‘உள்ளக முரண்பாடுகளுக்கு முகம்கொடுக்காத ஒரு கட்சியை காண்பது முடியாத காரியம். இது ஜனநாயக அரசியலின் இயல்பாகும். அரசாங்கத்திற்குள்ளும் பல்வேறு கட்சிகளும் குழுக்களும் தமது இலட்சியங்களை வெளிப்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கத்தைச் சீர்குலைக்கும் அளவுக்கு உள்முரண்பாடுகள், மோதல்கள் கிடையாது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கு உள்ளேயும் நெருக்கடிகள் தொடர்கதையாக இருந்து வருகின்றன’ என்று கப்பல்துறை,
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
‘நாட்டில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தைத் தக்கவைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருளாதாரத்தையும், அபிருத்தியடைந்த தேசத்தையும் உருவாக்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து எமக்கு வழங்கிய பேட்டியிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கே: சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணைக்கான இணக்கப்பாடுகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் சீனாவின் அர்ப்பணிப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
பதில்: ஒரு தேசமாக, சவாலான காலகட்டத்தை சகித்துக் கொண்டிருக்கின்றோம். இப்போது நம்பிக்கை நிறைந்த ஒரு கட்டத்தில் நுழைகிறோம். எவ்வாறாயினும், இது நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தரப்போவதில்லையென்பதையும் நாம் ஏற்றுக் கொள்வது அவசியம். முக்கியமாக, அரசாங்கம் என்ற ரீதியில் பிரபலமானவற்றைப் பின்தொடர்வதை விட உறுதியான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். பெரும்பாலும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறோம். இந்த முன்னேற்றத்தைத் தக்கவைத்து, நமது மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருளாதாரத்தையும் தேசத்தையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும். இந்த முயற்சியில் எங்கள் அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது.
கே: எனினும், சர்வதேச நாணய நிதியத்தை ஒரு தீயசக்தியாக சித்தரிப்பதில் சில குழுக்கள் தொடர்ந்தும் செயற்படுகின்றன. இவற்றை நீங்கள்எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப பல கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, அவற்றுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்தத் திட்டங்கள் தேசத்தின் நல்வாழ்வுக்கு அவசியமானவை என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்த உண்மையை பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆளும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது இன்றியமையாதது. உலகப் பொருளாதாரம், உலகச் சந்தை மற்றும் சர்வதேச வங்கி அமைப்பு ஆகியவற்றில் நமது ஒருங்கிணைப்புக்கு இந்த விதிமுறைகள் முக்கியமானவை. கடந்த காலங்களில் நிலவிய இக்கட்டான சூழல் தற்போது தணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவே நாம் இப்போது அனுபவிக்கும் சாதகமான பின்னணியாகும். நமது உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், அந்நிய செலாவணி வருவாயை உயர்த்துதல், நமது டொலர் இருப்புக்களை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த நிலைமைகளை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தியிருக்கின்றோம். அவ்வாறு செய்வதன் மூலம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வாழ்க்கையை மேலும் நிர்வகிக்க முடியும்.
கே: சில தொழிற்சங்கங்கள் எச்சரித்திருக்கும் வேலைநிறுத்தங்களைத் தணிக்க அரசாங்கம் எவ்வாறு தயாராகிறது?
பதில்: பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை அரசியல் கருவியாக பயன்படுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இந்த இக்கட்டான நிலைக்குப் பொறுப்பேற்கவில்லை, மாறாக கடந்தகால நிர்வாகங்கள் மற்றும் ஜனரஞ்சகக் கொள்கைகளை அவர்கள் கடைப்பிடித்ததன் ஒட்டுமொத்த விளைவுதான் இன்றைய நிலைமை என்பதை நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
கே: தற்போது நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் யாவை?
பதில்: அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மட்டுமன்றி, சில இலாபம் ஈட்டும் நிறுவனங்களையும் மறுசீரமைக்கும் திட்டம் உள்ளது. இலாபகரமான நிறுவனங்களும் ஏன் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நடவடிக்கை அரசாங்கம் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படைக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும், பொதுநிர்வாகத்தை மேற்பார்வையிடுவதும், தேசத்தின் குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும். சமகால உலகில், முன்னேறிய நாடுகளில் மட்டுமன்றி, தீவிர இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் நாடுகளிலும் கூட, வணிக நடவடிக்கைகளில் தனியார் துறையினரை இணைத்துக் கொள்ளும் போக்குக் காணப்படுகிறது. இந்தத் தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டும்போது, அவற்றுக்கு வரி விதிக்கப்பட்டு அரசாங்கத்தின் வரி வருமானம் அதிகரிக்கப்படும்.
தற்போது இலாபம் ஈட்டும் வணிகங்கள் உட்பட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைத்து, அவற்றின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம், முழு தேசிய பொருளாதாரமும் வளர்ச்சியை அனுபவிக்க முடியும். இந்த விரிவாக்கம் ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அதிகரிப்புக்கு பங்களிக்கிறது, ஒரு நல்ல பொருளாதாரக் கொள்கையுடன் இணைந்துள்ளது.
கே: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை என்ன? இந்த நடவடிக்கையானது நிறுவனத்தை இலாபகரமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?
பதில்: இந்த முயற்சிக்கு அமைச்சர்களும் ஒத்துழைக்கிறார்கள் என்ற நம்பிக்கை பலரிடையே நிலவுகிறது. இருப்பினும், இது ஒரு விதிவிலக்கான வெளிப்படையான முன்முயற்சி என்பதை வலியுறுத்துவது முக்கியமானது. இந்தப் பரிவர்த்தனைக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்க வெளிநாட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு, தேவையான கேள்விப்பத்திர ஆவணங்களை உருவாக்குவதற்கு பொறுப்பாகும். முன்மொழிவுகளைப் பெற்றவுடன், இந்தக் குழு அவற்றை மதிப்பீடு செய்து அதன் பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைக்கும். இதற்கு அமைய முன்மொழிவுகளுக்கான அழைப்பிதழ்கள் குறித்த விளம்பரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்கள் 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க முடியும்.
கே: இந்த விமான சேவையின் விமானங்கள் தாமதம் அடைவது குறித்து அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலைமையை மாற்ற எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
பதில்: விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக திடீர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டமையால் இந்த நிலைமை ஏற்பட்டது. இது துரதிர்ஷ்டமானதாகும். விமானிகள் மற்றும் மற்றும் பொறியியலாளர்களின் பற்றாக்குறை நம் நாட்டுக்கு மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் சவாலாக உள்ளது. நாங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம், மேலும் நிலைமையை வெற்றிகரமாகத் தீர்த்துள்ளோம். ஒப்பீட்டளவில் சிறிய விமான நிறுவனமாக செயல்படுகிறோம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எங்கள் அதிகபட்ச விமானத்திறன் ஆரம்பத்தில் 26 ஆக நிர்ணயிக்கப்பட்டது, பின்னர் 21 விமானங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு மற்றும் டொலர் தட்டுப்பாடு போன்றவை விமான சேவையைப் பராமரிக்கும் திறனைத் தடுக்கின்றன. மேலும் கூடுதல் விமானங்களைத் தக்கவைக்க எங்களுக்கு நிதி ஆதாரங்கள் இல்லை. எங்கள் அணுகுமுறை விமானத்தை குத்தகைக்கு எடுப்பது, ஆனால் பொருத்தமான விநியோகஸ்தர்களைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் சவால்களை எதிர்கொண்டோம். மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் ஒரு பெரிய விமான நிறுவனத்துடன் ஒருங்கிணைத்து, ஒரு வலுவான கூட்டாண்மையை உருவாக்கி இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியும்.
கே: அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தங்கள் கருத்து என்ன?
பதில்: எனது பார்வையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்துள்ளார். அவர் ஒரு உறுப்பினரால் அமைச்சரவையின் அளவைக் குறைத்துள்ளார். சில அமைச்சுக்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரிவு முறையான முறையில் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்பு அமைச்சரவை விரிவாக்கம் அல்ல, இந்த அமைச்சரவை மாற்றம் அந்தக் கவலையை நிவர்த்தி செய்கிறது. இந்த நடவடிக்கைகளால் நாட்டின் குடிமக்கள் திருப்தி அடைகிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
கே: அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுவோர் உள்ளனர். நீங்கள் இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் நெருக்கடிகள் தொடர்கதையாக இருந்து வருகின்றன. உள்ளக எதிர்ப்புக்களுக்கு முகம்கொடுக்காத ஒரு கட்சியை அடையாளம் காண்பது சாத்தியமற்றது. இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயக அரசியலின் இயல்பாகும். அரசாங்கத்திற்குள் உள்ள பல்வேறு கட்சிகளும் குழுக்களும் தமது இலட்சியங்களை வெளிப்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கத்தை சீர்குலைக்கும் அளவிற்கு மோதல்கள் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கே: இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அவர்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்குமா?
பதில்: பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதே மக்களின் விருப்பம், அந்த இலக்கை அடைய வடிவமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும். இருப்பினும், சிறிய சலுகைகளை கோருபவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது சவாலான கருத்தாகும்.