தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பங்காளர் எனும் வகையில் SLT-MOBITEL, சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) செயற்பாடுகளில் நேர்த்தியான மாற்றம் மற்றும் விரிவாக்கங்களை மேற்கொள்ளும் வகையில், மாத்தளையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.
மாத்தளை கைக்காவல மத்திய கல்லூரியில் ESG நிகழ்ச்சித் திட்டத்தை SLT-MOBITEL முன்னெடுத்திருந்ததுடன், நான்கு தாக்கங்கள் நிறைந்த ESG செயற்திட்டங்களை உள்வாங்கி அர்த்தமுள்ள செயற்பாட்டில் ஈடுபட்டது. STEMUP மையத்துடன் கைகோர்த்து, STEM கல்வியினூடாக மாணவர் தொழில்முயற்சியாண்மைக்கு வலுவூட்டுவது, ‘Hour of Code’பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுப்பது, ‘Sithak Athnam Pothak Denna’ (மனமிருந்தால் புத்தகமொன்றை வழங்குங்கள்) புத்தக நன்கொடை நிகழ்ச்சித் திட்டம் மற்றும் மர நடுகை திட்டத்தினூடாக சூழல் நிலைபேறாண்மையை ஊக்குவித்தல் ஆகியன இந்த செயற்பாடுகளில் அடங்கியிருந்தன.
இந்தப் பிரதேசத்திலுள்ள மற்றுமொரு பாடசாலைக்கு உதவும் வகையில், SLT-MOBITEL அணியினர், மாத்தளை, இரத்தோட்டையின் அலகோலமட கனிஷ்ட பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தனர். அதிகளவு தேவைகளைக் கொண்ட பின்தங்கிய பிரதேசமாக அமைந்திருப்பதுடன், சந்தைப்படுத்தல் சேவைகள் பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களால், பாடசாலையில் செயலிழந்திருந்த மூன்று கணினிகள் திருத்தி வழங்கப்பட்டது. மேலும், பாடசாலை பைகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் போன்றன மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், பாடசாலை நூலகத்துக்கு பெறுமதி வாய்ந்த புத்தகத் தொகுதியும் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. பாடசாலை வளாகத்தில் மரநடுகைத் திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.