகக் கூடும் என்ற பயத்தில் அவர் துடுப்பாடுவதற்கு தயாராக பெளண்டரி அருகிலேயே காத்துக் கிடந்தார்.

அஞ்சலோ மத்தியூஸின் ஆட்டமிழப்புக்குப் பின்னரும் டைம் அவுட் என்பது எதிர்காலத்தில் வழக்கமாக மாறக் கூடும். அது பற்றி வீரர்கள் இனி அவதானத்துடன் இருப்பது அவசியம்.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division