Home » காசாவையும் இலங்கையையும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது நியாயமற்றது

காசாவையும் இலங்கையையும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது நியாயமற்றது

தூய்மையாக செயற்பட்டால் செப்டெம்பரில் உரிய பதில் -- ஜனாதிபதி

by Damith Pushpika
November 5, 2023 6:20 am 0 comment

காசா பகுதியின் மோதல் நிலைமையை ஒரு கோணத்திலும் ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயம் இல்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அடுத்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தொடருக்கு தூய்மையான கரங்களுடன் வந்தால் மட்டுமே இலங்கை பதிலளிக்குமெனத் தெரிவித்தார். அவ்வாறு இல்லையெனில், இலங்கை அதற்கு பதிலளிக்க வேண்டுமா எனவும், ஜனாதிபதி கேள்வியெழுப்பினார்.

வெலிமடை புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதியை நேற்று முன்தினம் (03) திறந்துவைத்து உரையாற்றிய போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்தை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி, உலக நாடுகள் அனைத்தும் அதற்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்ததாகவும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதேநேரம், பலஸ்தீன அரச இறைமை தொடர்பான நியதிகளுக்கான ஒத்துழைப்பையும் இலங்கை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். சர்வதேச சமூகத்தின் இந்தக் கண்டனமானது சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளின் கட்டமைப்புக்குள் பதிலடி கொடுக்கும் உரிமையை இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், அத்தகைய நியதிகள் உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இல்லாதிருக்கின்றமைக்கு கவலை தெரிவித்த ஜனாதிபதி, ஐ.நா. முகவர் நிறுவனங்களுக்கமைய காசாவில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைக்கும் பதில்கள் என்னவென்ற கேள்விக்குறியை தோற்றுவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கை மற்றும் காசா பகுதி தொடர்பாக இந்த நாடுகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறையில் எதற்காக வேறுபாடு காட்டப்படுவதாகவும் கேள்வியெழுப்பினார். எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும், ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சர்வதேச சட்டத்தின்படி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக எடுக்கப்படும் அடிப்படை சுதந்திரத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டதிட்டங்களுக்கு அமைவானதாக காணப்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய முரண்பாடுகள் தொடர்பாகவும் கேள்வியெழுப்பினார்.

அதேபோல், காசா எல்லையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் மீதான பாதிப்பு தொடர்பாக கவலை தெரிவித்த ஜனாதிபதி, உணவுப் பாதுகாப்பின்மை, எரிபொருளின்மை, அத்தியாவசிய மருந்துப்பொருளின்மை, உள்ளக வருமானம் குறைவடைதல் என்பன இலங்கை கடந்த வருடத்தில் முகங்கொடுத்த நெருக்கடியை விடவும் பாரதூரமானதெனவும் சுட்டிக்காட்டினார்.

மேற்குலக நாடுகள் இலங்கை மற்றும் காச எல்லை தொடர்பாக பின்பற்றும் நியதிகளின் வேறுபாடுகள் தொடர்பாக கேள்வியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தூய்மையான கரங்களுடன் உலகளாவிய தேவைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division