பலஸ்தீன் இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த மறக்க முடியாத மிகவும் மகத்துவம் வாய்ந்த ஒரு புனித தேசமாகும். அருள் நிறைந்த மிகவும் கண்ணியத்துக்குரிய ‘மஸ்ஜிதுல் அக்ஸா’ பலஸ்தீனில் அமைந்துள்ளது. இது முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் (தொழுகைக்கு முன்னோக்கும் இடம்) மூன்றாவது புனிதஸ்தல
முமாகும். மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியைத் தொடர்ந்து இது முக்கியத்துவம் பெறுகிறது. இப்பள்ளிவாசலைத் தரிசித்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது நபிவழிமுறையாகும்.
முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்களும் இவைதான். அல் அக்ஸா பள்ளிவாசலில் ஒரு ரக்அத் தொழுவது 500 ரக்அத்கள் தொழும் நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடியதாகும்.
ஒரு தடவை இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்), ‘முஸ்லிம்கள் புனித பயணம் மூன்று பள்ளிவாசல்களுக்கே மேற்கொள்ள முடியும். அவை மஸ்ஜிதுல் ஹரம், எனது இந்தப் பள்ளிவாசல் (மஸ்ஜிதுன் நபவி) மஸ்ஜிதுல் அக்ஸா போன்றவையாகும். (ஆதாரம்- புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, அபூநாவூத்)
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது (மதீனாவுக்கு ஹிஜ்ரத்துக்கு முன்னர்) பைத்துல் முக்கதிஸை நோக்கி தொழுதார்கள். ஹிஜரத்தின் பின்னர் 16 மாதங்கள் பைத்துல் முக்கதிஸை நோக்கி தொழுதார்கள். பின்னர் கஃபாவை நோக்கி முகத்தை திருப்பினார்கள்.
பூமியில் முதலாவதாகத் தோன்றிய பள்ளிவாசல் எது? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர் ‘மஸ்ஜிதுல் ஹரம்’ என்றார்கள். அதன் பிறகு எது என்று நான் கேட்டபோது ‘அல் மஸ்ஜிதுல் அக்ஸா’ என்றார்கள்.
இதேவேளை அல் குர்ஆன், ‘இது அருள்புரியப்பட்ட பூமி’ என்று குறிப்பிடுகிறது. தனது அடியானை இரவில் மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து அருள் சூழப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்துச் சென்றவன் மிகவும் தூய்மையானவன்’ (அல்குர்ஆன்: இஸ்ரா – 01)
நாம் அவரையும் (இப்ராஹீம் (அலை) லூத் (அலை) அவர்களையும் அருள் செய்யப்பட்ட பூமியில் பாதுகாத்தோம். இது ஷாம் பூமியை குறிப்பதாக இமாம் இப்னு ஹஸீர் (ரஹ்) (அன்பியா: 7) குறிப்பிடுகிறார். இது பலஸ்தீனை குறித்துக் காட்டும் ஒரு வசனமாகும்.
மூஸா (அலை) தனது சமூகத்தர்களிடம் ‘எனது சமூகத்தவர்களே! உங்களுக்கு அல்லாஹ் கடமையாக்கிய புனித பூமியில் நுழையுங்கள்’ என்றார். (மாஇதா: 20) அந்த பூமி நபிமார்கள் முஃமின்கள் வாழ்ந்த பூமி என்பதனால்தான் புனித பூமி எனப்படுவதாக அறிஞர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றார்கள். இது டமஸ்கஸ், பலஸ்தீன், ஜோர்தானின் ஒரு பகுதியை குறிப்பதாக இமாம் கல்பி கருதுகிறார். இமாம் கதாதாவின் கருத்துப்படி இது முழு ஷாம் பிரதேசத்தையும் குறிக்கும்.
பலஸ்தீன் என்பது நபிமார்கள் பலர் வாழ்ந்த பூமியாகும். இப்றாஹீம் (அலை), இஸ்மாஈல் (அலை), இஸ்ஹாக், யஃகூப், யூஸுப், லூத், தாவூக், ஸுலைமான், ஸாலிஹ், ஸகரிய்யா, யஹ்யா, ஈஸா (ரழி) போன்றோர் இப்பூமியை தரிசித்துள்ளதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
முஹம்மத் (ஸல்) அவர்களும் அப்பூமியை தரிசித்துள்ளார்கள். பனூ இஸ்ரவேலர்களின் பல நபிமார்கள் அப்பூமியில் வாழ்ந்துள்ளார்கள். தம் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்துள்ளார்கள். ஒரு நபி மரணமடைந்தால் தொடர்ந்து இன்னொரு நபி வந்துள்ளார். யூஸூப் (அலை) அவர்களும் இவ்வாறான ஒருவர் என்று ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றனர். (ஆதாரம்- அஹ்மத்)
எனவே முஸ்லிம்கள் அல்குர்ஆனை ஓதும்போது இந்நிலத்துடனான தொடர்பை மனப்பூர்வமாக உணர்கின்றார்கள். நேசிக்கின்றார்கள். சத்தியத்துக்கும் அசத்தியத்துக்குமிடையிலான போராட்டம் கூர்மையடையும் இடமாக இதனை நோக்குகிறார்கள்.
பலஸ்தீனில் பல இடங்களில் நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கலீல் என்ற நகரில் உள்ள அல்ஹரம் அல் இப்ராஹிமி என்ற பள்ளியில் இப்றாஹீம் (அலை) அவர்கள் அடக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்.
ஸாலிஹ் (அலை) அவர்களுடன் தொடர்பான ஏழு இடங்கள் பலஸ்தீனில் காணப்படுகின்றன. ‘துல் கரம்’ நகரில் ‘இர்தாஹ்’ என்ற ஊர் அமைந்துள்ளது.
பலஸ்தீன் இஸ்ரா (இராப் பயணம்) இடம்பெற்ற பூமியாகும். மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து பலஸ்தீனின் குத்ஸ் நகரத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கான இராப்பயணம், இப்பூமியில்தான் இடம்பெற்றது. இங்கிருந்துதான் (விண்ணுலக பயணமான) மிஃராஜ் இடம்பெற்றது. இந்த மஸ்ஜிதையும், பலஸ்தீன் பூமியையும் இதன்மூலம் அல்லாஹ் கண்ணியப்படுத்தினான். இந்நிகழ்வின் மூலம் பைத்துல் முக்கதிஸை அல்லாஹ் வானம் பூமிக்கிடையிலான நுழைவாயிலாக ஆக்கினான்.
இப்புனித மஸ்ஜிதில் அல்லாஹ் அத்தினத்தில் நபிமார்களை ஒன்று திரட்டினான். அவர்களுக்கு இமாமாக நின்று நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். ஆகவே, உலகிலேயே பேசுபொருளாகியுள்ள பலஸ்தீன் விவகாரம் சம்பந்தமாக மிகவும் குறிப்பிடத்தக்க கருத்துக்களை சமகால இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர். ‘பலஸ்தீன் ஒவ்வொரு முஸ்லிமினதும் தாயகம் அது. இஸ்லாத்தின் பூமி மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கொண்டிருக்கும். அப்பூமிக்கு அல்லாஹ்வினால் அருள் பாலிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் பலஸ்தீன் விவகாரம் ஒவ்வொரு முஸ்லிமினதும் விவகாரமாக விளங்குகிறது. அங்குவாழும் மக்கள் எமது சகோதரர்களே. அவர்களுக்கு உதவுவதைத் தடுப்பது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான செயற்பாடாகும். பலஸ்தீன் என்பது முஸ்லிம் உம்மாவின் காயப்பட்ட ஒரு பகுதி. அக்காயம் உள்ளவரை முஸ்லிம் சமுதாயத்தினால் செயற்திறனுடன் இயங்க முடியாது. அதனால் பலஸ்தீன் (அல்அக்ஸாவை) மீட்பதற்காக உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையே!
ஏ.எம்.முஹம்மத் ஸஃப்வான், சீனன்கோட்டை, பேருவளை