‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ரவிக்குமார். அதன்பின்னர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை ஆரம்பித்தார். ஆனால், இப்போது வரை அந்த படம் வெளியாகவில்லை. ‘இன்று நேற்று நாளை’ படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை ரவிக்குமாரின் அடுத்த படம் வெளியாகவில்லை. அயலான் சிவகார்த்திகேயனின் சொந்த படம் என்பதால் நேரம் கிடைக்கும்போது மட்டுமே நடித்து வந்ததால் பல வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வேறுகிரகத்திலிருந்து வரும் ஏலியனை எப்படி சிவகார்த்திகேயன் சமாளிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.பொதுவாக இதுபோன்ற ஏலியன் கதையெல்லாம் ஹாலிவுட்டில் மட்டுமே எடுப்பார்கள். முதன்முறையாக தமிழில் ஒரு கமர்ஷியல் கதையில் ஏலியனை டீல் செய்துள்ளனர். எனவே, இந்த புதிய முயற்சி ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக படப்பிடிப்பு நடந்து இப்போதுதான் படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவருகின்றது. இந்நிலையில், இப்படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு யாரை டப்பிங் பேச வைக்கலாம் என ஆலோசித்த போது சந்தானத்தை பேச வைக்கலாம் என யோசித்துள்ளனர். ஆனால், அவரோ சிவகார்த்திகேயனை எதிரி போல பார்ப்பவர். சிவகார்த்திகேயன் ஹீரோ ஆனதை பார்த்து நாம் ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது என்று களம் இறங்கியவர் அவர். எனவே, அவர் இதற்கு கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார்.அடுத்து படக்குழுவின் தெரிவு நடிகர் வடிவேலு. அவர் பேசினால் நன்றாகவிருக்கும் என அவரை அணுகவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஆனால், அவர் ஒத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பாரக்க வேண்டும். அயலான் படத்தில் கருணாநகரன், யோகிபாபு, இஷா கோபிகர், பானுப்பிரியா என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். எல்லாம் சரியாக அமைந்தால் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கணிக்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் படத்தில் வடிவேலு – சந்தானம்!
244