Home » தடுமாற்றம்

தடுமாற்றம்

by Damith Pushpika
November 5, 2023 6:10 am 0 comment

சின்னஞ்சிறு வயதிலே இர்பாத் அனைத்து சுகங்களையும் அனுபவித்தான். அவனது தந்தை ஒரு வியாபாரி. நடுத்தர குடும்பமாக இருந்தாலும் வசதியில் குறைவிருக்கவில்லை. மூன்று பிள்ளைகளில் மூத்தவனான அவன் மானிறமானவன். வட்டவடிவமான களையான முகம் அவனுக்கு.

காலம் கடந்தது… இர்பாத் ஐந்தாம் வகுப்புக்குள் நுழைந்தான். பாடசாலைக் கல்வியோடு, பிரத்தியேக வகுப்புக்களுக்கும் சென்று வந்தான். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்த வேண்டும் என்பது அவனது சின்ன வயதுக் கனவாகியது. நினைத்தது போலவே அவன் பரீட்சையில் சித்தி பெற்றான்.

அவனது சந்தோசத்துக்கு அளவேயில்லை. பெற்றோரும் பேரானந்தம் அடைந்தனர். இர்பாதுக்கு ஒரு சைக்கிளை வாங்கிப் பரிசளித்தார் அவரது தந்தை. இர்பாதின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. தனது சின்னச் சின்ன பயணங்களையெல்லாம் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தான். நீல நிற சொப்பர் சைக்கிளை கண்ணும் கருத்துமாக பாவித்தான். அடிக்கடி துடைத்து சுத்தம் செய்து, மழையில் நனையாமல் வீட்டின் உள்ளே வைத்துப் பாதுகாத்தான். அவனது வீடு ஓரளவு சிறியதாக இருந்தாலும் கூட, அவனது சைக்கிளை நிறுத்தி வைக்க அங்கே ஒரு தனியிடம் தேவைப்பட்டது.

கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருமாறு தாய் சொன்னதும், தாய் சொல்லைத் தட்டாது பாய்ந்து செல்வதும், குடும்ப உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவதும் அவனுக்கு அலாதி பிரியத்தைக் கொடுத்தது. இவ்வாறே நாட்கள் நகர்ந்தன. ஆறாம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்தான் இர்பாத். “உம்மா நான் ஸ்கூலுக்கு பைக்ல போகவா” தாயிடம் அன்பாக தனது கோரிக்கையை முன்வைத்தான். அதுவரை நாளும் முச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்று வருவதை வழமையாகக் கொண்டிருந்தான். முச்சக்கர வண்டிக்கான மாதாந்த கொடுப்பனவை அவனது தந்தை தவறாது செலுத்தி வந்தார்.

இளம் கன்று பயமறியாது என்பது அந்தத் தாய்க்கு தெரியாமல் இல்லை. மகனை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும் அத்தாய் நன்கு அறிந்து வைத்திருந்தாள். அந்தத் தாயும் உயர்தரம் வரை படித்தவள். அமைதியான சுபாவமும், பக்குவமும் அவளிடம் காணப்பட்டது. “வேணாம் மகன். ரோட்ல வாகனம் போற. கவனமாக போக வேணும். அடுத்து நீங்க இன்னும் சின்ன புள்ள. பொறகு பாக்கலாம்.” என அன்பாகக் கூறி மறுத்தாள் தாய். என்றாலும் இர்பாதின் மனம் அதற்கு இணங்கவில்லை. தந்தை வீட்டிற்கு வந்ததும் அவரிடம் அனுமதியைக் கேட்டு, சைக்கிளில் பாடசாலை செல்ல வேண்டும் என அவனது உள்மனம் சொல்லியது.

அன்றிரவு தந்தை வீட்டுக்கு வர சற்று தாமதமாகியது. தந்தை வரும்வரை தூங்காமல் காத்து நின்றான் இர்பாத். “வாப்பா நான் ஸ்கூலுக்கு பைக்ல போகவா?” தந்தை வந்த உடனே கோரிக்கையை முன்வைத்தான். “ஏன் நீங்க பைக்ல போகோனும். த்ரீவீல்ல போகேலும் தானே” என தந்தை அவரது பக்க கேள்வியைக் கேட்டுக்கொண்டே மகனின் பதிலை எதிர்ப்பார்க்காமல் குளியலறைக்குச் சென்றார். இர்பாத் விடுவதாக இல்லை. தந்தை குளியலறையில் இருந்து வரும் வரை காத்திருந்து “வாப்பா மிச்சம் பேரு பைக்ல வார. நானும் போகவா?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான். “மகன் நீங்க இப்ப ஆட்டோல போங்க. பொறகு நான் செல்றன். அதுக்குப் பொறகு போக ஏலும். இப்ப பெய்த்துப் படுங்கோ” எனச் சொல்லி தனது மகனை தூங்க வைத்தார்.

அவனோடு அவனது தம்பியும், தங்கையும் அதே முச்சக்கர வண்டியில் தான் பாடசாலைக்குச் சென்று வந்தனர். காலச் சக்கரம் மெல்ல மெல்ல சுழன்றது. எட்டு மாதங்கள் சென்றிருக்கும். இர்பாதின் தந்தைக்கு வியாபாரத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. மனம் தளர்ந்தார். மூன்று பிள்ளைகளுக்கு முச்சக்கர வண்டிக்கான பணத்தைக் கொடுக்க முடியாது சஞ்சலப்பட்டார்.

ஒரு நாள் இரவு, பிள்ளைகள் தூங்கச் சென்றதன் பின் தனது மனைவியை அழைத்து “இர்பாத பைக்ல ஸ்கூலுக்கு அனுப்புவோமா?” என்று வேதனை கலந்த குரலில் கேட்டார். ஒரு நாளும் இல்லாத வகையில் தன் கணவர் ஏன் இவ்வாறு கேட்கிறார். ஏதாவது பொருளாதாரப் பிரச்சினையாக இருக்குமோ? என நினைத்துக் கொண்டே “ஏன்..என்ன பிரச்சின. யாவாரத்துல ஏதாவது….?” என இழுத்தாள். “ஓ… கொஞ்ச நாளா யாவாரத்துல வாசி (இலாபம்) இல்ல. என்ன செய்வதெண்டு வெளங்கேல்ல” கணவன் மனைவியிடம் தனது மனக்கவலையை வெளிப்படுத்தினான். மனைவிக்கோ உலகம் சுக்கு நூறாக வெடித்து சிதறியது போலிருந்தது.

அவள் மனக்கண் பல விடயங்கள் வந்து போயின. பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு, மின்சாரக் கட்டணம், அன்றாட வாழ்க்கைச் செலவுக்கான பணம் இன்னும் எத்தனையோ விடயங்கள் அவள் கண்முன்னே. கணவனின் வியாபாரத்துக்கு துணை போக முடியாது என்பது அவளுக்குத் தெரியாமலில்லை. ஆனால்……கணவனின் பொருளாதார நெருக்கடிக்கு துணை நிற்க வேண்டும் என அவள் தீர்மானித்தாள். என்ன செய்வது என மனதிற்குள் போராடினாள்.

அதிகாலையில் எழுந்து, தஹஜத்து தொழுது, இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்தாள். “யா அல்லாஹ். எனது கணவருக்கு வியாபாரத்தில் முன்னேற்றத்தை வழங்குவாயாக. எனது குடும்பத்தை பட்டினியில் வாட வைக்காதே. எமக்கு கஷ்டத்தை தந்து சோதனை செய்யாதே. கஷ்டமும், நஷ்டமும், சோதனையும் மனிதனுக்குத்தான். என்றாலும் உனது கருணையை அகற்றி விடாதே.” உருக்கமாக துஆ கேட்ட அவள் எழுந்து, குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும்போது தொழுகைக்கான அதான் ஒலிக்கிறது. அதே இடத்தில் சுபஹ் தொழுகையையும் நிறைவேற்றிவிட்டு, எழுந்து சென்று கதிரையில் அமர்ந்து சற்று யோசிக்கலானாள்.

பள்ளி சென்று வந்த கணவனை அணுகி “இர்பாத பைக்குல ஸ்கூலுக்கு போகச் செல்லோம். மத்த ரெண்டு பேரையும் நீங்க மோட்ட பைக்ல கூட்டிக் கொண்டு போங்கோ. ஆட்டோவ நிப்பாட்டுவோம். எங்களுக்கு ஒரு கணக்கு சல்லி மீயும். இன்னமொரு யோசனையும் இருக்கு. அத நான் பொறகு செல்றன்” என்று பேசி முடித்தாள். அத்தோடு அவள் ஒரு பெருமூச்சும் விட்டாள். “பார்க்கலாம்” என ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு நேராக இர்பாத் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று அவனை எழுப்பிவிட்டு சுபஹ் தொழுமாறு அன்புக் கட்டளையிட்டார்.

இர்பாத் தொழுது விட்டு, அல்குர்ஆனையும் சற்று ஓதினான். இது வழமையாக நடைபெறும் நிகழ்வுதான். தந்தையின் பொருளாதார சிக்கல் என்ன என்பது இர்பாதுக்குத் தெரியாது. அவனை அவளது தாய் நெருங்கி, “இன்டேலீந்து நீங்க ஸ்கூலுக்கு பைக்ல போங்கோ. நான் வாப்பாவோட பேசிக் கொள்றன்” என நிதானமாகச் சொன்னாள். இர்பாதுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. அதிகாலையிலேயே இரை தேடிச் செல்லும் பறவை போல் உற்சாகமாக பாடசாலை செல்ல ஆயத்தமானான். தம்பியிடமும், தங்கையிடமும் தான் சைக்கிள் செல்ல போகும் செய்தியை சந்தோசத்தோடு சொல்லி முடித்தான்.

குறிப்பிட்ட நேரத்துக்கு ஆட்டோவும் வந்தது. இர்பாதின் தம்பியும், தங்கையும் ஆட்டோவில் ஏறிக் கொண்டானர். அவனது தாய் ஆட்டோ சாரதியை நெருங்கி “எங்கட மூத்தவரு பைக்ல போரார். நீங்க இவங்க ரெண்டு பேரையும் கூட்டிக் கொண்டு போங்கோ.” என லாவகமாகச் சொன்னாள். மூவரையும் ஒரேயடியாக நிறுத்தி விட முடியாது. அவ்வாறு நிறுத்திவிட்டால் தன் குடும்பத்தின் கஷ்டம் வெளியில் தெரிந்துவிடும் என உள்ளுக்குள் அஞ்சினாள். அடுத்த மாதத்தில் இருந்து அவர்களையும் நிறுத்தி விட வேண்டும் என்பது அவளது திட்டம்.

பிள்ளைகள் பாடசாலை சென்றதன் பின்னர் இர்பாதின் தந்தை அவரது மனைவியை நோக்கி “நீங்க இன்னமொரு விசயம் இருக்ெகண்டு சொன்னீங்க. அது என்ன?” என்று கேட்டார். தன் கணவனின் கேள்வி அவளை சற்று அமைதியாக்கியது. அந்த அமைதிக்கு நடுவே மெல்லிய குரலில் அவள் பேசத் தொடங்கினாள். “நான்… நான்..” என்று சற்று இழுத்துவிட்டு, நான் இடியாப்பம் சுட்டு கடைக்கு போடப் போறன்” ஒரேயடியாக சொல்லி முடித்தாள். அங்கே அமைதி நிலவியது.

அவளது கணவன் தன் மனைவியை நினைத்து பெருமிதம் கொண்டான். நான் அவளிடம் எதுவுமே சொல்லாமல் எனது கஷ்டத்தில் பங்கெடுக்கிறாளே. அல்லாஹ் எனக்குக் கொடுத்த வரம் இது. என மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, அவளுக்காக பிரார்த்தனை செய்தான்.

“இடியாப்பத்த சுட்டு. என்ன செய்யப்போற” மனைவியின் பதிலை எதிர்பார்த்தவனாக அங்கே நிலவிய அமைதியை கலைத்து கணவன் பேசத் தொடங்கினான். “இடியாப்பத்த சுட்டு, சந்தீல இருக்கிற கடைக்கு போட ஏலும். இர்பாதுட்ட குடுத்தனுப்ப ஏலும். ஊட்டு காணீல தேங்கா இருக்குத்தானே. அதால தேங்கா சுண்டல் ஒண்டும் வெக்க ஏலும். நீங்க ஒண்டும் யோசிக்க வேணாம்” என மனைவி தான் ஏற்கனவே நினைத்த வைத்த விடயங்களை வெளிப்படையாகத் தெரிவித்தாள்.

பாடசாலை முடித்து இர்பாத் தனது சைக்கிளில் வீடு வந்து சேர்ந்தான். வெள்ளை ஆடைகளைக் களைந்து வேறு ஆடைகளுக்கு மாறிய அவன், பெற்றோரின் வழிகாட்டலின் பிரகாரம் ளுஹர் தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றினான். தாய் பகிர்ந்து வைத்திருந்த உணவை உண்டுகொண்டிருக்கும் போதே, அவனை நெருங்கினாள் அவனது தாய். தம்பியும் தங்கையும் ஏற்கனவே வந்து விட்டார்கள். அவர்கள் பள்ளிக்கூடம் (மத்ரஸா) செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

“மகன், சந்தீல இருக்கிற கடைல காலையில் இடியாப்பம் சுட்டு பார்ஸல் செஞ்சி தர ஏலுமாண்டு கேளுங்க. ஒங்களுக்கு வெளனேக்கி பைக்ல போய்க் குடுக்கேலுமா” என்று கேட்டாள். அவளது குரல் தழும்பியிருந்தது. கஷ்டம் என்பதை மகன் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பொய் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோமே என அவளது உள்மனம் அழுதது. தாயின் அன்பான கட்டளையை இர்பாத் மறுக்கவில்லை. தினந்தோறும் சுபஹ் தொழுகைக்காக எழும் அவனுக்கு அது ஒரு பெரிய விடயமாகத் தெரியவில்லை. அது மட்டுமல்லாது சைக்கிளில் சென்று வருவது அவனுக்கு விருப்பமாகவும் இருந்தது.

அன்று மாலை இர்பாதின் தாய், அடுத்த நாள் காலைக்கு தேவையான இடியப்பத்தை தயார் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டாள். தேங்காய் சம்பலுக்குத் தேவையான தேங்காய்களை துருவி, குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து வைத்தாள்.

அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து தஹஜ்ஜத் தொழுகையை தொழுதுவிட்டு, இறைவனைப் பிரார்த்தித்து தனது அலுவல்களை ஆரம்பித்தாள். இடையில் சுபஹ் தொழுகைக்கான அதான் ஒலித்ததும், தனது வேலைகளை சற்று நிறுத்தியவள் மீண்டும் வுழூச் செய்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினாள். அதன்பின் தன் கணவனையும், மகனையும் எழுப்பிவிட்டு மீண்டும் இடியப்பம் சுடும் வேலையை தொடர்ந்தாள். இர்பாதும் அவனது தந்தையும் பள்ளிவாசலுக்கு சென்று தொழுது விட்டு வரும்போது தேவையான அளவு இடியப்பங்களைச் சுட்டு முடித்திருந்தாள். ஒரு பார்சலுக்கு பன்னிரண்டு இடியப்பங்களும், ஒரளவு தேங்காய் சம்பலும் என 25 பார்ஸல்களை தயார் செய்து தனது மகனிடம் கொடுத்தனுப்பினாள்.

சந்தியில் உள்ள கடைக்குச் சென்ற இர்பாத், தாய் கொடுத்தனுப்பிய பார்சல்களை கடை உரிமையாளரிடம் கொடுத்ததும் “அந்திக்கு வாங்கோ மகன், அந்த டய்முக்கு சல்லி தாரண்டு செல்லி உம்மாட்ட செல்லுங்கோ” என அவர் சொல்லியனுப்பினார். அன்று மாலை இர்பாத் கடைக்குச் சென்றதும் கடையுரிமையாளர் இடியப்பத்துக்கான பணத்தை கொடுத்துவிட்டு “நாளைக்கு முப்பது பார்ஸல் தரச் செல்லுங்கோ” எனச் சொல்லியனுப்பினார். படிப்படியாக இடியப்ப வியாபாரத்தின் அளவு அதிகரித்தது. குறிப்பிட்ட ஒரு கடைக்கு மாத்திரம் என்றிருந்த வியாபாரம் இன்னும் சில கடைகளுக்கு வியாபித்தது.

மறுபுறத்தில் இர்பாதின் தந்தை அடுத்த ஊரிலிருந்த ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அவருடைய வீட்டுக்கும் அந்தக் கடைக்கும் இடையில் மூன்று கிலோமீட்டர் தூரமே இருந்தது. இர்பாதின் தம்பியையும், தங்கையையும் மோட்டார் சைக்கிளில் சென்று பாடசாலையில் விட்டபின் கடைக்குச் செல்வதையும் பகல் சாப்பாட்டிற்காக வீட்டிற்கு வரும்போது திரும்ப கூட்டி வருவதையும் வழக்கமாக்கிக் கொண்டார்.

வாழ்க்கைச் செலவில் தடுமாறிய அக்குடும்பதில் மாற்றம் நிகழத் தொடங்கியது. பல புதிய கடைகளிலும் இடியப்பத்தின் கேள்வி அதிகரித்துக் கொண்டே சென்றது. இர்பாதின் தாய் இயந்திரமாகினாள். பல புதிய கடைகளுக்கு இடியப்பத்தை அவரது கணவரே எடுத்துச் சென்றார். இப்போது பொருளாதாரத்தில் ஓரளவு மாற்றம் நிகழத் தொடங்கியது. இர்பாதின் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி. அவரது மனைவின் முகத்திலும் சந்தோசம்.

என்றாலும் தினந்தோறும் இயந்திரமாக உழைத்த இர்பாதின் தாயின் கைகள் மரத்துப்போயிருந்தன. இதனால் அவரது கணவன் கவலையற்ற நிலையில் யோசிக்கத் தொடங்கினார். உண்மையில் இர்பாதின் தாய் உடல் சோர்வாலும், உளச் சோர்வாலும் பாதிக்கப்பட்டாள். முன்புபோல் நிறைய குர்ஆன் ஓத முடியவில்லையே என்ற மனக்குறை அவளை வாட்டியது.

எல்லாத் தேவைகளையும் நிறைவேற்ற பணம் முக்கியமானதுதான். அதற்காக மனைவியை நோயாளியாக்குவதா? என்ன செய்வதென யோசிக்கலானார் இர்பாதின் தந்தை. இடியப்ப வியாபாரத்தை நிறுத்திவிடலாம் என முடிவெடுத்து தன் மனைவியை அணுகி கலந்துரையாடினார். “இப்ப முந்தி மாதிரி ஒங்களுக்கும் ஏலா. போகப் போக நீங்களும் நோயாளியாகி விட்டீர்கள். அதனால இடியாப்பம் சுடுவதை நிறுத்தலாமென்று நான் நினைக்கிறேன். நீங்க என்ன செல்கிறீர்கள்” அவரது மனைவி சற்று அமைதியாகி நிதானமாக தன் கணவரிடம் கேட்டார் “நிப்பாட்டுக்கு என்ன செய்வது?. இப்போது பிள்ளைகளும் பெரிதாக வளர்ந்து விட்டார்கள். க்ளாஸ் பீஸுகளும் முந்திமாதிரி இல்ல. எப்பிடிக் கட்டுவது?. நீங்க என்ன யோசினை செய்தீர்கள்்?” என்று கேட்டாள். “எல்லாத்தையும் அல்லாஹ் பாத்துக் கொள்வான். அதுக்காக நீங்க இத சுட்டு கஷ்டப்பட ஏலுமா” கணவர் திரும்ப கேட்டார்.

அவரது மனைவி அப்போது அதற்கான பதிலை வழங்கவில்லை. “கொஞ்சம் யோசிப்போம். அதுக்குப் பெறகு முடிவு செய்வோம்.” என்று கூறிவிட்டு தனது அன்றாட வேலைகளில் ஈடுபட்டாள். பின் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு இறைவனிடம் கையேந்தி தன் இக்கட்டான சூழ்நிலையை சொல்லிச் சொல்லி அழுதழுது பிரார்த்தித்தாள். அதன் பின்னர் அவளது மன பாரம் சற்றே குறைந்ததாக உணர்ந்தாள். சற்று நேரம் கழித்து தனது கணவரை அழைத்து, “எனக்கொரு யோசின வந்திச்சு. எங்கட ஊட்டுக்கிட்டால ஒரு அக்காவொண்டு போற. அவவ பேசிக்கொள்வோமா. இடியாப்பம் சுடறத்துக்கு” என்று தன் யோசனையை முன்வைத்தாள். அதற்கு கணவனும் ஆம் என்பது போல் தலையசைத்து அனுமதி வழங்கினார். அடுத்த நாள் குறிப்பிட்ட அந்த பெண்மணியை வேலைக்கு அழைத்தாள் இர்பாதின் தாய். தகுந்த கூலியும் பேசி முடிக்கப்பட்டது. மாலை நேரத்தில் வந்து தேங்காய்களைத் துருவித் தர வேண்டும். அதிகாலையிலேயே வந்து இடியப்பத்தை சுட்டுத்தர வேண்டும் என பேசித் தீர்க்கப்பட்டது.

ஒரு சிறு பணத்தொகையை மீதப்படுத்தினார் இர்பாதின் தந்தை. சில வருடங்கள் கழித்து மீண்டும் தனது பழைய தொழிலைச் செய்ய ஆரம்பித்தார். இர்பாத் தற்போது உயர்தரப் பரீட்சையை எதிர்நோக்கியிருக்கின்ற வாலிபன். வியாபாரத்தை முன்னேற்ற என்னென்ன வழிவகைகளை மேற்கொள்ளலாம் என தந்தைக்கு யோசனை சொல்லக்கூடிய அளவுக்கு அவனது அறிவு முதிர்ச்சியடைந்திருந்தது. தன்னுடைய யோசனைகளையும் மகனின் யோசனைகளையும் ஒருமித்து நிறைவேற்றி தனது தொழிலில் மறுமலர்ச்சி கண்டார் இர்பாதின் தந்தை. இர்பாதின் யோசனையின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் மீதப்படுத்தி வந்த பணத்தில் வருடமொன்றுக்கு ஒரு தங்க ஆபரணங்களை வாங்கி சேமித்து வைக்கலானார் அவனது தந்தை.

நான்கு வருடங்களின் பின்னர் சேமித்த நகைகளில் சிலதை விற்று இர்பாதின் தந்தையும் தாயும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கமா நகர் சென்றனர். அவர்கள் மக்காவிலிருந்த ஒரு மாத காலமும் வியாபாரத்தையும், வீட்டு வேலைகளையும் இர்பாத் கவனித்துக் கொண்டான். இப்போது அக் குடும்பம் மீண்டும் பழைய நிலையை விட சிறப்பானதாக மாறியிருந்தது. தடுமாற்றத்தில் தடுக்கி விழாமல், தடம்புரண்டு விடாமல், தன்நம்பிக்கையோடும், இறை நம்பிக்கையோடும் செயற்பட்ட இர்பாதின் பெற்றோர்கள் தற்போது வயோதிபத்தை அடைந்திருந்தாலும் உள்ளத்தால் இளமையாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீனன்கோட்டை இஸ்பஹான் ஸாபிர் (ஊடக ஆய்வு அதிகாரி) அரசாங்க தகவல் திணைக்களம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division